வேலை வாங்குவதே நிபுணத்துவம்
வேலை செய்யும் அனைவரும் ஒன்றுபட்டு நல்ல எண்ணத்துடனும் திறமையாகவும் உழைத்தால் மட்டுமே ஒரு நிறுவனம் முன்னேற்றம் அடையும். நிறுவனம் முன்னேறும்போது அங்கு வேலை பார்க்கும் அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்கும் என்ற நீண்டகால கண்ணோட்டம் பலருக்கும் தெரிவதில்லை. இந்த விஷயம் தெரிந்தாலும் பலர் இதைப்பற்றி கவலைப்பட போவதில்லை. எத்தனை லாபம் வந்தாலும் நமக்கு சம்பள உயர்வு என்று துளியூண்டு கிள்ளித் தரப் போகிறார்கள், அதற்காக மாடு மாதிரி உழைக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்புவார்கள்.
அனைத்து நிறுவனங்களிலும் மூன்று வகையான தொழிலாளர்கள் இருப்பார்கள். தங்கள் உழைப்பை கொடுத்துவிட்டு அதற்கு ஏற்ற பலன் கிடைக்கிறதா என்று கணக்கு போட்டு வேலை பார்ப்பவர்கள் ஒரு வகை. குறிப்பிட்ட பலன் கிடைக்கவில்லை என்றால் வேலை பார்ப்பதை குறைத்துக்கொள்வார்கள்.
இன்னொரு வகையான ஆட்கள் இருப்பார்கள். இவர்கள் முடிந்தவரை வேலை செய்வதை தவிர்க்கப் பார்ப்பார்கள். தன்னுடைய வேலையை வேறு எவராவது ஒருவரிடம் தள்ளிவிட்டு, பலனை மட்டும் தட்டிக்கொள்வார்கள். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் பேச்சுதான் இவர்கள் செய்யும் பெரிய வேலையாக இருக்கும். எந்த நிறுவனத்திலும் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்கமாட்டார்கள். உயர் அதிகாரிகளிடம் சென்று சாதகமாக எதையாவது பேசி, பிறர் செய்யும் வேலைகளை எல்லாம் தாங்கள் செய்ததாக சொல்லிக்கொள்வார்கள்.
மூன்றாவது வகையான மனிதர்கள் உண்டு. இவர்கள் உழைப்பை நேசிப்பவர்கள். உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கிறதா என்று இவர்கள் எப்போதும் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் இவர்கள் வேலையை ரசித்து, ருசித்து ஒரு தவம் போன்று செய்வார்கள். பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இவர்கள் பார்க்கும் வேலையின் திறன் குறையவே செய்யாது.
எவருடமும் சென்று நான் நிறைய வேலை பார்க்கிறேன் என்று பெருமை பாராட்ட மாட்டார்கள். தங்கள் கடமை வேலை செய்வது, நிறுவனத்தின் வெற்றிக்கு பாடுபடுவது என்பது மட்டும்தான் இவர்களுக்குத் தெரியும். இப்படிப்பட்ட நபர்களுக்கு உடனடியாக பெரிய பதவி, முன்னேற்றம் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் இவர்கள் உழைப்பு நிச்சயம் அங்கீகரிக்கப்படும். சரியான நேரத்தில் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பு இவர்கள் கையில் கொடுக்கப்படும்.
இந்த மூன்று வகை மனிதர்களில் மூன்றாவது வகையினர் அதிக எண்ணிக்கையில் இருந்தால், அந்த நிறுவனம் மிகப்பெரும் வெற்றி அடையும். இரண்டாம் வகை நபர்கள் அதிகமிருந்தால் நிறுவனம் நஷ்டம் அடையும். முதல் வகை மனிதர்கள் அதிகம் இருந்தால் அந்த நிறுவனம் போராடிக்கொண்டே இருக்கும்.