நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்தது வெள்ளி அல்ல, தங்கம்.

Image

பாகிஸ்தானியரை அரவணைத்த மனிதம்

இந்திய மக்களின் மாபெரும் எதிர்பார்ப்பாக நீரஜ் சோப்ரா இருந்தார். கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் என்பதால் இந்த போட்டியிலும் தங்கம் ஜெயிப்பார் என்று கருதப்பட்டது. ஆனால், வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. ஆனால், இந்த போட்டியில் மனிதத்தைக் காட்டி தங்கத்தை விட பெரிய பரிசு வென்றுவிட்டார் நீரஜ்.

இந்தியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் என்ற ஒலிம்பிக் சாதனைத் தடத்துடன் தங்கம் வென்றார். மிகக் கடினமான இந்தப் போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா எறிந்த ஈட்டியின் தூரம் 89.45 மீட்டர். இதுவே அவரது ஒலிம்பிக் பெஸ்ட் என்பது கவனிக்கத்தக்கது. 88.54 மீட்டர் தூரம் வீசிய கிரனேடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலம் வென்றார்.

இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா இந்தியக் கொடியுடன் நிற்கையில், பாகிஸ்தான் கொடி கைக்கு வராமல் தவித்தார் அர்ஷத் நதீம். உடனே அவரை இந்தியக் கொடியுடன் அரவணைத்தார் நீரஜ் சோப்ரா. அதோடு இந்த வெற்றி குறித்துப் பேசிய நீரஜ் சோப்ரா, ‘நாங்கள் இருவரும் கடந்த 2016 முதல் விளையாடி வருகிறோம். இன்றைய போட்டி அவருக்கு சாதகமாக அமைந்தது. இதில் வருத்தப்படுவதற்கு எதுவும் இல்லை. நாங்கள் இருவரும் மட்டுமே முதல் இரண்டு இடங்களில் இருக்க வேண்டும் என்று உறுதி செய்துகொண்டோம். அதை சாதித்துக் காட்டியிருக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்.

அதேபோல் நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி, “நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களுக்கு வெள்ளிப் பதக்கமும் தங்கத்துக்கு ஈடானதே. தங்கம் வென்றவரும் என் பிள்ளை தான். நீரஜ் காயமடைந்தார், காயத்துடன் அவர் பெற்றுத்தந்த இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தடகள வீரரின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தான். எங்களுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை…” என்று கூறியுள்ளார்.

நீரஜ் சோப்ராவின் வெற்றிக்கு இந்தியத் தலைவர்கள் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால், விளையாட்டு என்றாலே ஒற்றுமை. அங்கு இந்து முஸ்லீம், இந்தியா பாகிஸ்தான் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது என்பதை தன்னுடைய செயல் மூலம் எடுத்துக் காட்டி தங்கத்தை விட பெரிய பரிசு வென்றிருக்கிறார் நீரஜ்.

அவரது தாயார், “எல்லோரும் கடின உழைப்பிற்குப் பிறகு தான் அந்த இடத்திற்குப் போகிறார்கள்” என்ற வரிகளின் பின்னுள்ள முதிர்ச்சியை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

மனிதம் போற்றும் நீரஜ் சோப்ராவுக்கும் அவரது தாயாருக்கும் இந்தியா கடமைப்பட்டுள்ளது. வேற்றுமை அல்ல ஒற்றுமையே இந்தியாவின் குணம்.

Leave a Comment