எந்த காய் என்ன நோய் தீர்க்கும்..?

Image

ஆச்சர்ய தகவல்கள்

எல்லா காய்களிலும் மனித உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துக்கள் நிரம்பியிருப்பது எல்லோருக்கும் தெரியும். அதேநேரம், ஒவ்வொரு காயிலும் குறிப்பிட்ட நோய் தீர்க்கும் தன்மை உண்டு. அவற்றை அறிந்துகொள்வோம்.

* கத்தரிக்காய், பீட் ரூட், ஊதா முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் லங் கேன்சர் வராது. பீன்ஸ், பாகற்காய், கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் கேன்ஸர் நோய் அண்டாது.

* ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து வந்தால் கேன்சர் வராமல் தடுக்கலாம்.

* நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், பருப்பு வகைகள் உண்டு வந்தால், நம் உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக வெளியேறும்.

* கத்தரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நரம்புகளுக்கு நல்லது, சளி இருமலுக்கு நல்லது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு நல்லது. தோல் வியாதி உள்ளவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது.

* முருங்கக்காயில் இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது. நரம்புகளுக்கு நல்லது. முருங்கக்காயை குழந்தைகள் உண்டால் வயிற்றில் கிருமிகள் அண்டாது. பெரியவர்களுக்கு வாயுக்கோளாறை ஏற்படுத்தும்.

* பாதி கரையும் நார்ச்த்து, பாதி கரையாத நார்ச்சத்து வெண்டைக்காயில் உள்ளது. கரையும் நார்ச்சத்து கொலெஸ்டராலை குறைக்கும். கரையாத நார்ச்சத்து குடலை பாதுகாத்து, குடல் புற்று நோய் வராமல் காக்கும்.

* மாங்காயில் வைட்டமின் ஏ நார்ச்சத்துக்கள் நிறைய உள்ளன. தோல் நோய் உள்ளவர்கள் மாங்காயை தவிர்ப்பது நல்லது. மாங்காயை நிறைய உண்டால் உடலில் சூட்டை உண்டாக்கும். மாங்காய்க்கு பசியைத் தூண்டும் தன்மை உள்ளது.

* அவரைக்காயில் நிறைய புரதம் உள்ளது. இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலச்சிக்கலை நீக்கும்.

* அத்திக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகள் உள்ளன. அத்திக்காயை உணவில் சேர்த்து வந்தால் மூல நோய் குணமாகும்.

* பீர்க்கங்காயில் நீர்ச்சத்து நிறைய உள்ளது. இது உடல் உஷ்ணத்தை தணிக்கும். இரவு உணவில் பீர்க்கங்காயை தவிர்ப்பது நல்லது.

* கோவைக்காயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. வாய் மற்றும் நாக்கிலுள்ள புண்களை குணப்படுத்தும்.

* புடலங்காயில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து மற்றும் நிறைய புரதம் உள்ளது. தலைவலி, சளி மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் புடலங்காயை தவிர்ப்பது நல்லது.

* பாகற்காயில் பாலிபெப்டைட் என்ற இன்சுலின் உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. பாகற்காயை நிறைய உண்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும். பாகற்காய் வயிற்றிலுள்ள கிருமிகளை அழிக்கும். மஞ்சள் காமாலைக்கு பாகற்காய் ஜூஸ் சாப்பிடலாம்.

* சுரைக்காயில் நீர் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவைகள் உள்ளன. உடல் உஷ்ணத்தை தணிக்கும். ஆண்மை சக்தி கூடும். இதயத்திற்கு நல்லது.

* பூசணிக்காயில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. நரம்பு மற்றும் வயிற்றுப்புண்களுக்கு நல்லது.

* கொத்தவரைக்காயில் நார்ச்சத்து உள்ளது. வாயுத் தொல்லையை உண்டாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

* வாழைக்காயில் வைட்டமின் இ மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது. மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லையை உண்டாக்கும்.

* வெள்ளரிக்காயில் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. நன்கு சிறுநீர் கழியும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

* சுண்டைக்காயில் வைட்டமின் சி உள்ளது. உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் கிருமிகள் வராது.

* பலாக்காயில் சுண்ணாம்புச் சத்து உள்ளது. அஜீரண கோளாறு உள்ளவர்கள் பலாக்காயை தவிர்க்கலாம். செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும்.

* களாக்காயில் வைட்டமின் ஏ வைட்டமின் சி உள்ளது. நல்ல பசி உண்டாகும். கண் பார்வை கூடும்.

* நெல்லிக்காயில் கால்சியம், செல்லுலேவுஸ், வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட் ஆகிய சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகள் மற்றும் பிளட் பிரஷர் உள்ளவர்கள் நெல்லிக்காயை உண்ணலாம். நெல்லிக்காயை உண்டால் இளமை கூடும். தலை முடி நன்கு வளரும்.

* காரட்டில் வைட்டமின் ஏ, தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், மற்றும் மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் உள்ளன. காரட் கண் பார்வைக்கு நல்லது.

* பீன்ஸில் வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. கண் பார்வை தெளிவு பெறும், வாயு, பித்தம் நீங்கும். சருமம் பழபழப்பாகும்.

* பீட்ரூட்டில் குளூகோஸ் உள்ளது. பீட்ரூட் உண்டால் இரத்த சோகை நீங்கும்.

* வெள்ளை முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாஷியம், கால்ஷியம், இரும்புச்சத்து மற்றும் சத்து உள்ளது. சிறுநீரக கல் அடைப்பு குணமாகும். உடலுக்கு குளுர்ச்சியைத் தரும்.

* சிவப்பு முள்ளங்கியில் வைட்டமின் சி, கால்ஷியம், கந்தக சத்துக்கள் உள்ளன. சிறுநீரை வெளியேற்றும். அசிடிட்டி உள்ளவர்கள் சிவப்பு முள்ளங்கியை உண்டால் குணமாகும்.

* காலிஃபிளவரில் இரும்புச்சத்து, சோடியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், வைட்டமின் ஏ, வைட்டமின் இ, மெக்னீஷியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. மலச்சிக்கல் வராமல் இருக்கும், உடல் மெலியும்.

* முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ, சோடியம், இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. தாது பலம் கூடும், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

* நார்த்தங்காயில் சிட்ரஸ் ஆசிட் உள்ளது. வயிற்றுப்புண், அல்சர் உள்ளவர்கள் நார்த்தங்காயை தவிர்க்க வேண்டும். வாயுத் தொல்லையை நீக்கும்.

Leave a Comment