விவாகரத்தின் விலை என்ன?

Image

பேரன்புக்குக் கொஞ்சம் விட்டுக்கொடுங்கள்

’மனசுக்குப் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடு’  என்று பேசுவது இந்த காலத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்பதை ஏற்றுக்கொண்டதால், நீதிமன்றத்தில் தினமும் விவாகரத்து வழக்குகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

திருமணத்திற்குப் பிறகு தாங்கமுடியாத கொடுமைகளை அனுபவிக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் விவாகரத்துதான் தீர்வு என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால், இன்றைய பெரும்பாலான விவாகரத்துக்குக் காரணமாக இருப்பது ஈகோ மட்டும்தான். இன்னொரு வகையில் சொல்வது என்றால் தன்னுடைய சுயநலம் மீதான பேரன்பு.  

இன்றைய நிலையில், ஆணைச் சார்ந்து பெண்ணும், பெண்ணைச் சார்ந்து ஆணும் வாழவேண்டிய கட்டாயம் இல்லை என்பது பிரிவதற்கு ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. முன்பு பெண் அடங்கிக்கிடந்ததற்கும், ஆணீன் கொடுமைகளை தாங்கிக் கொண்டதற்கும் இந்த சார்புதான் காரணமாக இருந்தது. ஆனால், அந்த வளையம் இப்போது உடைந்துவிட்டது.

‘உனக்கு கை நிறைய சம்பளம்.  உன்னையும் உன் பிள்ளைகளையும் நீயே கவனித்துக்கொள்ள முடியும். எனவே, எதற்காக, யாருக்கும் அடங்கிப் போக வேண்டும்..? யோசிக்காமல் தைரியமாய் முடிவெடு’ என்று உறவுகளும், நட்புகளும் ஆலோசனை சொல்கின்றன. இப்படி ஆலோசனை சொல்லும் நபர்கள் யாரும், கடைசிவரை ஆதரவாக நிற்க மாட்டார்கள் என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்துவதற்குப் போதுமானது அல்ல.  அதையும் மீறி பல தேவைகள் உடலுக்கும் மனதுக்கும்  இருக்கின்றன. எனவே விவாகரத்து செய்வதாக இருந்தால், அதுவும் குழந்தைகள் பிறந்த பிறகு பிரிவது என்றால் மீண்டும் மீண்டும் யோசிக்கத்தான் வேண்டும்.

ஏனென்றால் பெண்ணுக்கு வேறு ஒரு கணவன் கிடைக்கலாம். ஆணுக்கு வேறொரு மனைவி கிடைக்கலாம். ஆனால்  பிள்ளைகளுக்கு அவர்கள் எப்போதும் அம்மா, அப்பாவாக மாறிவிட முடியாது. காலம் முழுவதும் குழந்தைகளுக்கு ஒரு நெருடலும் வேதனையும் இருந்துகொண்டே இருக்கும். எதிர்காலத்தில் அவர்கள் ஒரு மோசமான கணவனாக அல்லது மோசமான மனைவியாக வாழ்வதற்கே வாய்ப்புகள் அதிகம். அப்படியொரு சூழலை குழந்தைகளுக்கு உருவாக்க வேண்டாம்.

பெரும்பாலான சண்டைகளுக்குக் காரணமாக இருப்பது சின்னச்சின்ன விஷயங்கள்தான். விட்டுக்கொடுத்தல் என்பதை மனிதர்கள் மறந்துவிட்டார்கள். இதற்கு காரணம், தன்னந்தனியாக வளர்வதுதான். இன்று பெரும்பாலான வீடுகளில் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளே இருக்கிறார்கள். எனவே அந்த குழந்தைகள் யாரும் யாருக்கும் விட்டுத்தருவதற்குத் தேவையும், அவசியமும் இல்லாமல் போய்விடுகிறது.

குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கித்தருவதற்கு பெற்றோர்கள் இருக்கிறார்கள். அதை கடமையாக நினைக்கிறார்கள். தனக்குக் கிடைக்காத எல்லாமே தங்கள் பிள்ளைக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தங்கள் பிள்ளை ஒரு தோல்வியும் பார்க்கக்கூடாது, எல்லாமே பெஸ்ட் ஆக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எதுவும் கிடைக்கும் என்ற சூழலில் வளரும் குழந்தை, தன்னை ஒரு முக்கியமான நபராக நினைக்கிறது. தன்னை பெற்றோரே கண்டிக்காத நிலையில், தன்னை விமர்சனம் செய்வதற்கு வேறு யாருக்கும் உரிமை இல்லை என்றே நினைக்கிறது. எனவே, தான் என்ற அகந்தையுடன் வளர்க்கிறது. இதே அகந்தையுடன் வரும் இணையுடன் இணைந்துபோக முடியாமல் தடுமாறுகிறார்கள். இருவரில் யார் பெரியவர், யார் சொல்வது சரி, யார் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பதில்தான் பிரச்னை உருவாகிறது. எந்த ஒரு விஷயத்திலும் புதிய நபருக்காக எதையும் விட்டுக்கொடுக்க மனம் வருவதில்லை. இதுதான், திருமணம் முடிக்கும் தம்பதியருக்குள் பெரிய பிரச்னையாக உருவெடுக்கிறது.

திருமணம் முடித்தவர்களுக்குள் ஒரு பாசப்பிணைப்பு உருவாவதற்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று மனநல ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். காதலித்து திருமணம் முடித்தவர்களுக்கும் இந்த காலம் தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை. இருவருக்கும் இடையில் ஒரு நல்ல  பாசப்பிணைப்பு உருவாக வேண்டும் என்றால், அதற்காக கொஞ்ச காலம் காத்திருக்கத்தான் வேண்டும். சில ஆண்டுகள் காலம் பொறுமையாக காத்திருந்தால் தம்பதியருக்குள்  பேரன்பு தோன்றிவிடும். சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்றவை இயல்பாகவே உருவாகிவிடும்.

ஆனால், திருமணம் முடித்த ஆறே மாதத்தில் சகிப்புத்தன்மையை இருவரும் இழந்துவிடுகிறார்கள். நான் இனி எதையும் விட்டுத்தர முடியாது, தன்னுடைய இணை மட்டுமே விட்டுத்தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றதும் சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது.

பிரிவதற்கு வாய்ப்பாக பெண் விடுதலை, ஆணாதிக்கம், சுயமரியாதை போன்ற சொற்களை இளைய தலைமுறையினர் சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். இணைவதற்கு எடுக்கும் முயற்சிகளைவிட, உடனே விவாகரத்து பெற்று வாழ்க்கையில் இருந்து வெளியேறிவிட அதிகம் துடிக்கிறார்கள். எப்படியாவது, இந்த வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்றுவிட வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களுக்கு குறிக்கோளாக இருக்கிறதே தவிர, அடுத்த வாழ்க்கை குறித்த அச்சம் அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை.

மீண்டும் ஏதேனும் ஒரு வாழ்க்கையை தேர்வு செய்யத்தான் வேண்டும். ஏனென்றால், தனித்து வாழ்வது ஒவ்வொரு நாளும் துயரமாக இருக்கும். யாருக்கும் பாரமாக நீண்ட நாட்கள் வாழ்ந்துவிட முடியாது. எனவே, ஏதேனும் ஒரு வாழ்க்கையை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்த இரண்டாவது வாழ்க்கையில் மிகவும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் உருவாகும். எத்தனை பிரச்னை என்றாலும் சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதற்காகத்தான் முதல் வாழ்வில் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தோமா என்ற எண்ணமும் ஏற்பட்டுவிடலாம்.

ஆகவே, முதல் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைத் தீர்க்க முயலுங்கள். ஏனென்றால், எல்லா வாழ்க்கையிலும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். திருமணம் முடித்த நபர்தான் பிரச்னை என்றால் விவாகரத்து என்ற முடிவுக்கு வரலாம். ஆனால், வேறு சில காரணங்கள்தான் பிரச்னை என்றால், அவற்றை களைய முயற்சிக்கலாம்.

தன் கணவனிடம் தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண்,  வேறு ஒரு ஆணிடம் தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுக்க முடியும்..?

அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணிடம் எப்படி அன்பை பெற்றுவிட முடியும்?

எல்லா மனிதர்களிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். அதனை பேரன்புடன் பார்த்தால், அந்த குறைகளுடன் அவர்களை ஏற்பது சாத்தியம்தான்.

மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்வதுதான் அறிவு. அது, வேறு ஒரு இடத்தில் கிடைக்கும் என்று தேடினால், அது எங்கேயும் கிடைக்காது என்ற உண்மையை கணவனும் மனைவியும் அறிந்துகொள்ள வேண்டும்.

Leave a Comment