பாலியல் கப்ஸா கற்பனைகள்
மனிதகுலம் தொடங்கி லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆன பிறகும் பாலியல் குழப்பம் மக்களுக்குத் தீரவில்லை. செல்போனில் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளும் வகையில் எளிதான தொழில்நுட்பங்கள் இருக்கும்போதும், பாலியல் கட்டுக்கதைகளுக்குள் மூழ்கிக் கிடக்கிறார்கள். பெரும்பாலான மனிதர்களை ஆட்டிப் படைக்கும் பாலியல் சந்தேகங்களுக்கு விடைகளைப் பார்க்கலாம்.
உயிரணுக்கள் ஆயுட்காலம் எவ்வளவு..?
ஆண்களிடமிருந்து வரும் உயிரணுக்கள் சில நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், பெண் உடலுக்குள் 5 நாட்கள் வரை உயிர்வாழும் தன்மை உயிரணுக்களுக்கு உள்ளது. பெண் உடலுக்குள் ஊட்டமளிக்கும் திரவங்கள் இருப்பதால், முட்டைகளை கருவுறச் செய்யும் வரை விந்தணுக்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்கிறது. எனவே உடலுறவுக்குப் பிறகும் ஐந்து நாட்களுக்குப் பிறகும் ஒரு பெண் கர்ப்பமாவதற்கு வாய்ப்பு உண்டு. ஆய்வுக் கூடத்தில் முறையாகப் பராமரிக்கப்பட்டால் ஆண்டுக்கணக்கில் உறைவு நிலையில் உயிருடன் இருக்கும். வெளிப்புற சூழலில் இரண்டு நாட்கள் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
தண்ணீரில் கழுவினால் போதுமா?
உறவு கொண்டதற்குப் பின் நன்றாகத் தண்ணீர் ஊற்றி பிறப்புறுப்பைக் கழுவி விட்டால் கர்ப்பம் அடைவதற்கு வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறார்கள். அதேபோல் பெண் சிறுநீர் கழித்துவிட்டால் கர்ப்பம் அடைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், ஆண் உயிரணுக்கள் கருப்பை வாயில் அதிகவேகமாக நீந்தும் திறன் பெற்றவை. விநாடிக்கும் குறைவான நேரத்தில் இவை கருமுட்டையைச் சென்றடைந்துவிடும். தண்ணீர் ஊற்றி கழுவுதல் அல்லது பெண் சிறுநீர் கழித்தால் இவை சிறுநீருடன் சேர்ந்து வெளியே வருவதற்கு வாய்ப்பில்லை.
இரண்டு உறை பாதுகாக்குமா..?
ஒன்றுக்கு இரண்டு ஆணுறைகள் பயன்படுத்தினால் பாலியல் நோய் பரவாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்று சிலர் அதி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதுண்டு. உண்மை என்னவென்றால், இது பாதுகாப்பற்றது. லாடெக்ஸ் எனப்படும் மெல்லிய ரப்பரால் ஆணுறை தயாரிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இரு ஆணுறைகளை அணிந்து உறவுகொண்டால், அப்போது ஏற்படும் அழுத்தம், உராய்வு காரணமாக இரண்டுமே கிழிந்துவிடவே அதிக வாய்ப்பு உண்டு. எனவே, இதன் காரணமாக கர்ப்பம் அடைவதற்கும் பாலியல் நோய் தாக்குவதற்கும் அதிக வாய்ப்பு உண்டு என்பதே உண்மை.
30 வயதுப் பெண்களுக்கு அதிக ஆசையா..?
ஆண்களுக்கு 35 வயது வரை பாலியல் ஆசை அதிகம் இருக்கிறது. பெண்களுக்கு 35 வயதுக்குப் பிறகே பாலியல் ஆர்வம் அதிகம் என்று சொல்லப்படுகிறது. உண்மை என்னவென்றால் வயதுக்கும் பாலியல் ஆர்வத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. காலம், நேரம், பாதுகாப்பு உணர்வு போன்றவை சரியாக இருந்தால் எல்லா காலமும் ஆணும், பெண்ணும் பாலியல் ஆர்வத்துடன் இருப்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.