ஞானகுரு சிந்தனை
ஞானகுருவுடன் கார்ப்பரேட் சாமியார் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, ‘‘மனம், ஆத்மா, முற்பிறவி, சொர்க்கம், நரகம் போன்றவற்றில் உங்கள் கருத்துகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், தயவு செய்து இதைப் பற்றி மட்டும் எனக்கு விளக்குங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.
‘‘பூமிக்குக் கீழே இருக்கும் ஏழு உலகங்களான அதலம், விதாலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் பற்றி எதுவும் தெரிய வேண்டாமா?’’ என்று ஞானகுரு கேட்டதும், குருஜி நிமிர்ந்து அமர்ந்தார்.
‘‘அப்படியெல்லாம் உலகங்கள் உண்மையில் இருக்கின்றனவா என்ன..? அப்படியே இருந்தாலும் மக்களுக்கு தேவையில்லையே…?’’ என்றார்.
‘‘ஆஹா அற்புதமாகச் சொன்னீர்கள்… மக்களுக்கு அது போலவே மனம், ஆத்மா, முற்பிறவி சொர்க்கம், நரகம் போன்ற சிந்தனைகளும் கொஞ்சமும் தேவையில்லை’’ என்றார் ஞானகுரு.
‘‘அதெப்படி?’’
‘‘மனம் என்ற ஒன்றே இல்லை எனும்போது, அதைப் பற்றி பேசுவதில் என்ன இருக்கிறது?’’
‘‘தெரிந்தேதான் இப்படிப் பேசுகிறீர்களா? இந்த உடல் என்பது கண்ணுக்குத் தெரியும் பொருள், கண்ணுக்குத் தெரியாத உடலே நம் மனம். நாம் சாப்பிடும் உணவு மூன்று விதமாக ஜீரணமாவதாக உபநிடதங்கள் கூறுகின்றன. மிகவும் கனமான பகுதி மலமாக மாறி வெளியேறி விடுகிறது. நடுப்பகுதி உடலைச் சேர்ந்து மாமிசமாகிறது. மிகவும் சூட்சுமமான பகுதி மனமாக உருமாறுகிறது. அப்படிப்பட்ட மனதை இல்லை என்கிறீர்களே…?’’ குருஜி ஆவேசமானார்.
புன்னகையுடன் தொடர்ந்த ஞானகுரு, ‘‘ஒருவரது அனுபவங்கள், எண்ணங்கள், உணர்வுகள் போன்றவற்றின் தொகுப்பால் கிடைக்கும் அறிவையே மனம் என்கிறோம். மனம் என்பது ஒரு மாயத் தோற்றம். இன்னும் சொல்லப் போனால் அது ஒரு கனவு, பிம்பம் அவ்வளவுதான். அதனால்தான் யாராவது அமைதியான மனம் வேண்டும் என்று கேட்டாலே சிரிப்புத்தான் எனக்கு வரும். மனம் என்பது நிஜமல்ல என்பதால், அமைதியான மனம் என்பது சாத்தியமல்ல. மனம் என்பதும் நீங்கள் அல்ல. இன்னும் ஆழமாகச் சொல்லப் போனால் உண்மை என்ற ஒன்றேயில்லை’’ என்றார்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தவித்த குருஜியிடம், ‘‘உங்கள் சீடர்களுக்கு ஆத்மாவைப் பற்றி என்ன போதிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார் ஞானகுரு.
‘‘பஞ்சபூதங்களின் கூட்டணியால் உருவான மனித உடலையும், மனதையும் இயக்குவதுதான் ஆத்மா. ஆத்மா பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இல்லாமல் இருந்து உண்டாவதில்லை, உண்டாகிப் பின்பு இல்லாமல் போவதில்லை. மரணம் என்பது உடலுக்குத்தானே தவிர ஆத்மாவுக்கு அல்ல.’’ என்றார்.
‘‘அப்படியானால் இறைவன்?’’
‘‘உடலை இயக்குவது ஆத்மா என்பது போலத்தான், இந்த உலகை இயக்குவது பரமாத்மா. நெருப்புக்கு சுடும் இயல்பு, நீருக்கு குளிரும் இயல்பு, செடிகளுக்கு பூக்கும் இயல்பு இன்னும் சொல்லப் போனால் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டிருக்கும் சக்தியை பரமாத்மா என்கிறோம்… இறைவன் என்கிறோம்.’’ என்றார்.
ஞானகுரு, ‘‘ஆத்மா, பரமாத்மா போன்ற கண்ணுக்குத் தெரியாத சங்கதிகளும், சொர்க்கம், நரகம் போன்ற கற்பனைகளும் இன்றைய மனிதர்களுக்குத் தேவையில்லாதவை. உடலைத் தொந்தரவு செய்யும் யோகா, தியானம் போன்றவை எந்த பயனும் தராது’’ என்றபடி எழுந்தார்.