கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்..?

Image

ஆசிரியர் பார்வை

திடீரென ஒரு நாள் கடவுள் உலகைக் காண வந்தாராம். அவரை மனிதர்கள் சூழந்துகொண்டு ஆளுக்கொரு வரம் கேட்டார்கள்.

அதாவது, பணம், புகழ், உடல்நலம், நிம்மதி என்று ஆளாளுக்கு ஒன்று கேட்டார்கள்.

எல்லோரும் ஆலோசனை செய்து ஒரே ஒரு வரம் கேளுங்கள் என்று கடவுள் சொன்னார். நிறைய பேரிடம் பணம் இருந்தது, சிலரிடம் புகழ் இருந்தது. ஆனால், பெரும்பாலோருக்கு உடல் நலமும் நிம்மதியும் இல்லை. அதனால், அனைவரும் நன்றாக யோசித்து, ‘எங்களுக்கு ஆரோக்கியமான உடல்நலம் வேண்டும்’ என்று வேண்டுகோள் வைத்தார்கள்.

கடவுள் சட்டென சிரித்துவிட்டார். ‘உங்களால் முடியாத ஒன்றைத்தான் என்னிடம் கேட்கவேண்டும். ஆரோக்கியமான உடல் பெறுவது உங்களுக்கே சாத்தியம்தான்’ என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.

இந்த சம்பவம் எங்கே நடந்தது, என்ன ஆதாரம் என்று கேட்கவேண்டாம். இதன் உட்கருத்து என்னவென்று மட்டும் பாருங்கள். ஆம், ஆரோக்கியம் என்பது மனிதர்கள் கையில்தான் இருக்கிறது. அதனை முறையாகப் பராமரிக்காமல், மருத்துவமனைகளில் போய் மக்கள் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.

மனித உடல் கிட்டத்தட்ட 80 முதல் 90 வயது வரையிலும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தகுதி படைத்தது என்ற அடிப்படை உண்மையை அனைவரும் புரிந்திருக்க வேண்டும். ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படைத் தேவை மொத்தமே நான்குதான். ஆம், சரிவிகித உணவு, நல்ல சுற்றுச்சூழல், போதிய உறக்கம் மற்றும் உடற்பயிற்சி. 

சரிவிகித உணவு எனும்போது, ஊட்டச்சத்து மிகுந்த சத்தான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வதுடன், உப்பு, சர்க்கரை, கொழுப்பு போன்றவைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. மேலும், ஃபாஸ்ட் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை குளிர் பானங்களை தவிர்த்தால் போதும்.

வசிக்கும் வீடும், வாழும் சூழலும் சுகாதாரமாக இருக்கவேண்டியதும் மிகவும் அவசியம். சுகாதாரமான இடத்தில் வசிப்பதாலும், ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வதாலும் மட்டும் நிம்மதியான தூக்கம் கிடைத்துவிடுவதில்லை.

ஆம், எடுத்துக்கொள்ளும் உணவு நன்கு ஜீரணமாகி உடலில் கலந்து தேவையான சத்துக்களை கொடுப்பதற்கும், நிம்மதியான தூக்கம் வருவதற்கும் அவசியத் தேவை, உடற்பயிற்சி அல்லது விளையாட்டு. தினமும் ஒரே மாதிரியான பயிற்சிகளை வீட்டில் அல்லது வெளியே செய்வது சிலருக்கு அத்தனை இனிமையாக இருக்காது. அப்படிப்பட்டவர்கள், பல்வேறு நபர்களுடன் இணைந்து ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடலாம்.

ஒவ்வொரு நபரும் அவரது வயது, உடல் அமைப்பு, கிடைக்கும் நேரம் போன்றவற்றைக் கணக்கிட்டு உடற்பயிற்சி செய்வதற்கு முன்வர வேண்டும். சாப்பிட நேரம் இல்லையென்றாலும், அவசர அவசரமாக விழுங்கிவிட்டுத்தான் அடுத்த வேலைக்குப் போகிறார்கள். அதேபோன்று, தினமும் சிறிது நேரமாவது உடலுக்குப் பயிற்சி தருவது கட்டாயம்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்தான் இருக்கிறது. ஆம், கடமையைத் தட்டிக் கழிப்பவரை கடவுளும் கண்டுகொள்ள மாட்டார். அதனால், இன்றே உடலுக்கு உறுதி கொடுங்கள்.

Leave a Comment