ஆசிரியர் பார்வை
’குருடன் மகன் குருடனாகத்தான் இருப்பான்’ என்று துரியோதனைப் பார்த்து பாஞ்சாலி பேசிய பேச்சுதான், மகாபாரத யுத்தத்திற்கே காரணம் என்பார்கள். ஆம், அவள் தந்த அவமானத்தை தாங்கமுடியாமல்தான், பாஞ்சாலியை துயிலுரிக்கவும், காட்டுக்குள் அனுப்பவும் செய்தான் துரியோதனன்.
அவமானம் அத்தனை தூரம் கொடியது என்பது உண்மைதான். ஆனால், துரியோதனன் செய்தது சரிதானா..? நிச்சயம் தவறான அணுகுமுறை. அந்த அவமானத்தை துரியோதனன் ஜெயிக்கும் வழியை ஆராய்ந்திருந்தால், அவனும் அவனுடைய சகோதரர்களும் உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அவமானத்திற்கு பழி வாங்க நினைத்தே உயிரை இழந்தான்.
அவமானம் என்பதைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை. அந்த அவமானத்தை தாங்கிக்கொண்டு வெற்றிபெறும் மனசுதான் முக்கியம். நம் தேசத்தந்தை காந்திஜி தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். அவர் தன்னுடைய அவமானத்தை மட்டும் பார்க்கவில்லை. அந்த அவமானத்திற்குக் காரணமான நிறவெறியையே ஒழிக்கவேண்டும் என்று போரிட்டு வெற்றி அடைந்தார்.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபிறகுகூட ஆபிரஹாம் லிங்கன், ஒரு செருப்பு தைப்பவரின் மகன் என்று அவமானப்படுத்தப்பட்டார். அவர் அதற்காக கொஞ்சமும் கவலைப்படவில்லை. ‘ஆம், உங்கள் செருப்பில் ஏதேனும் பிரச்னை இருந்தால் கொண்டுவாருங்கள், சரி செய்து தருகிறேன்’ என்றார். இப்படித்தான் அவமானங்களை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அவமானங்களுக்காக கூனிக்குறுகத் தேவையில்லை.
பிறர் நமக்கு இழைக்கின்ற அவமானங்களைக் கொஞ்சம் புத்திசாலித்தனமாக ஏற்றுக்கொண்டால், நாம் நிச்சயம் வெற்றிபெற முடியும். அவமானத்தால் நாம் கோபப்படுவதாலோ, குமுறுவதாலோ, கொந்தளிப்பதாலோ, கூனிக்குறுகுவதாலோ எதுவும் நடக்கப்போவதில்லை. அதற்குப் பதிலாக அவமானம் செய்தவர் யார்? அவரது அடிப்படை நோக்கம் என்ன? நம்மை அவமானப்படுத்தி விடுவதால் அவருக்கு ஏற்படும் லாபம் என்ன என்று கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் போதும்.
அவமானங்களால் வருத்தம், வேதனை ஏற்படும் என்பது உண்மைதான். அதன்பிறகு பிறர் முகத்தில் விழிப்பதற்கு சங்கடமும் ஏற்படலாம். ஆனால், ஒருவர் அவமானப்படுத்திவிட்டார் என்பதற்காக, அந்த அவமானத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
சூரியனைப் பார்த்து நாய் குரைக்கிறது என்பதற்காக, சூரியன் கொஞ்சமும் வருத்தமோ, கோபமோ, சங்கடமோ படுவதில்லை. ஏனெனில் சூரியனுக்கு அதனுடைய தகுதி தெரியும். அதுபோல், உங்கள் தகுதி, தன்னம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிட வேண்டாம்.
ஒரு வகையில் நீங்கள் அடைந்திருக்கும் பல வெற்றிகளுக்கு, உங்களுக்கு முன்னர் கிடைத்த அவமானமே காரணமாக இருப்பதுண்டு. அவமானத்தை துடைத்தெறிய வேண்டும் என்று கடுமையாக உழைத்து வென்றவர்கள் உண்டு. அதனால், அவமானம் செய்பவர்கள் ஏதோ ஒரு வகையில் நம் வெற்றிக்கு உதவுகிறார்கள் என்றே நினைத்துக்கொள்வோம்.
எந்த அவமானத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால், அந்த அவமானத்துக்குப் பின்னே இருக்கும் உண்மைத் தன்மையை ஆராயுங்கள். அந்த அவமானத்தை எப்படி வெற்றிகரமாக துடைத்தெறிவது என்று யோசியுங்கள். அதுதான், அவமானத்திற்கு நீங்கள் கொடுக்கும் பரிசு.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்