- மனம் எனும் மாயக்காரன்
’’மூளை சொல்வதைக் கேட்பதா அல்லது இதயம் சொல்வதைக் கேட்பதா என்பது குழப்பாக இருக்கிறது என்று ஒரு கேள்வியை எழுப்பினான் மகேந்திரன்.
‘’புரியவில்லையே..?” ஞானகுரு குறும்பாகக் கேட்டார்.
‘’அதாவது எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் இதயம் ஒன்று சொல்கிறது, மூளை வேறு ஒன்றை சொல்கிறது. நான் எதை கேட்பது என்று புரியவே இல்லை…’’
‘’சரி, அதேபோன்று ஏதேனும் ஒரு முடிவு எடுக்கும்போது உன்னுடைய நுரையீரல் என்ன சொல்கிறது, உன் சிறுநீரகம் என்ன சொல்கிறது என்பதையும் கேட்டுப் பாரேன்…’’
‘’கிண்டல் செய்யாதீர்கள் சாமி, இதயம்தானே மனதின் இருப்பிடம். அதனால்தானே நெஞ்சைத் தொட்டு சொல்கிறோம்..’’
சிரித்தபடி தொடர்ந்தார் ஞானகுரு. ‘’மகேந்திரா… மனித உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் அதனதன் பணிகளை மட்டுமே செய்கின்றன. இதயத்தின் வேலை அசுத்த ரத்தத்தை சுத்திகரித்து மீண்டும் உடலுக்குச் செலுத்துவதுதான். அதைத் தவிர வேறு எதுவும் அதற்குத் தெரியாது. அதனால் இதயம் என்பது மனம் அல்ல அது ஓர் உறுப்பு’’
‘’என்ன சாமி இப்படி சொல்றீங்க… மனம் என்றதுமே இயல்பாக கை நெஞ்சுக்குத்தானே போகிறது..?”
‘’சரிதான்.. திடீரென உன் இதயம் பழுதாகிவிட்டது என்று செயற்கை இதயம் வைப்பதாக நினைத்துக்கொள். உன்னிடம் இதயம் இல்லை என்பதால், அதன்பிறகு நீ சிந்திக்க மாட்டாயா..? இதயவலி ஏற்படும்போது உன்னுடைய சிந்தனைகளும் நின்றுவிடுமா? அதனால்தான் சொல்கிறேன். இதயத்துக்கு எதுவுமே தெரியாது.
உன்னை ஏதாவது ஒரு முடிவு எடுக்கச் சொல்லி தூண்டுவதும், அந்த முடிவு தவறாக அமைவதற்கு வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கை செய்து தடுப்பதும் உன்னுடைய எண்ணங்கள்தான். அந்த எண்ணங்களின் தொகுப்புதான் மனம்…’’
’’அப்படியென்றால் மனம் எங்கேதான் இருக்கிறது…’’ அடுத்த கேள்வியை எழுப்பினான் மகேந்திரன்.
‘’உன் இதயத்தில் மனம் இல்லை என்பதையே உன்னால் தாங்கமுடியவில்லை. இன்று நான் சொன்னதை சிந்தித்துப் பார்த்து மனம் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து நாளை வந்து சொல்’’ என்று அனுப்பிவைத்தார் ஞானகுரு.