வயதுக்கேற்ற ஆலோசனை
குழந்தையின் இன்னொரு உலகம் பொம்மைகள் என்று சொன்னால் மிகையாகாது. அவர்களின் கையில் பொம்மைகள் கிடைத்துவிட்டால் போதும், பொழுது போவதே தெரியாது. தன்னை மறந்து அதனுடன் விளையாடிக் கொண்டிருப்பர். பொம்மைகளை கையில் வைத்துக்கொண்டு அதோடு பேசுவது, விளையாடுவது, சாப்பிடும் உணவை அதற்கும் ஊட்டி மகிழ்வது, குளிப்பாட்டுவது, அழகுபடுத்துவது என பொம்மைகளை சுற்றியே குழந்தைகளின் உலகமும் இயங்கும். அப்படியிருக்க, குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் பாதுகாப்பு தேவை. காரணம், அதன் மூலமும் குழந்தைகளுக்கு ஆபத்து உண்டாகலாம்.
உதாரணத்துக்கு, பொம்மைகளைப் பொறுத்தவரை அதில் பல வெரைட்டிகள், பல கேரக்டர்கள் இருக்கின்றன. மரப்பொம்மைகள், பிளாஸ்டிக் பொம்மைகள், ஃபர் பொம்மைகள், ரப்பரால் ஆன பொம்மைகள், மண் பொம்மைகள் என விதவிதமாக இருக்கின்றன. அதுபோல குழந்தைகளின் வயதைக் கணக்கில் கொண்டும் அதற்கேற்றதுபோல பொம்மைகள் கடைகளில் விற்கப்படுகின்றன. இப்படியான பொம்மைகள் எதிர்பாராமல் உடைந்துபோகும்போது, அதைவைத்து விளையாடும் குழந்தைகளுக்கு காயம் ஏற்படலாம் அல்லது ஏதாவது ஒரு பகுதியை வாயில்போட்டு விடலாம். இதனால் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடும். ஆக, விளையாட்டுப் பொருட்களைப் பயன்படுத்தும்போதுகூட பாதுகாப்பு தேவை என்று எச்சரிக்கின்றனர், குழந்தைகள் மருத்துவர்கள். ஆகையால், உங்கள் குழந்தைக்கு எந்த பொம்மையை வாங்கிக் கொடுக்கப் போகிறீர்கள் என்பதை முன்னரே தெரிந்துகொண்டு வாங்கிக் கொடுக்க வேண்டும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, 0 – 3 மாத குழந்தைகளுக்கு, அவர்களை ஈர்க்கக்கூடிய வண்ணமயமான பொம்மைகள், சுழலக்கூடிய தன்மைகொண்ட அல்லது ரம்மியமான இசை எழுப்பும் பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் தூங்கும் தொட்டிலுக்கு மேல் சுழன்றுகொண்டே ஒலி எழுப்பும் பொம்மைகள்கூட உள்ளன. இந்தக் காலகட்டத்தில் குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் அழும்நேரங்களில் குழந்தைகளின் முன்பு இந்த பொம்மைகளை ஒலிக்கச் செய்யலாம்.
3 – 6 மாத காலகட்டத்தில் குப்புற படுத்துக்கொண்டே குழந்தைகள் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயத்தைக் கவனிப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஒலி எழுப்பிக்கொண்டே நகரும் பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். மேலும், கைகளால் ஒலி எழுப்பக்கூடிய கிளுகிளுப்பு வகைகளையும், குழந்தைகள் எளிதாக கைகளில் பிடித்துக்கொள்ளும் வகையில் உள்ள மென்மையான பொம்மைகளையும் வாங்கிக்கொடுக்கலாம். ஆனால், நாம் வாங்கித் தரும் பொம்மைகள் எல்லாம் தரமானதாக இருக்க வேண்டும்.
6 -9 மாதம் வரை அவர்கள் உட்கார, தவழ முயற்சிப்பார்கள். சில குழந்தைகள் எழுந்து நிற்க முயற்சி செய்வார்கள். எனவே, இந்தக் காலகட்டத்தில் அவர்கள் தங்களைச் சுற்றி உள்ள பொருட்களை எடுப்பது, எறிவது, தள்ளுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். எனவே அவர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் நகரும் தன்மைகொண்ட பொம்மைகளை வாங்கிக் கொடுங்கள். நன்றாக பளீச் தோற்றத்தில் இருக்கும் பொம்மைகளை நீங்கள் வாங்கிக் கொடுப்பதன் மூலம் நிறத்தைக் கூர்ந்து பார்க்கும் தன்மை, குழந்தைகளுக்கு ஏற்படும். விளக்கு பொருத்தப்பட்ட கார், பஸ்கள், ரயில்கள், நடனமிடும் வாத்து, கோழி, விலங்குகள் போன்ற பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
குறிப்பாக, ஒவ்வொரு பொம்மையின் அட்டையிலும் மாதங்கள், வயது போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் பார்த்து வாங்குவது நல்லது. குழந்தைகளின் 6ம் வயது வரை அவர்கள் வாயில் நுழையாத அளவுக்கு பெரிய பொம்மைகளாக வாங்கிக் கொடுக்கலாம். குழந்தையின் 9வது மாதம் முதல் அவர்களின் அறிவாற்றல் திறனும் வளரும். எதையும் கூர்ந்து நோக்கும் திறன் உடையவர்களாக இருப்பார்கள். நடை வண்டி பழக ஆரம்பித்து இருப்பார்கள். அது அவர்களுக்கு பிரதான விளையாட்டுப் பொருளாக இருக்கும்.
இதைத் தவிர்த்து குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் தன்மைகொண்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். வண்ண வண்ண பந்துகள், பிளாக்ஸ், ஒலி எழுப்பும் கார்கள், விலங்குகள் போன்ற பொம்மைகள் ஏற்றது. ஒரு வயதைக் கடந்த குழந்தைகளுக்கு செயல்முறை விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கலாம். பிளாக்ஸ் அடுக்குவது, பேட், பால் போன்ற பொம்மை வகைகள் ஏற்றது. பொதுவாக, குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொம்மைகளை பெற்றோர் வாங்கிக் கொடுக்க வேண்டும். சிறிய சைஸ் பேட்டரிகள், மணிகள், ரிப்பன், பிளாஸ்டிக் ஸ்க்ரூ போன்றவற்றை குழந்தைகள் விழுங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. அதேபோல கூர்மையான பொம்மைகள், நச்சு பெயின்டிலான பொம்மைகளும் சின்னச்சின்ன மணிகள் கொண்ட பொம்மைகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. ஃபர் பொம்மைகள் மற்றும் வெல்வெட்டால் செய்த மென்மையான வழுவழுப்பான பொம்மைகளால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வகை பொம்மைகளைத் தவிர்க்க வேண்டும்.
பொம்மைகளிடம் இருந்து குழந்தையை காப்பாற்றுங்கள்.