பிரபலங்களின் மந்திரச்சொல்
வெற்றி பெற்ற நபர்களின் வாழ்க்கை என்பது ஒரு திறந்த புத்தகம். எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் ஒரு வாசலைத் திறக்கும். அப்படி உலகப் புகழ்பெற்ற மனிதர்களின் மந்திரச்சொற்கள்.
என்னை நானே நேசிக்கத் தொடங்கியதிலிருந்து என்னுடைய நேரத்தை நானே அபகரிப்பதை விட்டுவிட்டேன். இதை செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும் என்று எதிர்காலத்துக்காக போட்டு வைத்திருந்த எல்லா திட்டங்களையும் அப்படியே நிறுத்திவிட்டேன். என்னுடைய வழியில், என்னுடைய இசைவில் எது எனக்கு மகிழ்ச்சியையும், பேரானந்தத்தையும் கொண்டு வருகிறதோ அதை மட்டுமே இன்றைக்குச் செய்கிறேன்.
- சார்லி சாப்ளின்
சில விஷயங்கள் உனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. சில விஷயங்கள் இல்லை. உனது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத விஷயங்களை அலட்சியம் செய். இந்த அடிப்படையைத் தெளிவாக புரிந்துகொள்ளும்போது மகிழ்ச்சியும், சுதந்திரமும் ஆரம்பிக்கிறது.
– எபிக்டெடுஸ்
நீ தேவையில்லாமல் எதை எதையோ யோசித்து உன்னை குழப்பிக்கொள்கிறாய். இறுக்கமடைகிறாய். யோசிக்காமல் சும்மா இரு. யோசிப்பது தான் உன்னோட பிரச்சனை.
– ஜோர்பா
மனித வாழ்க்கையின் முறையான செயல்பாடு வாழ்தல்தான். வெறுமனே உயிரோடு இருப்பதல்ல. வாழ்நாளை நீட்டிக்க செய்யும் முயற்சியால், எனக்கான நாட்களை நான் வீணடிப்பதில்லை. எனக்கான நாட்களை முழுமையாகப் பயன்படுத்துகிறேன்.
– ஜாக் லண்டன்
என்னுடன் நான் எப்பொழுதுமே முரண்படுவதே இல்லை. நான் செய்ய விரும்புவது எதுவாக இருந்தாலும், அதைச் செய்கிறேன்; எந்த குற்றவுணர்வும் இல்லாமல்.
- மொரியூவ்
சொர்க்கத்தையும் நரகத்தையும் எதிர்காலத்தில் தேடாதே. இரண்டுமே நிகழ்காலத்திலே இருக்கிறது. எப்போதெல்லாம் கணக்குப் பார்க்காமல்,பேரம் பேசாமல் ,எந்த வித எதிர்பார்ப்புமில்லாமல் நம்மால் நேசிக்க முடிகிறதோ அப்போதெல்லாம் நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம் . எப்போதெல்லாம் சண்டை போட்டுக்கொண்டும் ,ஒருவரை ஒருவர் வெறுத்துக்கொண்டும் இருக்கிறோமோ அப்போதெல்லாம் நரகத்தில் இருக்கிறோம்.
– சாம்ஸ் டாபிரெஸ்
ஒரு குழந்தையால் மட்டுமே காரணமின்றி புன்னகைக்க முடிகிறது. ஒரு குழந்தையால் மட்டுமே உயிரோடு இருக்கும் நிகழ்வை, ஆனந்தமாக குதூகலமாக கொண்டாட முடிகிறது. அதுதான் வாழ்க்கையின் அடிப்படைத் தன்மை. நம் வாழ்வில் ஒரு குழந்தை நுழையும் போது கற்றுக் கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதென எண்ணுவது துயரமானது உண்மையில் நாம் கற்கத் தவறிவிட்ட வாழ்க்கையை கற்றுக் கொள்வதற்காக திரும்பவும் கிடைத்த வாய்ப்பு அது.
- தஸ்தயேவ்ஸ்கி
தொகுப்பு : சக்திவேல்