• Home
  • ஞானகுரு
  • கடவுளுக்கு மனிதர் என்ன செய்ய வேண்டும்?

கடவுளுக்கு மனிதர் என்ன செய்ய வேண்டும்?

Image

ஞானகுரு சிந்தனை

கார்ப்பரேட் சாமியாருக்கும் ஞானகுருவுக்குமான உரையாடல் தொடர்ந்து. இந்த உலகைப் படைத்து, உயிர்களைப் படைத்த கடவுளுக்கு மனிதன் நன்றிக்கடன் பட்டிருக்கிறான். எனவே, எல்லா நேரமும் கடவுள் பற்றிய சிந்தனையில் இருப்பது நல்லது. அதுவே, மனிதர்களின் கவலையைப் போக்கும் என்றார் கார்ப்பரேட் சாமியார்.

‘’மனிதருடைய கவலையை கடவுள் தீர்க்க மாட்டார். மனிதருக்கு மனிதரே உதவ வேண்டும்’’ என்றார் ஞானகுரு

‘‘நாங்களும் மனிதர்களுக்கு உதவுவதையே முக்கியக் கடமையாகச் செய்கிறோம். கடவுள் பெயரைச் சொல்லி, ஏழைகளுக்கு உதவுகிறோம். ஆனாலும் கடவுளுக்கு மனிதர்கள் நன்றி செலுத்த வேண்டியது அவசியம் தானே..?’’ என்று கேட்டார்.

‘‘இந்த உலகத்தில் விளையும் பொருட்களை சரியாக பங்கீடு செய்தால், உலக மக்கள் அனைவருமே பசி, பட்டினி, ஏழ்மையை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது. ஆனால் ஒரு பக்கம் மிதமிஞ்சிய ஏழ்மையும், மிதமிஞ்சிய பணமும் பிரிந்து கிடப்பதற்கு காரணமே அரசுகள்தான். ஏழைகளுக்கு உதவி செய்வதாகச் சொல்லி அரசுகள் செய்யும் தவறை நீங்களும் செய்கிறீர்கள்’’ என்றார் ஞானகுரு.

‘‘அப்படின்னா… ஜனநாயகம் சரியில்லைன்னு சொல்றீங்களா?’’

‘‘ஜனநாயகம் மட்டுமில்ல, மன்னராட்சி, கம்யூனிஷம், முதலாளித்துவம் என்று இதுவரை உண்டான அத்தனை புரட்சிகளும் மாற்றங்களும் வலிமை குறைந்த மக்களுக்கு நல்லது செய்யவில்லை. மேலும் இன்றைய உலகம் முழுமையான முதலாளித்துவத்தை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது… அதனால் இன்னும் அதிகமான ஏழைகள் உருவாகுவார்கள். நீங்களும் அதிக அளவில் சேவை செய்யலாம்.

கடவுள் இது வரை எந்த ஒரு மனிதரின் பிரச்னையையும் தீர்த்து வைத்ததில்லை. எந்த பக்தரையும் ஆயிரம் ஆண்டுகள் வாழ வைத்ததும் இல்லை. கடந்த காலம் மட்டுமின்றி எதிர்காலத்திலும் இது நடக்கப்போவதில்லை. எனவே, மனிதர் பிரச்னையை மட்டும் மனிதர் பார்த்தால் போதும். கடவுள் பிரச்னையை அவர் பார்த்துக்கொள்வார்’’ என்று சிரித்தார் ஞானகுரு.

பதில் பேச முடியாமல் சிரித்து வைத்தார் கார்ப்பரேட் குரு.

Leave a Comment