• Home
  • அரசியல்
  • மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்னாகும்..?

மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா என்னாகும்..?

Image

எதிர்க் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு இடையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளானர்.

இது குறித்துப் பேசும் டெல்லிவாலாக்கள், ‘’இந்தியாவில் மாநில அரசுகளின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையிலும்,  ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவில் அரசமைப்புச் சட்டப்பிரிவு 82(A), 83, 172 மற்றும் 327 ஆகியவை திருத்தப்பட உள்ளன. ஏற்கனவே உள்ள சட்டங்கள் போக புதிய சில திருத்தங்கள் இந்தச் சட்டங்களில் இணைக்கப்படுகின்றன அதன் அடிப்படையில் அரசமைப்புச் சட்ட பிரிவு 327ல் சட்டமன்ற பேரவைகளை உரியவாறு அமைப்பதற்கு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தேர்தல் தொகுதிகளை வரையறுத்தல் ஆகியவற்றுக்கு அடுத்ததாக, புதிதாக CONDUCT OF SIMULTANEOUS ELECTIONS – ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான நடத்தை என்ற சொற்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தேர்தல் நடத்தையை தீர்மானிக்கின்ற முழு அதிகாரத்தை நாடாளுமன்றமே எடுத்துக் கொள்கிறது.

ஒரு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் மக்களவை அமர்வு நாளில் இந்தப் பிரிவுகளைச் செயல்படுத்த குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிடுவார். அந்நாள் ‘நியமன நாள்’. நியமன நாளுக்கும் மக்களவையின் பதவிக்காலம் முடிகின்ற நாளுக்கும் இடையில் தேர்தல் நடத்தித் தேர்வாகும் சட்டப் பேரவைகள், ஏற்கனவே உள்ள மக்களவையின் பதவிக்காலத்தோடு சேர்ந்து கலைந்துவிடும்.

தேர்தல் ஆணையம் ஆணைகளின் மூலம் தருகின்ற மாற்றங்களுக்கு ஏற்ப அரசமைப்புச் சட்டப் பகுதி 15 இந்த ஒரே நேரத்திலான தேர்தல்களுக்குப் பொருந்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் தேர்தல் நடக்கும் போது ஏதேனும் மாநிலங்களுக்கு தேர்தலை நடத்த முடியாவிட்டால், தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும். குடியரசுத் தலைவர் அந்த மாநிலங்களுக்கு பிறகு தேர்தல் நடக்கும் என்று ஆணை பிறப்பிப்பார். அப்படி தள்ளி நடத்தப்படும் தேர்தலில் உருவாகும் சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஏற்கனவே உள்ள மக்களவையோடே சேர்ந்து முடிவுக்கு வரும்.

இந்த மசோதாவுக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‘’ ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான மசோதாக்களை நாங்கள் எதிர்க்கிறோம் இந்த மசோதாக்களை நிறைவேற்ற அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்கிற சூழலில், எப்படி நிறைவேற்றுவீர்கள்? இந்த விவகாரத்தை நிலைக்குழுவின் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலனை செய்ய வேண்டும்’ என்று டி.ஆர்.பாலு கோரிக்கை வைத்துள்ளார்.

இரண்டு மடங்கு ஆதரவு இல்லை என்றாலும் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு தீர்மானத்தை நிறைவேற்றும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் நீதிமன்றத்தில் இது ஏற்கப்படுமா என்பது கேள்விக்குறி’’ என்கிறார்கள். ஆனால், எல்லாவற்றையும் எப்படியும் சாதித்துக் காட்டுவது என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருப்பதால் எதுவும் நடக்கலாம்.

Leave a Comment