- சூப்பரான மெடிக்கல் அட்வைஸ்
பொழுதுபோக்குவதற்கு இன்னும் கொஞ்சம் ஓய்வு நேரம் கிடைக்காதா என்று ஏங்கும் அளவுக்கு சமூகவலைதளங்கள் மனிதர்களை அடிமையாக்கி வைத்துள்ளன. ஆகவே, உடற்பயிற்சிக்கு கொஞ்ச நேரமே ஒதுக்கிறார்கள். இந்த நிலையில், உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சியை எந்த நேரம் மேற்கொள்வது என்ற கேள்வி நிறைய பேரிடம் இருக்கிறது.
மாலை நேர உடற்பயிற்சியே கூடுதல் பலன் தருகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். காலையில் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு, அடுத்தடுத்து செய்ய வேண்டிய பல வேலைகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால் கடிகாரம் பார்த்துக்கொண்டே பயிற்சிகள் செய்ய வேண்டியிருக்கும்.
மாலை நேரத்தில் வேலைகள் எல்லாம் முடிந்திருக்கும் என்பதால் மன அழுத்தமின்றி, வேறு சிந்தனையும் இல்லாமல் பயிற்சியில் ஈடுபட முடியும். இதனால் உடலிலும் மனதிலும் உள்ள அழுத்தம் குறைந்து, இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படுகிறது.
பெரும்பாலான நபர்கள் அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தசைகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை நீக்கவும் மாலை நேர உடற்பயிற்சி பயன்படுகிறது. மாலை நேரத்தில் எந்த அவசரமும் இருக்காது என்பதால் கூடுதல் நேரம் ஒதுக்கி பயிற்சி செய்ய முடியும்.
மாலையில் உடற்பயிற்சி செய்வது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருவதாகவும், அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரைவதற்கும் பயனளிக்கிறது. எனவே, பொன் மாலைப் பொழுதில் பயிற்சி என பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.