நிவாரணத்தைத் தாண்டி அறிக்கை போர்
அதிமுக காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரியும் திமுக காலத்தில் சாத்தனூர் அணையையும் முன்னறிவிப்பின்றி திறந்துவிட்டு மக்கள் உயிருடன் விளையாடுகிறது திராவிட ஆட்சி என்று மக்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்.
நாங்கள் முறையாக அறிவிப்பு கொடுத்தோம் என்று தி.மு.க.வினர் கூறிவந்தாலும் அ.தி.மு.க.வினர் எழுப்பும் கேள்விகள் நியாயமாகவே உள்ளன. அதாவது, ’’சாத்தனூர் அணையில் இருந்து 10,000 கன அடி, 30,000 கன அடி விடுவிக்கப்படும் என்று மட்டுமே மக்களுக்குத் தெரியவந்தது. திடீரென நள்ளிரவில் தாசில்தாருக்கு மட்டும் ஒரு கடிதம் எழுதுவதாக நாடகமாடிவிட்டு 1.68 லட்சம் கன அடி நீரை திறந்து விட்டிருக்கிறது திமுக அரசு.
தாசில்தாருக்கு கொடுக்கப்பட்ட கடிதம் என்பது மக்களுக்கான முன்னறிவிப்பா..? தாசில்தாரிடம் இருந்து மக்களுக்கு 1.68 லட்சம் கனஅடி வெளியீட்டுக்கான தகவல் சென்றது என்பதற்கு என்ன ஆதாரம்? தண்டோரா போடப்பட்டதா? மக்கள் வெளியேற வேண்டும் என்று ஆட்டோக்களில் அறிவிப்பு சொல்லப்பட்டதா? அறிவிப்பு பலகை எங்காவது வைக்கப்பட்டதா? முன்கூட்டியே ஏன் அறிவிக்க இயலவில்லை. இது நிர்வாகக் கேடு, சாத்தான் அரசு என்று கண்டனம் செய்கிறார்கள்.
இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், ‘’சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவான 119.0 அடியில் 110 அடியை 25.10.2024 அன்று எட்டியதை தொடர்ந்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது 01.12.2024 அன்று முதல் பெஞ்சல் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து அதிதீவிர கனமழை பிற்பகல் 2.00 மணி முதல் சாத்தனூர் மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மொத்தமாக 170.60 செ.மீ மழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து மாலை 6.00 மணி முதல் 19500 கன அடி வீதம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் சாத்தனூர் அணைக்கு தென்பெண்ணையாற்றின் மேல் உள்ள கிருஷ்ணகிரி அணை, நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள கல்வராயன்மலையில் பெய்த கனமழை, பாம்பாறு, கல்லாறு, வாணியாறு ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணங்களால், 01.12.2024 மு.ப. 8.00 மணியளவில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் மு.ப. 11.50 மணியளவில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டது
இதனை தொடர்ந்து 01.12.2024 அன்று மாலை. 6.00 மணியளவில் 19500 கன அடியிலிருந்து 7.00 மணியளவில் 25600 கன அடி, 8.00 மணியளவில் 31555 கன அடி 9.00 மணியளவில் 32000 கன அடி, 10.00 மணியளவில் 32000 கன அடி நீர்வரத்து வந்து கொண்டு இருந்தது இந்நிலையில் சாத்தனூர் அணை பகுதிகளில் அதி தீவிர கனமழை பெய்து கொண்டு இருந்ததால் 01.12.2024 பி.ப. 10.00 மணியளவில் நான்காம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது
இந்நிலையில் பி.ப.11.00 மணியளவில் 32000 கன அடி, 02.12.2024 அன்று நள்ளிரவு 12.00 மணியளவில் 63000 கன அடி, அதிகாலை 1.00 மணியளவில் 106000 கன அடி நீர்வரத்து வந்த வண்ணம் அதே அளவு வெளியேற்றப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து சாத்தனூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் அதிதீவிர கனமழை இடைவிடாமல் பெய்த வண்ணமே இருந்ததால் 02.12.2024 அன்று அதிகாலை 2.45 மணியளவில் ஐந்தாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது மேலும் 02.12.2024 அன்று அதிகாலை 2.00 மணியளவில் 130000 கன அடியாக நீர்வரத்திலிருந்து அதிகபட்சமாக அதிகாலை 3.00 மணியளவில் 168000 கன அடிக்கு உயர்ந்ததால், அணைக்கு வந்த வெள்ள நீர் அணையின் பாதுகாப்பினை கருதி படிப்படியாக உயர்த்தி அதிகாலை 3.00 மணியிலிருந்து 8.00 மணி வரை 168000 கன அடி/ வினாடிக்கு சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டது
பெரு மழை தொடர்ந்து பெய்ததைத் தொடர்ந்து நீர் வரத்து அதிகமானதால் 5-வது வெள்ள அபாய எச்சரிக்கை டிசம்பர் 2-ம் தேதி முற்பகல் 2.45 மணிக்கு விடப்பட்டு வினாடிக்கு 1,80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது அதிகப்படியான மழையின் காரணத்தைப் புரிந்து கொள்ளாமல் பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள் ஃபெஞ்சல் புயலின் போக்கைப் புரிந்து கொண்டால் ஏன் சாத்தனூர் அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டது? என்பதற்கான காரணம் புரியும் பெரு மழையால் சாத்தனூர் அணைக்கு ஆபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செயல்பட்டது’ என்று கூறியிருக்கிறார்.
இதெல்லாம் சரி, மக்களுக்கு எப்படி அறிவிப்பு கொடுத்தீர்கள் என்பது தானே கேள்வி.