உண்மையான கடவுள் எந்த மதத்தில் இருக்கிறார்..?

Image

ஆசிரியர் பக்கம்

யாருடைய கடவுள் உண்மையானவர் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காகத்தான், இந்த உலகில் பெரும்பாலான போர்கள் நடத்தப்பட்டுள்ளன. மதத்தின் பேரில்தான் எக்கச்சக்க உயிர்கள் பறிபோயிருக்கின்றன. அமைதிப் பூங்கா என்று கருதப்படும் நம் தமிழகத்தில்கூட, சமணர்கள் கழுவேற்றம் நடப்பதற்குக் காரணம், கடவுள் சண்டைதான்.

கடவுள் அன்பே உருவானவர் என்றால், அவரை பின்பற்றுபவர்கள் மட்டும் ஏன் இத்தனை மூர்க்கமாகவும், ரத்தம் ருசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்..?

ஏனென்றால், இவர்களிடம் இருப்பது போலியான கடவுள். அதாவது மனிதர்கள் உருவாக்கிய கடவுள். இந்த கடவுளுக்காகத்தான் மிகப்பெரிய கோயில், மிகப்பெரிய சிலை, மிகப்பெரிய விழாக்கள் ஏற்படுத்துகிறார்கள். தங்கள் கடவுள் மட்டுமே இந்த உலகில் நிலைத்திருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். தன்னுடைய கடவுளை ஜெயிக்க வைப்பதற்காக, மற்ற கடவுளின் ஆதரவாளர்களை தீர்த்துக்கட்டுவதும் நியாயம் என்பதுதான் இவர்களுடைய வழிபாடு.

இந்த கடவுள் போலி என்றால் உண்மையான கடவுளும் இருக்கிறாரா..?

ஆம், இருக்கிறார். இந்த பிரபஞ்சத்தை படைத்ததாக நம்பப்படுபவர் உண்மையான கடவுள். அவர் ஒவ்வொரு உயிரிலும் உயிராக இருக்கிறார். இந்த உலகில் புல், பூண்டு தொடங்கி மனிதன் வரையிலும் உண்மையான கடவுளின் அவதாரம்தான். இன்னொரு வகையில் சொல்லப்போனால், ஒவ்வொரு உயிரும் கடவுள்தான். அதனால், இந்த கடவுளிடம் அன்பு மட்டும்தான் இருக்கும். வெறுப்பு இருக்காது.

இந்த கடவுள் அனைத்து உயிரையும் சமமாக பார்க்கக்கூடியவர். இவரிடம் ஏற்ற தாழ்வுகள் கிடையாது. இவரிடம் பொய்யான நம்பிக்கை கிடையாது. சொர்க்கம், நரகம் போன்ற வாக்குறுதிகள் கிடையாது. சுருக்கமாக சொல்வது என்றால், உன் வாழ்க்கையை நீ மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பது மட்டும்தான் உண்மையான கடவுளின் விருப்பம். அதை நீ சிக்கலாக்கிக் கொண்டால், காப்பாற்றுவதற்கு உண்மையான கடவுள் ஓடோடி வரமாட்டார். சிக்கல் ஏற்படுத்திய நீயே தீர்வையும் காண வேண்டும். ஏனென்றால்,

அதனால்தான், இந்த கடவுளை யாரும் விரும்புவது இல்லை, பின்பற்றுவதும் இல்லை. அதனால், மனிதர்களின் ஆசைகளை நிறைவேற்றும் போலி கடவுளை வழிபடவே ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்தான், காணிக்கை கொடுத்தால் மனிதர்களின் ஆசைகளை நிறைவேற்றுவார், எதிரிகளை அழிப்பார். இந்த கடவுள் நீடுழி வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மனிதர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்படியென்றால், நிஜமான கடவுள் எதற்காக..? அவர் மனிதனுக்கு என்னதான் செய்வார்..? உண்மையிலே நிஜமான கடவுள் இருக்கிறாரா..?

இதற்கு பதில் உன்னிடம்தான் இருக்கிறது. ஏனென்றால், நீயும் ஒரு கடவுள்.

Leave a Comment