ஆசிரியர் பார்வை
தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் நூலளவுதான் வித்தியாசம் என்பார்கள். ஆம், என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை, என்னால் மட்டுமே முடியும் என்பது தலைக்கனம். தன்னம்பிக்கை கொண்டவர்களை தேடிவரும் வெற்றியும், மகிழ்ச்சியும் தலைக்கனம் கொண்டவர்களை நெருங்குவதே இல்லை.
தலைக்கனம் என்பதைத்தான் அகங்காரம், கர்வம், செருக்கு, ஆணவம் என்று அலங்காரப் பெயர்களை வைத்து அழைக்கிறார்கள். எப்போது ஒருவன் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறானோ, அப்போதே அவனைச் சார்ந்தவர்களை எல்லாம் முட்டாளாகவே பார்க்கத் தொடங்கிவிடுகிறான். தன்னை உயர்த்திக்கொண்டு பிறறை தாழ்வாக நினைப்பதுதான் அகங்காரம்.
அகங்காரம் என்பது ஒரு போதையைப் போன்றது. நம்முடைய உண்மையான நிலையைவிட மேலானவர் என்று போலியாக உணரவைத்துவிடும். பொதுவாக படிப்படியாக வளர்ச்சி அடைந்த ஒருவர் அகங்காரம் கொள்வதில்லை. ஏனென்றால், எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்தோம் என்று அவருக்குத் தெரியும். அதனால், எந்த ஒரு செயலையும் முழு மனதுடன் முழுமையான முயற்சி எடுத்து செய்வார். வெற்றி அடைய வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுவார்
பிறவியிலே செல்வத்தில் திகழ்பவர்கள், அதிர்ஷ்டக்காற்று மூலம் மேலே வந்தவர்கள், குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர்கள் அகங்காரத்தின் பிடியில் இருப்பார்கள். பிறரை மட்டம் தட்டுவதும், தன்னை பிறர் புகழவேண்டும் என்று நினைப்பதும்தான் பதவிக்கு அழகு என்று நினைப்பார்கள்.
’நான் ஜெயிக்கா விட்டால் யார் ஜெயிப்பார்கள்?”. ‘இதெல்லாம் எனக்குச் சாதாரணம்’ என்ற எண்ணத்துடனே அகங்காரம் கொண்டவர்கள் எல்லாக் காரியத்திலும் இறங்குவார்கள். இவர்களிடம், ‘முயற்சி பண்ணுவோம். வெற்றி கிடைக்கப் பாடுபடுவோம்’ என்ற எண்ணங்களுக்குப் பதிலாக, ‘ஜெயித்துக் காட்டுகிறேன் பார்’ என்ற போட்டி மனப்பான்மைதான் இருக்கும்.
உயர் பதவி சிலருக்கு அகங்காரத்தைக் கொடுத்துவிடுவதுண்டு. அதாவது தன்னுடைய தனிப்பட்ட அதீத திறமையின் காரணமாகத்தான் இந்த உயர் பதவிக்கு வந்திருக்கிறோம், தன்னிடம் பிறரை விட அதிகம் திறமை இருக்கிறது என்று எண்ணம் வந்தவர்கள், அவர்களுக்குக் கீழே உள்ளவர்களையும், அவர்களைத் தேடி வருபவர்களையும் மதிக்கவே மாட்டார்கள். அவர்கள் அறிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான். அதாவது குறிப்பிட்ட செயலை செய்வதற்காகத்தான் அந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளதே தவிர, அதிகாரத்தைக் காட்டுவதற்கான அங்கீகாரம் அல்ல பதவி.
அகங்காரம் கொண்டவர்கள் ஒரு சில வெற்றிகளைப் பெற்றாலும், தொடர் வெற்றிகளைப் பெற்று சிறப்படைவதில்லை. ஆனால், அகங்காரமின்மை பெரிய பெரிய வெற்றிகளையும் கொண்டுவந்து சேர்த்துவிடும்.
அதுசரி, அகங்காரத்தை எப்படி ஒழிப்பது..?
வெரி சிம்பிள். நான் எப்போதும் ஒரு மாணவனாக கற்றுக்கொண்டே இருக்கிறேன் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதும். அகங்காரம் நம்மைவிட்டு ஓடியே போய்விடும். அத்துடன் ஆயிரம் நன்மைகளையும் எக்கச்சக்க நண்பர்களையும் கொண்டுவந்து சேர்த்துவிடும்.
இதைவிட வேறு என்ன வேண்டும்?
- எஸ்.கே.முருகன், ஆசிரியர் பார்வை












