ஞானகுரு பதில்கள்
கேள்வி : நான் காதலித்த பெண் என்னை நிராகரித்து விலகிவிட்டாள். இந்த தோல்விக்குப் பிறகும் நான் வாழ வேண்டுமா?
- எல்.மணிமாறன், பொள்ளாச்சி.
ஞானகுரு :
சதுரங்க விளையாட்டில் ராணி வெட்டப்பட்டதும் ஆட்டம் முடிவதில்லை. ஒரு சாதாரண சிப்பாயை மேலே வரை கொண்டுபோய் வேறு ஒரு ராணியைக் கொண்டுவர முடியும். இதுவே வாழ்க்கை. ஒரு பெண் விலகியதால் உங்கள் வாழ்க்கை முடியவேண்டிய அவசியம் இல்லை. வேறு ஒரு ராணியை கொண்டுவந்து விளையாடுங்கள்.
அதேநேரம், உங்களை நீங்கள் அலசி ஆராய்ந்து பாருங்கள். உங்களை விரும்பிய பெண் விலகிச்செல்கிறார் என்றால் கண்டிப்பாக உங்கள் பக்கம் தவறுகள் இருக்கும். அவற்றைக் கண்டுபிடியுங்கள். உங்கள் தகுதிகளை வளர்த்துக்கொண்டு ஒரு ராஜாவை போலவே முன்னேறுங்கள். அடுத்து வரும் பெண் விலகிச்செல்லாத வகையில் சிறப்பாக வாழ்ந்து காட்டுங்கள். இதுவே, உங்கள் முதல் காதலிக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய காதல் பரிசு.
கேள்வி ; அரசியலில் இணைய விரும்புகிறேன், அதற்கான தகுதிகளைக் கூறுங்களேன்..?
- ஐ.முத்தையா, சாத்தூர்.
ஞானகுரு ;
காமராஜர் போன்று தங்களுடைய நேரத்தைப் பிறருக்காக செலவிடத் தயாராக இருப்பவர்களே அரசியலுக்குத் தகுதியானவர்கள். குடும்பத்தை விட்டு எத்தனை தூரம் விலகிச் செல்கிறீர்களோ, அத்தனை எளிதில் அரசியல் வெற்றி கிடைக்கும். ஆனால், இந்த தத்துவத்தை கருணாநிதி மாற்றிவிட்டார். குடும்பத்தை விட்டு விலகிச் செல்வதற்கு மனமின்றி குடும்பத்தையும் அரசியலுக்குள் கொண்டுவந்து விட்டார். கருணாநிதி வழியில் ஸ்டாலின், ராமதாஸ், தமிழிசை, பிரேமலதா, ஜி.கே.வாசன் என்று எல்லோருமே கலக்குகிறார்கள். நேரம் இருக்கும் என்றால் மட்டும் இறங்குங்கள்.