ஆச்சர்ய ஆரோக்கியம்.
நவீன அறிவியல் வளர்ச்சியின் காரணமாக, இன்றைய உலகம் மனிதனின் கைக்குள் அடங்கிவிட்டது. ஒருகாலத்தில், வேலைக்காகவும் பிற விஷயங்களுக்காகவும் வெளியில் சென்ற மக்கள், இன்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர். அதிலும் கணினி, லேப்டாப், செல்பேசி கிடைத்துவிட்டால் போதும், அனைத்து வேலைகளையும் வீட்டிலிருந்தபடியே முடித்துவிடுகின்றனர். குழந்தைகளும், வியர்வை சிந்தி விளையாடுவதைப் பார்க்க முடிவதில்லை. இதனால் பாதிக்கப்படுவது உடல்நலம் மட்டுமல்ல; மனநலமும்தான்.
தற்போது, இணையதள உலகம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த அசுர வளர்ச்சியோ ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு வழி வகுக்காமல், இணையத்துக்கு அடிமையாகும் சமூகத்தையே உருவாக்கிவருகிறது. இதனால் நன்மைகளைப் போலவே, தீமைகளும் அதிகரிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், இணையத்தில் அடிமையாக இருக்கும் ஒருவரால் அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைக்கூடத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. ஏன், சாப்பாட்டைக்கூட அவர்கள் விரும்புவது இல்லை.
ஒரு வாரத்துக்கு 38.5 மணிநேரத்துக்கும் அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துகிறவர், மனதளவில் அதற்கு அடிமை என்று அர்த்தம் என்கிறது ஓர் ஆய்வு. தவிர, மின்னணுக் கருவிப் பயன்பாட்டுப் பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டதில், இந்தியாவில் பலரும் மின்னணு கருவிகளுக்கு அடிமையாக இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். அவர்கள், நாளொன்றுக்குக் குறைந்தது 7 முதல் 10 மணி நேரம்வரை அதில் மூழ்கியிருப்பதாகவும் தவிர, உணவு சாப்பிடும்போதும், படுக்கும்போதும், கழிப்பறை செல்லும்போதும், வண்டி ஓட்டும்போதுகூட மின்னணு கருவிகளுக்கு அடிமையாக இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காலையில் தொடங்கி இரவுவரை ஒவ்வொருவரும் சராசரியாக ஏதாவது ஒரு வகையில் செல்போனை 150 தடவை பார்க்கிறார்கள் என அது தெரிவித்துள்ளது.
புதிதாக மின்னணுக் கருவிப் பயன்பாட்டுப் பிரச்சினை உருவாகிக் கொண்டிருப்பது பற்றி உலக நாடுகள் கவலை தெரிவித்துவரும் நிலையில், சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகள் இணைய அடிமைகளை ஒரு தீவிர பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உணர்ந்துள்ளன. மேலும், இணைய விளையாட்டுக்கு அடிமையாவது உடல்நலத்துக்குத் தீங்கானது என்று உலக சுகாதார நிறுவனம் மே 2019ல் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. மதுவிலிருந்து விடுபட மறுவாழ்வு நிலையங்கள் இருப்பதைப்போல, மின்னணுப் பயன்பாட்டுப் போதையிலிருந்து விடுபடுவதற்கும் மறுவாழ்வு மையங்கள் வெளிநாடுகளில் உள்ளன. இந்தியாவில் முதன்முறையாக, பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் இதற்கென ஒரு மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இணைய அடிமைகள் பெரும்பாலும் கீழ்க்கண்ட விஷயங்களுக்காகத்தான் அடிமைகள் ஆகின்றனர் என ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. தகவல்களை அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல், கட்டுப்பாடில்லாமல் இணையதள விளையாட்டுகளை விளையாடுதல், இணையவழி சூதாட்டம், இணையவழி ஷாப்பிங் மூலமாக விதவிதமான பொருள்களை வாங்குவதல், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மூலம் கிடைத்த இணையதள நண்பர்களுடன் நீண்டநேரம் உரையாடுதல், பாலின இன்பக் காட்சிகளைப் பார்த்தல் எனப் பல்வேறு விஷயங்களுக்காகத்தான் இணையதளவாசிகள் அடிமையாவதாக அது குறிப்பிடுகிறது.
இதில் பெரும்பாலும் தனிமை விரும்பிகள், கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பெற்றோர் – குடும்பத்தினரின் கவனிப்பு இல்லாதவர்கள், தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்களே அடிமைகளாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும், இணையதள வசதி மூலம் தங்கள் தாழ்வு மனப்பான்மை மனக்குறைகளை நிவர்த்தி செய்ய பயன்படுத்திக்கொள்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதனால் அவர்களுக்கு நேரத்தைக் கையாளுவதில் சிரமம் உண்டாகும். பொறுப்புகள் அனைத்தும் அரைகுறையாக நிற்கும். குடும்பத்துடன் ஆக்கப்பூர்வமாகச் செலவுசெய்ய நேரம் இருக்காது. உறவுகள், கல்வி, வேலைவாய்ப்புகளை இழக்க வேண்டி வரும். மன அழுத்தம், பதற்றம், தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, தற்கொலை மற்றும் தேவையற்ற எண்ணங்கள், தூக்கமின்மை, மது, பிற போதைக்கு அடிமையாதல் உள்ளிட்ட பல விளைவுகள் ஏற்படலாம் என்றும் அது தெரிவிக்கிறது.
இதிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமானால், முதலில் நாம் செய்ய வேண்டியது பாதிக்கப்பட்டவர்களுக்குக் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் உதவ வேண்டும். குறிப்பாக, ஒருவர் இணையதளத்தில் செலவிடும் தினசரி முறையைக் கண்டுபிடித்து, அதைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். தொடர்புடையவரின் அன்றாடச் செயல்பாட்டில் அவரது சிந்தனையைக் கவரும் வகையில் உள்ள மாற்றுப் பழக்கங்களைக் கண்டறிந்து பழக்க வேண்டும். இணையதள அடிமைப் பழக்கத்தால் கைவிடப்பட்ட அவரது வாடிக்கையான பழக்கவழக்கங்களைப் பட்டியலிட்டு அவருக்கு அதனை மீண்டும் தொடங்க வலியுறுத்த வேண்டும்.
கவனிப்பு அல்லது மேற்பார்வை இல்லாதவர்களைச் சுயஉதவி குழுக்களில் சேர்க்க வேண்டும். குடும்பம் சார்ந்த உறவுமுறை பிரச்சினைகளுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மனநிலை சார்ந்த பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுக வேண்டும் என இணையதள அடிமைவாசிகளைக் காப்பாற்றவும் அது தீர்வளிக்கிறது.
உண்மையில், இணையத்தை மட்டும் உலகமாக நம்பிக்கொண்டிருப்பது தவறு என உணர்வதே இணையதள அடிமைமுறையிலிருந்து விடுபடுவதற்கான முதல்வழியாகும். இணையத்தால் பல்வேறு நன்மைகளும் தீமைகளும் உண்டென்றாலும், தற்போதைய காலகட்டத்தில் பல வேலைகளுக்காக இணையதளத்தைப் பயன்படுத்தித்தான் ஆக வேண்டும். அதேநேரத்தில், தேவையில்லாமல் இணையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் உடல் நலத்துடன் வாழலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.