ஞானகுரு பதில்கள்
கேள்வி : தன்னுடைய தொழிலை, தன் வாரிசு செய்யவேண்டாம் என்று பெற்றோர் நினைப்பது ஏன்?
- ஏ.காயத்ரிதேவி, திருநெல்வேலி.
ஞானகுரு :
காலம் காலமாக ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலை செய்து பணம் ஈட்டுவது ஆணின் கடமையாக இருக்கிறது. 99 சதவீத ஆண்கள் பணத்துக்காகவே வேலை பார்க்கிறார்கள். அதாவது, மனதுக்குப் பிடித்த வேலை என்று வேறு ஏதாவது ஒன்றை நினைத்துக்கொள்கிறார்கள். அதனால் தான் இனிமையான இசை எழுப்பும் புல்லாங்குழல் விற்பனை செய்பவனும் விரக்தியுடனே வாழ்கிறான். பிடித்த வேலையைச் செய்யாமல் தெரிந்த வேலையைச் செய்து பணம் சம்பாதிப்பதால், அப்படியொரு துன்பம் தன்னுடைய பிள்ளைக்கும் வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.
நிறைய பணம் சம்பாதிப்பவரும், நிறைய புகழுடன் திகழ்பவரும் மட்டுமே பிள்ளைகளை தங்கள் தொழிலில் இறக்குகிறார்கள். மற்றவர்கள் பிள்ளையின் எதிர்காலம் சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குத் தெரிந்த ஏதேனும் ஒரு துறையில் பிள்ளையைத் திணிக்கிறார்கள். இதுவும் தவறு.
என்ன செய்ய வேண்டும் என்பதை பிள்ளையே முடிவு செய்யட்டும். அது வரையிலும் பெற்றோர் ஆதரவாக நிற்க வேண்டும். அதுவே, நல்ல பெற்றோருக்கு அழகு.
கேள்வி : இறைவனை அடைய எளிய வழி என்ன?
- ஜி.பத்மா, வத்ராப்.
ஞானகுரு :
12 பி பஸ் பிடித்து மூன்றாவது ஸ்டாப்பில் இறங்கினால் கடவுள் காத்திருப்பார் என்பது போன்று இதற்கு பதில் அளிக்க முடியாது. மனித குலம் சிந்திக்கத் தொடங்கிய காலம் தொடங்கி இன்று வரையிலும் இறைவனை அடைவதற்கு வழியை மனிதர்கள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
இறைவன் நம்பிக்கையில் இருக்கிறார் என்று அத்தனை மதங்களும் போதிக்கின்றன. இறைவனை அடைவதற்கு நிறைய வழிகள் காட்டுகின்றன. இறைவனுக்குப் பக்கத்தில் மனிதர்களை அழைத்துச் செல்வதாக சாமியார்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால், மதங்கள் அல்லது சாமியார்கள் மூலமாக இதுவரை யாரும் இறைவனை அடைந்ததே இல்லை என்பது மட்டும் உண்மை.
எல்லா நதிகளும் கடலை நோக்கி ஓடுவது போல், உங்களுக்கான கடவுளை நீங்களே கண்டுபிடியுங்கள். இது கடினமான செயல் என்று நினைத்தால் எளிய வழியைக் கடைப்பிடிக்கலாம். அதாவது, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள். இந்த உயிரும் உடலும் வாழ்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வாழ்க்கையை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழுங்கள். அந்த மகிழ்ச்சியில் எளிதாகக் கடவுளைக் காண முடியும்.
