• Home
  • சர்ச்சை
  • உடல் விற்கும் பெண்ணுக்கு என்ன தண்டனை..?

உடல் விற்கும் பெண்ணுக்கு என்ன தண்டனை..?

Image
  •  பாலியல் குற்றவாளிகள்

ஞானகுருவை தேடிவந்த மகேந்திரன் மிகவும் கோபமாக, ‘இரவு நேரத்தில் சில பெண்கள் ரோட்டில் நின்று பணத்துக்காக ஆண்களுக்கு வலை வீசுகிறார்கள். உடலை விற்று அப்படி பிழைக்கத்தான் வேண்டுமா, அவர்களுக்கு என்ன தண்டனை?’ என்று கோபமாகக் கேட்டார்.

வானத்தை வெறித்துப் பார்த்த ஞானகுரு, ‘’எய்தவன் இருக்க அம்புக்கு என்ன தண்டனை என கேட்கிறாய்..?’’

‘’புரியவில்லையே..’’

’’பெண்ணின் உடலுக்குள் இன்பத்தைத் தேடியலையும் ஆண்கள் இருக்கும்வரை, இப்படிப்பட்ட பெண்களும் இருக்கத்தான் செய்வார்கள். காமத்தில் தோல்வி கண்ட ஆண்களே வெவ்வேறு பெண்களிடம் இன்பம் தேடி அலைகிறார்கள். காமத்துக்கு அலையும் ஆண்களே இப்படிப்பட்ட பெண்களை உருவாக்குகிறார்கள். தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்று கேள்விப்பட்டிருப்பாய். இங்கு ஆணின் தேவையே இப்படிப்பட்ட பெண் உருவாக வழி வகுக்கிறது.

அதே நேரம் இந்த பெண்களிடம் எந்த ஆணாலும் இன்பத்தைக் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுடைய ஆனந்த முயற்சிகள் எல்லாமே வீண்தான். ஏனென்றால் பெண்ணை வெற்றிகொண்டு இன்பம் அனுபவிக்க எந்த ஆணாலும் முடியாது. ஆண்கள் தங்கள் மனதுக்குள் ஒளிந்திருக்கும் குரூரத்தை மட்டுமே தணித்துக்கொள்ள முடியும்.

உன்னுடைய காமத்துக்கு மட்டுமே வடிகாலாக இருக்கும் உன் மனைவி உனக்கு தெய்வமாகத் தெரிகிறார். பலருடைய வெறிக்கும், தேவைக்கும் வடிகாலாக இருக்கும் பாலியல் பெண்களை இழிவாகப் பார்ப்பாயா..?

எல்லா அழுக்குகளையும் தாங்கிக்கொண்டு ஓடும் கங்கையைப் போன்று இவர்களையும் வணங்குவதற்கு கற்றுக்கொள். ஆண் சமூமம் தனக்குள் இன்பம் கண்டுபிடிக்கும் வரை இந்த மாதிரி பெண்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். இந்த பெண்கள் இருக்கும் சமூகத்தை நாகரிகம் என்று சொல்வது வெட்கக்கேடு. உடல் விற்கும் பெண்ணுக்கு தண்டனை தர வேண்டும் என்றால், முதலில் அவளை அனுபவித்த அத்தனை ஆண்களுக்கும் தண்டனை தரவேண்டும்’’ என்றார் ஞானகுரு.

பதில் பேச முடியாமல் அமைதி காத்தார் மகேந்திரன்.