குருவாக இருப்பதற்கு தகுதி என்ன?

Image

மனிதரில் இல்லை அவதாரம்

ஞானகுரு படுத்திருந்த மரத்துக்குக் கீழே நாலைந்து ஆண்கள் வந்து அமர்ந்தார்கள். நடுத்தர வயதினர். அனைவரும் ஒரே மாதிரி காவி அணிந்து, மொட்டை போட்டு, கழுத்தில் ருத்ராட்சதம் அணிந்திருந்தனர். அருகிலுள்ள கோயிலுக்குப் போய்விட்டு, பிரசாதம் வாங்கிவந்து பவ்யமாக சாப்பிட்டனர்.

ஞானகுரு விழித்திருப்பதை பார்த்த ஒருவன், அவன் கையில் இருந்த பிரசாதத்தைக் கொடுக்க முற்பட, வேண்டாமென தலையசைத்து மறுத்தார். பிச்சைக்காரர் என்று நினைத்து, பையில் இருந்து 10 ரூபாய் பணம் எடுத்துக் கொடுக்கவே, எழுந்து மரத்தின் மீது சாய்ந்து அமர்ந்துகொண்டு அதை வாங்கி பக்கத்தில் வைத்துக்கொண்டார்.

‘’யார் நீங்கள்..?’’  பொத்தாம்பொதுவாக கேட்டார். அந்த கேள்வியில் இருந்த அதிகாரம் அவர்களில் ஒருவனை பேச வைத்தது.

‘’கோவையில இருக்கிற ஒரு ஆன்மிக அமைப்புல எங்களுக்கு ரொம்பவே ஈடுபாடு. அவங்க இங்கே நடத்துற அறிமுக வகுப்புல சேர்ந்தோம். அது எங்களுக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது. அதனால இப்போ 15 நாள் வகுப்பு பக்கத்துலதான் நடக்குது. நாளைக்கு கடைசி நாள். எங்க குருஜி வர்றாரு. அவரை நேரில் பார்க்கப்போறோம்னு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. அதை பத்தி பேசிக்கிட்டு அப்படியே கோயிலுக்குப் போயிட்டு வர்றோம்..’’ என்று ஒருவன் புளகாங்கிதத்துடன் பேசினான்.

 ‘‘உங்க குரு யாரு..?’’

‘‘எங்க குரு ரொம்பவும் ஸ்பெஷல். வீட்டில் நான் பூஜை செய்யும் போது, திடீர்னு என் பக்கத்துல இருக்கிற மாதிரி பிரசன்னம் ஆயிடுவார்.. ஒரே நேரத்தில் எல்லா பக்தர்கள் வீட்டுக்கும் போவார்…  அவர் ஒரு தெய்வ அவதாரம்’’ என்று ஒருவர் புளகாங்கிதத்தோடு பரவசமடைந்து பேசினார்.

‘‘வீட்டிற்கு உன் குரு வந்ததை, உன்னைத் தவிர யாரும் பார்த்தார்களா?’’

‘‘அதெப்படி சாமி… நான் அவரோட சீடர். அதனால் என் கண்ணுக்கு மட்டும்தான் அவர் தெரிவார்……’’ என்றான்.

‘‘யாரும் பார்க்காத ஒரு உருவத்தை நீ மட்டும் பார்த்திருக்கிறாய்  என்றால், உனக்கு மனநலக் கோளாறு என்று அர்த்தம். எதற்கும் ஒரு நல்ல  மருத்துவரை உடனே பார்த்துவிடு’’ என்றதும் அந்த குழுவே ஆத்திரப்பட்டது.

அவர்களில் மூத்தவராகத் தெரிந்த ஒருவர் அனைவரையும் சமாதானப்படுத்தி, ‘‘நீங்களும் ஒரு சாமியாருன்னு நினைக்கிறேன் ஆனா,  நீங்க வேற மார்க்கத்தைச் சேர்ந்தவரா இருக்கணும். அதுக்காக எங்க குருவை மட்டம் தட்டாதீங்க, அவரைப் பத்தி தப்பா பேசினா நாக்கு அழுகிடும்’’ என்றார்.

‘‘ஒரு மனிதனை தெய்வ அவதாரம், ஆன்மிக வழிகாட்டி என்று சொல்வதும் அவனை ஒரு தெய்வமாக வணங்குவதும்… இறைவனுக்குச் செய்யும் அநியாயம். உங்கள் குருவுக்குப் பசிக்காதா… அடித்தால் வலிக்காதா… தினமும் அவர் உடல் கழிவுகளை வெளியேற்றுவது இல்லையா?  இதுபோன்ற மனித  நிலையை கடந்தவர்கள் மட்டுமே மனிதர்களை விட மேலானவர்களாக, குருவாக  இருக்கமுடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த மனிதனும் அப்படியொரு  சக்தியுடன் பிறக்கவில்லை, பிறக்கவும் முடியாது. பின் எப்படி உங்கள் குருவை தெய்வ அம்சம் என்கிறாய்? அவர் மட்டும் ஏக்கர் ஏக்கராக இடம் வாங்கிப் போட்டு ஆசிரமத்தை பெரிதாக  வளர்த்துக் கொண்டே செல்வார். ஆனால் உன்னிடம், ‘இறைவனை நம்பு… உலகப் பொருட்கள் மீது ஆசை கொள்ளாதே’ என்று  உபதேசம் செய்யும் இரட்டை வேடத்துக்காகவா?’’ என்று கேட்டார் ஞானகுரு

‘‘இவர் நிச்சயமா ஃபிராடு சாமியார்தான். இவர் நிழல் நம்ம மேல படுறதே பாவம்…’’ என்று அந்த குழுவினர் சட்டென எழுந்துகொள்ள, ஞானகுருவின் சிரிப்பு அவர்களை அந்த இடத்திலிருந்து விரட்டியது.

Leave a Comment