• Home
  • சர்ச்சை
  • பெரியார் கடவுளை பார்த்தால் என்ன கேட்பார்..?

பெரியார் கடவுளை பார்த்தால் என்ன கேட்பார்..?

Image

நிஜமான வாழ்க்கை பாடம்

ஒருவனுக்கு தலைமை பதவி வரும்போது அதிகாரத்தை மட்டும் காட்டினால், நல்ல பணியாட்களை நிர்வாகம் இழக்கவேண்டி வரும். நான் குடும்பத் தலைவன் என்று கணவன் அதிகாரம் செலுத்தினால் குடும்பம் சிதைந்துபோகும். நான் வைத்ததுதான் சட்டம் என்று ஒரு தலைவன் சர்வாதிகாரம் செலுத்தினால் நாடும் மக்களும் நாசமான நிலைக்குப் போகும். அதனால் வெற்றியின் போதை எந்த நேரத்திலும் தலையில் ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எத்தனை வெற்றி, எத்தனை மாலை, எத்தனை மரியாதை, எத்தனை புகழ் கிடைத்தாலும் எதற்கும் மயங்கிவிடாமல் கடைசிவரை, தன்னுடைய கொள்கைகளை பரப்புவதை மட்டுமே கடமையாக செய்துவந்த ஒரு மனிதரை வெற்றியாளர்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவர்தான் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர். கடைசி நொடி வரையிலும் அநியாயத்திற்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராக போராடியவர். எதற்காகவும் எப்போதும் தலைக்கனம் கொண்டதே இல்லை. அவர்தான் தென்னிந்தியாவின் சாக்ரடீஸ், பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் என்று புகழப்படும் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் கடவுள் என்ற உருவகத்திற்கு எதிராக போராடிவந்தார். கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளை பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்கியவன் காட்டுமிராண்டி என்று உலகமறிய கூச்சல் போட்டு சொன்னவர் பெரியார்.

கடவுள் இல்லை என்று இத்தனை தீவிரமாக இருக்கிறீர்களே, திடீரென கடவுள் உங்கள் முன்பு வந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வி பெரியாரிடம் கேட்கப்பட்டது. அவர் ஒரு நொடிகூட சிந்திக்கவில்லை. கடவுள் வந்துவிட்டால், அவரை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அழுத்தம்திருத்தமாக சொன்னார் பெரியார். அந்த உண்மைதான் பெரியார். இவரது லட்சியம் சாதி, மதத்தை ஒழிப்பதுதான். என்னுடைய வாழ்நாளில் இதை ஒழிக்கமுடியாது என்று தெரியும் என்றாலும், அதை நோக்கி நடப்பதில் பெருமைதான் என்று ஒப்புக்கொண்டவர் பெரியார்.

இவரது வாழ்க்கை வரலாற்றை திரும்பிப்பார்த்தால் ஏகப்பட்ட முரண் இருக்கும். ஆம், மாற்றம், முரண்களால் நிரம்பியவனே மனிதன், எதையும் மறைக்கத் தேவையில்லை என்பதுதான் பெரியார் சித்தாந்தம். 19வது வயதில் 13 வயது நாகம்மையாரை திருமணம் முடித்துக்கொண்டார் பெரியார். அந்த வயதிலேயே கலப்பு திருமணம், சமபந்தி சாப்பாடு போன்ற முற்போக்கு சிந்தனைக்கு ஆதரவு தெரிவித்ததால் குடும்பத்தினருடன் கடுமையான பிணக்கு ஏற்பட்டது.

ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் பெரும் ஈடுபாடு காட்டினார். கள்ளுக்கடைக்கு எதிரான போராட்டம், வெளிநாட்டு துணி பகிஷ்கரிப்பு போன்றவற்றில் தீவிரமாக இருந்தார். தன்னுடைய தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். காங்கிரஸ் தொண்டனாக சிறைக்கு போனார். கேரளாவில் வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி மாபெரும் வெற்றி அடைந்தார்.  கடுமையான உழைப்பினால் மளமளவென கட்சியில் உயர்ந்து சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது கல்வியிலும் அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த பிரச்னை சுதந்திர போராட்டத்தை திசை திருப்பிவிடும் என்று காங்கிரஸார் ஏற்க மறுக்கவே, காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார்.

அதன்பிறகு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி மக்களின் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காக அயராது உழைத்தார். குறிப்பாக பெண் கல்வி, தீண்டாமை, கைம்பெண் மறுமணம், இட ஒதுக்கீடு, குழந்தை திருமணம், கலப்பு திருமணம் போன்றவற்றில் மக்கள் விழிப்படைய வேண்டும் என்று தமிழ்நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்தார்.

அதன்பிறகு ராஜாஜி கொண்டுவந்த இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய பெரியார், நீதிக்கட்சியில் சேர்ந்தார். நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் மாறியதும், நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றினார். இதனை அரசியல் கட்சியாக மாற்றி, மக்கள் செல்வாக்கை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத்தின் இரண்டாம் கட்ட தலைவர்கள் முன்வைத்த கோரிக்கையை பெரியார் ஏற்கவில்லை. பெரியாரின் தனித்தமிழ்நாடு கோரிக்கையும் மற்ற தலைவர்களுக்கு உகந்ததாக இல்லை.

இந்த நேரத்தில் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை 1948ம் ஆண்டு திருமணம் முடித்துக்கொண்டார் பெரியார். இதனை காரணமாக்கி கட்சியில் இருந்து வெளியேறிய அண்ணாதுரை, திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்ததும் பெரியாருக்கு எந்த ஒரு பதவி கொடுக்கவும் தயாராக இருந்தார்கள். ஆனால் பெரியார் எப்போதும் போல் தலைமைக்கோ, பதவிக்கோ, செல்வாக்குக்கோ ஆசைப்படவே இல்லை. மூட நம்பிக்கையை விரட்டுவதுதான் என்னுடைய பணி என்று தனது 94வது வயது வரை மக்களின் விடியலுக்காக போராடினார்.

வெறுமனே கருத்து சொல்பவராக மட்டும் பெரியார் இருக்கவில்லை. மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி போராடினார். ஆண்டவன் அனைவருக்கும் சமம் என்றால், அவனை பார்ப்பனரை தவிர வேறு ஒருவர் தொட்டால் எப்படி தீட்டாகும் என்று அர்த்தமுள்ள கேள்வி எழுப்பினார். பெண்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.

தன்னுடைய புகழுக்காக, பெயருக்காக, செல்வத்துக்காக பெரியார் போராடவில்லை. மூத்திரசட்டியுடன் பொதுமேடையில் அமர்ந்து பகுத்தறிவு பேசினார். நான் சொல்வதையும் எதிர்த்து கேள்வி கேள் என்று ஊக்கம் கொடுத்தார். தனக்கென ஆதாயம் கொள்ளாதவர். தன் பேச்சைக் கேட்க இத்தனை மக்கள் வருகிறார்கள், தன்னைத் தேடி இத்தனை அரசியல்வாதிகள் வருகிறார்கள் என்பதற்காக தன்னுடைய நிலைமையை உயர்த்திக்கொள்ளவே இல்லை. அதனால்தான் புகழும், வெற்றியும் அவர் தலைக்குள் புகவே இல்லை. கடைசிவரை மக்களின் தலைவராகவும் தமிழர் தந்தையாகவும் வெற்றி மேல் வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தார் பெரியார்.

பெரியாரின் சிந்தனைகள் ஊக்கம் தருவது மட்டுமல்ல, புத்துணர்வு புகட்டக்கூடியது. அவரது சிந்தனைகளில் சில துளிகள் மட்டும் இங்கே…

  • யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.
  • பொதுவாழ்வில் இருப்பவருக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும் தியாக உணர்வும் வேண்டும்.
  • முதலில் நாம் இந்தியர் பிறகுதான் பார்ப்பனர், பறையன் என்று பார்க்கவேண்டும் என அரசியல் இயக்கம் சொல்கிறது. ஆனால் சுயமரியாதை இயக்கமோ முதலில் நாங்கள் மனிதர்கள், பிறகுதான் இந்தியர்கள் என்று பார்க்கச்சொல்கிறது.
  • மக்கள் சமூக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு, தாழ்வு இருக்கக்கூடாது.
  • மனித சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சரிசமத்துவம் இருக்கவேண்டும்.
  • மயிரை மட்டும் கடவுளுக்கு தரும் பக்தர்கள், அவர்களின் கையையோ, காலையோ காணிக்கையாக ஏன் தருவதில்லை?

Leave a Comment