வழக்கறிஞர் நிலா விளக்கம்
எந்த ஒரு மனை வாங்குவது என்றாலும் சிஎம்டிஏ இல்லைன்னா டிடீசிபி அப்ரூவல் இருக்கிறதான்னு தெரிஞ்சுக்கோங்க என்று சொல்வார்கள். ஆனால், நிறைய பேருக்கு இந்த அப்ரூவல் பற்றி அதிகம் தெரிவதில்லை.

சென்னையைச் சார்ந்த பகுதிகளுக்கு சிம்டிஏ எனப்படும் Chennai Metropolitan Development Authority அங்கீகாரமும் மற்ற பகுதிகளுக்கு டிடிசிபி எனப்படும் Directorate of Town and Country Planning அதாவது நகராட்சி மற்றும் கிராம வளர்ச்சி இயக்குநரகம் என்பதன் அங்கீகாரமும் அவசியம். பொதுவாக நிலம் சட்டப்படி வாங்குவதற்குத் தகுதியானது என்றும், நகரமைப்பு திட்டங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பதே இந்த அப்ரூவல் ஆகும்.
இந்த அப்ரூவல் ஏன் முக்கியமென்றால் இப்போது நில விரிவாக்க திட்டங்களில் ஏராளமான மோசடிகள், முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே அங்கீகரிக்கப்பட்ட நிலம் என்பதையும் இதில் வேறு உரிமை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதையும் இந்த அப்ரூவல் உறுதிப்படுத்தும். இந்த அப்ரூவல் உள்ள நிலத்திற்கும் வீட்டுக்கும் மட்டுமே பெரும்பாலான அரசு வங்கிகள் ஹவுசிங் லோன் வழங்கும்.
இந்த அங்கீகரிக்கப்பட்ட நிலத்தில் சாலை வசதி கட்டாயம் இருக்கும். அதோடு எதிர்காலத்தில் அந்த பகுதி விரைவாக வளர்ச்சி பெறும் வாய்ப்பு உண்டு. அதோடு அங்கீகாரம் பெற்ற நிலங்கள் மீது மதிப்பும் அதிகமாக இருக்கும்.
ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு அங்கீகாரம் பெற்ற லே அவுட் எண் இருக்கும்.
இப்படிப்பட்ட அப்ரூவல் இல்லாத நிலங்களை வாங்கினால் சட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, விற்பனை செய்பவர்களிடம் சிஎம்டிஏ, டிடீசிபி எண் கேட்க வேண்டும். அந்த எண் சரியானதா என்று டிடீசிபி இணையதளத்தில் சரிபார்க்கலாம். அங்கு அந்த திட்டம் அங்கீகாரம் பெற்றதா, எப்போது அங்கீகரிக்கப்பட்டது, எந்த பகுதிக்குள் வருகிறது என்பதைக் காணலாம்.
இந்த அப்ரூவல் இல்லாத இடங்கள் வாங்குவது சட்டப்படி செல்லுபடியாகாது. எனவே, கவனமாக இருங்கள்.
