ஞானகுரு தரிசனம்
திருப்பரங்குன்றம் மலையின் மீது, இலக்கின்றி எதையோ வெறித்துக்கொண்டு இருந்த இளைஞனுக்கு அருகில் அமர்ந்தார் ஞானகுரு. அருகே வேறு ஒருவர் அமர்வதை விரும்பாத இளைஞன் சட்டென்று எழுந்து நகர முயல, அவன் கையை அன்போடு அழுத்திப் பிடித்து, ‘‘என்னப்பா ஆச்சு? ஏன் இப்படி பிரமை பிடிச்ச மாதிரி இருக்கிறாய்?’’ என்று மென்மையாகக் கேட்டார்.
சற்று நேரம் அமைதியாக இருந்தவன் வாயில் இருந்து வார்த்தைகள் வருவதற்குப் பதில், கண்களில் இருந்து கண்ணீர் வெடித்துக் கிளம்பியது. சின்ன விசும்பல்களுக்கு இடையே, ‘‘வேலை போயிடுச்சு…’’ என்றான். மேற்கொண்டு அவனே பேசட்டும் என்பதுபோல் முதுகை தடவிக்கொடுத்தார் ஞானகுரு. தன் சோகக் கதையைக் கொட்டினான்.
ராமநாதபுரம் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஏழை குடும்பத்தில் பிறந்தவனாம் கணேசன். பதினோராம் வகுப்பு பரிட்சை எழுத இருந்த சமயத்தில் அம்மா நோய் தாக்கி இறந்துபோயிருக்கிறார். குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவனது தந்தையால், வைத்தியத்துக்கு வாங்கிய கடனை தர முடியவில்லை. எனவே, கடன்காரர்களுக்குப் பயந்து, இரவோடு இரவாக ஊரைவிட்டு ஓடி விட்டாராம். இவனது தங்கையை மட்டும் சித்தி வளர்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, இவனை கைகழுவியிருக்கிறார்கள். ஏதாவது வேலை செய்து தங்கையின் செலவுக்கும், அப்பாவின் கடனுக்கும் பணம் அனுப்புகிறேன் என்று மதுரை வந்திருக்கிறான்.
வழியற்றவர்களுக்கு ஆபத்பாந்தவனாக கைகொடுக்கும் ஹோட்டல் வேலையில் முதலில் நுழைந்திருக்கிறான். ஒரு வருடத்திற்கும் மேலாக வேலை பார்த்தும் சரியாக சம்பளம் தராமல் இழுத்தடித்திருக்கிறார்கள். அதனால் அங்கிருந்து வெளியேறி ஒரு மெக்கானிக் கடையில் வேலை பார்த்திருக்கிறான். இரவும் பகலும் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கிய முரட்டு எஜமானின் அடி தாங்காமல் அங்கிருந்தும் விலகியிருக்கிறான். இதற்கடுத்து திருப்பரங்குன்றத்தில் இருக்கும் ஒரு லாட்ஜில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். அங்கு நடக்கும் விபசாரத்திற்கு நிர்வாகம் உடந்தையாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறான். வலுக்கட்டாயமாக இழுத்துவரப்பட்ட ஒரு பெண்ணிற்கு ஆதரவாக பேசியதும், இத்தனை நாள் வேலை பார்த்த சம்பளத்தைக்கூட கொடுக்காமல் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்களாம். அவனுக்கு என சொந்தமாக இருந்த இரண்டு சட்டையைக்கூட எடுக்க அனுமதிக்கவில்லையாம்.
’’நான் ராசியில்லாதவன் சாமி. நான் பிறந்ததுமே நல்லா வசதியா இருந்த தாத்தாவுக்கு தொழில்ல நஷ்டமாயிருச்சு. அதனால எல்லோருமே என்னைய தரித்திரம்னு சொல்வாங்க. நான் எதுக்குமே லாயக்கில்லை, வாழ்க்கையை ஜெயிச்சதில்லை, ஜெயிக்கப் போவதுமில்லை. நான் எங்கே போனாலும், என் தரித்திரம் எனக்கு முன்கூட்டியே போயிடுது…’’ என்று அழுதான்.
அவன் முழுவதுமாக அழுது முடியும் வரை காத்திருந்த ஞானகுரு பேசத் தொடங்கினார்.
’’கணேசா… நீ எதிலேயும் ஜெயித்ததில்லை என்று சொல்லாதே… நீ பிறந்ததே ஒரு மாபெரும் போராட்டத்தின் வெற்றிதான். நீ கருவாக உருவான நேரத்தில் உன்னுடன் போட்டியிட்ட கோடானுகோடி எண்ணிக்கையிலான உயிர் அணுக்களை தோல்வியடையச் செய்துதான் நீ ஜனித்திருக்கிறாய். இந்த உலகில் பிறந்த எல்லோருமே உன் வயது வரை வளர்ந்து, வாழ்ந்துவிடுவது இல்லை. அந்த வகையிலும் நீ ஒரு வெற்றியாளன். நீ இத்தனை வருடங்கள் நல்ல உடல்நலத்தோடு வாழ்ந்து வருவதும் சாதனைதான். இதற்குமேலும் ஏன் உன்னையே நத்தையைப் போன்று சுருக்கிக் கொள்கிறாய்…’’
ஞானகுருவை நிமிர்ந்து பார்த்த கணேசன், ‘‘நீங்க பேசுறதைக் கேட்க நல்லாத்தான் சாமி இருக்கு, ஆனா வேலையில்லாம படுற கஷ்டத்தை அனுபவிச்சுப் பார்த்தாத்தான் தெரியும்…’’ என்று லோகாதாயம் பேசினான்.
’’நீ மதுரைக்கு எதுவுமே தெரியாமல் வந்தாய். அந்த நிலைக்கே ஒரு வேலை உனக்காக காத்திருந்தது. இப்பொழுது நீ ஹோட்டல் வேலையையும், மெக்கானிக் தொழிலையும் கற்று வைத்திருக்கிறாய் வேலை கிடைக்காமலா போய்விடும்…’’ என்று ஞானகுரு கூறிய நேரத்தில், ஏற்கெனவே அறிமுகமான மகேந்திரன் சில ஆட்களுடன் வந்து சேர்ந்தார்.
’’சாமி… இவங்க எல்லோரும் என்கூட மலைக்குக்கீழே இருக்கிறவங்க, உங்களை தரிசிக்க ஆசைப்படுறாங்க…’’ என்று மகேந்திரன் சொல்லி முடிக்கும் முன்னரே…
’’சாமி… உங்களுக்கு மாய, மந்திரமெல்லாம் தெரியுமாமே…’’ என்று வந்தவர்களில் ஒருவன் ஆர்வமுடன் கேட்டான். ஞானகுரு மகேந்திரனைப் பார்க்க, அசட்டுத்தனமாக முகத்தை வைத்தபடி நின்றுகொண்டிருந்தார்.
’’யோகசித்தி வாய்ப்பது மிக அபூர்வம், அதனை விளையாட்டு போன்று கேட்பதும், வேடிக்கை பார்க்க நினைப்பதும் சாபக்கேடான குற்றம்…’’ என்று குரலில் கொஞ்சம் காரம் கூட்டினார் ஞானகுரு.
வந்தவர்கள் ஏதோ தவறுதலாகக் கேட்டதாக நினைத்து அமைதியடைய, ஒருவன் மட்டும், ‘‘சாமி… வேற மதத்துக்காரங்க வந்து நம்ம மதத்தைப் பத்தி தப்புத்தப்பா பேசுறாங்க. அதைக்கேட்டு கொஞ்சபேர் ஏமாந்துபோய் மதம் மாறிப் போயிடுறாங்க… இதையெல்லாம் தடுக்க ஏதாவது செய்யணும்…’’ என்றான் ஒருவன்.
அவனை கூர்ந்து பார்த்து, ‘‘வேறு மதத்தில் இருந்து உன் மதத்துக்கு மாறி வந்தவனை என்ன சொல்வாய்..?’’ என்று கேட்டார்.
உடனே கொஞ்சமும் யோசிக்காமல், ‘‘அவனுக்கு புத்தி வந்திடுச்சு, இப்பவாது திருந்தி வந்துட்டானேன்னு சந்தோஷமா ஏத்துக்க வேண்டியதுதான்…’’ என்றான்.
’’பிறக்கும்போது அனைவரும் பரிசுத்தமான குழந்தைகள்தான். பெறோர்கள்தான் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் என்று வளர்க்கிறார்கள். மாற்று மதங்களில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமலே, தன்னுடைய மதம் மட்டுமே உயர்ந்தது என்ற சிந்தனையுடன் வளர்ந்து விடுகிறார்கள். எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. ஆனால், மதத்தின் பேரால்தான் இந்த உலகில் அதிகமான போர் நடந்து அதிகமான மனிதர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லா மத கோட்பாடுகளும் தெரிய வேண்டும், அதில் பிடித்ததை தேர்வு செய்வதும், விலகி நிற்பதும் அவன் உரிமை” என்றார்.
’’அதெல்லாம் சரிப்படாது சாமி…’’ என்று ஒருவன் உரக்கப் பேச, ’’ஏன்… உன் மதத்தின் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?’’ என்று திரும்பிக் கேட்டதும் அடங்கிப் போனான்.
‘’உன் மதத்தில் அவனுக்கு ஏதோ ஒரு குறை, சிக்கல் இருப்பதால், வேறு ஒரு மதத்துக்குப் போகிறான். பெரும்பாலான இந்துக்கள் மதம் மாறுவதற்கு காரணம், ஜாதி கொடுமைதான். ஒரு மனிதனை கோயிலுக்குள் வரவிடாமல் தடுப்பது கடவுளுக்குப் பிடித்தமான செயலாக இருக்குமா..? அவனுக்கு உன் கடவுள் மீது கோபம் இல்லை, மதத்தின் மீதுதான் கோபம். எல்லா மதத்திற்கும் ஒரே கடவுள்தான். எல்லா மதங்களும் போய் சேரும் இடம் ஒன்றேதான். அதனால் உன் மதம் பற்றிய கவலையை விடு. அதை உன் கடவுள் பார்த்துக்கொள்வார்’’ என்றதும் ஒருவன் கேள்வியை திசை திருப்பினான்.
‘’சாமி.. நீங்க சபரிமலைக்குப் போய் ஐயப்பனை தரிசனம் செஞ்சிருக்கீங்களா..?” என்று கேட்டான்.
‘’பெண்ணை வரக்கூடாது என்று சொல்லும் கடவுள், கோயில், ஆகமம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை” என்று அழுத்திச் சொன்னார் ஞானகுரு.
இந்த பதிலுக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று புரியாமல் தவிக்க ஒருவன், ‘‘சாமி… இந்த உலகத்தில நல்லவங்க கஷ்டப்படுறாங்க, கெட்டவங்க வசதியா இருக்காங்க, இது ஏன் சாமி?’’ என்று ஆர்வமாகக் கேட்டான்.
’’நீ நல்லவனா.. கெட்டவனா?’’ என்று அவனை உற்றுப்பார்த்தார் ஞானகுரு. அந்தக் கேள்வியை எதிர்பார்க்காதவன் கொஞ்சம் யோசித்து, ‘‘பெரிய தப்பு எதுவும் செஞ்சது இல்ல சாமி, அதுபோல ரொம்ப நல்லதும் பண்ணியதில்லே…’’ என்று குழம்பினான்.
’’ஒருவனை நல்லவன் அல்லது கெட்டவன் என்று முடிவு செய்வது காலம் மட்டுமே. ஒரு திருடன் கத்தியைக் காட்டி மிரட்டும்பொழுது, யாருமற்ற தெருவில் அனாதையாக பணம் கிடைக்கும்போது, முகம் பார்க்கும் கண்ணாடிகள் நிறைந்த அறையில் தனியாக இருக்கும்போது ஒவ்வொரு மனிதரும் எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதை அவர்களே முன்கூட்டி அறியமாட்டார்கள். வெளிஉலகத்திற்கு அமைதியாக இருப்பவன் வீட்டில் மனைவி, குழந்தைகளை அடக்கியாளும் கொடூரனாக இருக்கலாம். எல்லோரிடமும் வம்பு வளர்த்துக் கொண்டிருப்பவன், தனிமைக்குப் பயந்து நடுங்குபவனாக இருக்கலாம். உலகில் வாழும் எல்லா மனிதர்களிடமும் மிருக குணம் அடிமனதில் உலவிக் கொண்டுதான் இருக்கும். சாட்சிக்கு யாருமில்லாத சந்தர்ப்பத்தை எந்த மனிதனும் தவறவிடுவதில்லை…’’
’’அப்படின்னா யாருமே நல்லவங்க இல்லையா சாமி…?’’
’’தவறு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தும், அதைச் செய்ய துணிவில்லாதவர்களை நல்லவர்கள் என்று சொல்வது சரியில்லை என்கிறேன் அவ்வளவுதான். அதனால் முன்னேறியவனை கெட்டவன் என்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவனை நல்லவன் என்ற பார்வையாலும் பார்க்காதே.
உன்னுடைய பார்வையில் மிகவும் நல்லவனாகத் தெரியும் ஒருவன், இன்னொருவன் பார்வையில் கெட்டவனாகத் தெரியலாம். பணக்காரன், வசதியானவன், இறைவனால் ஆசிர்வதிக்கப் பட்டவன் என்று நீ நினைக்கும் ஒருவன், சேமித்திருக்கும் பணம் போதவில்லையே என்று பிச்சைக்காரனாக புலம்பிக் கொண்டிருக்கலாம். அதனால் கஷ்டப்படுவதற்கும் சுகமாக இருப்பதற்கும் நல்லவனாக இருப்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. யாருகும் பிடிபடாத உலகநீதியை உரசிப் பார்க்காதே…’’ என்று எழுவதற்கு முயற்சித்தார் ஞானகுரு.
’’சாமி… இன்னும் ஒரே ஒரு கேள்வி…’’ என்றவன் அனுமதியை எதிர்பாராமல், ’’கொரொனா, சுனாமி… பூகம்பம், புயல், இடிமழைன்னு உலகத்திலே நடக்கிறதைப் பார்த்தா பயமா இருக்கு சாமி, உலகம் சீக்கிரம் அழிஞ்சிடும்னு சொல்றாங்களே உண்மையா?’’ என்று கேட்டார்.
’’இந்த பூமி உருவான காலங்களில் இருந்து அன்றாடம் நடந்துவரும் மிகச்சாதாரண நிகழ்ச்சிகள்தான் இவை. உலகம் உங்கள் கைக்குள் சுருங்கிப் போனதால், இதுபோன்ற நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் கண்டு பயப்படுகிறீர்கள். எப்படியென்றாலும் அழிவு என்பது கண்டிப்பாக உண்டு, அது மனிதனுக்குத்தானே தவிர இந்த உலகத்திற்கு இல்லை…’’ என்றபடி எழுந்தார்.
மகேந்திரனை அருகே அழைத்து, ‘‘இவன் கணேசன், சின்ன வயசிலேயே வாழ்க்கை இவனுக்கு அக்னி பரிட்சை நடத்துகிறது. இவனுக்கு சிறிய அளவில் இட்லிக் கடை வைப்பதற்கு உதவி செய், அதற்குப் பின் பிழைக்கும் வழியை அவனே தேடிக்கொள்வான்” என்று உத்தரவு போட்டுவிட்டு நடை போட்டார் ஞானகுரு.