அறிவுசார் சொத்துரிமை சட்டம் தெரிஞ்சுக்கோங்க.
நீதிமன்றம் தொடர்பான செய்திகள் படிக்கும்போது அறிவுசார் சொத்துரிமை என்று அவ்வப்போது சில தகவல்கள் வரும். அப்படியென்றால் என்னவென்று தெரியாமலே கடந்து போகிறார்கள். அறிவுசார் சொத்து பற்றி விளக்கம் தருகிறார் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.நிலா.
அறிவுசார் சொத்து குறித்துப் பேசும் நிலா, ‘’அறிவுசார் சொத்து என்பது கற்பனையால் உருவாக்கப்படும் சொத்து. பொதுவாக ஒருவரது அறிவியல் கண்டுபிடிப்புகள், படைப்புகள், எழுத்து, ஓவியம், சின்னம் போன்றவைகளுக்கான உரிமை ஆகும். இது தொழில் ரீதியில் வர்த்தகத்திற்கான அடையாளம், வடிவமைப்பு போன்றவைகளை பாதுகாக்கிறது.

தலப்பாகட்டி பிரியாணி என்ற பெயருக்கு நடந்த வழக்கை அறிந்திருப்பீர்கள். அந்த பெயருக்கு உரிமை கோரி சட்டப்போராட்டம் நடத்திய காரணத்தால், இப்போது வேறு யாரும் அந்த பெயரை பயன்படுத்த முடியாமல் போனது. இந்த வகையில் தொழில் துறையில் உருவாக்கப்படும் தனித்துவம் அறிவுசார் சொத்து என கருதப்படுகிறது. வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் முத்திரையை பதிவு செய்து உரிமை கோர முடிகிறது. இதன் மூலம் ஒருவரது உழைப்பை பிறர் எளிதாக சுரண்டுவது தடுக்கப்படுகிறது.
அதேபோன்று எழுத்தாளர், ஓவியர், இசையமைப்பாளரின் படைப்புகள் மீதான உரிமையை நிலை நாட்டுவதும் அறிவுசார் சொத்து தான். இளையராஜாவின் பாடலை மஞ்சிம்மல் பாய்ஸ் படத்தில் பயன்படுத்தியதற்கு எதிராக நோட்டீஸ் கொடுத்த காரணத்தாலே, அவரால் இழப்பீடு வாங்க முடிந்தது. இப்போதும் அவர் பல்வேறு சட்டப் போராட்டம் இதற்காகவே நடத்திவருகிறார்.
இளையராஜா சட்டப்போராட்டம் நடத்துவது போலவே திருப்பதி லட்டுக்கும் சட்டப்போராட்டம் நடந்து, இப்போது அதற்கு காப்புரிமை கிடைத்துள்ளது. அதனால் தான் திருப்பதி லட்டு உருண்டையின் அளவு, தரம், மணம் போன்று எங்கேயும் தயாரிக்கப்படுவது இல்லை. இது போல் குறிப்பிட்ட இடத்தில் விளையும் பொருட்கள், தயாரிப்புக்கு காப்புரிமை பெற முடியும். அதேபோல் ஒரு புதிய தயாரிப்பு, கண்டுபிடிப்பு போன்றவைகளுக்கும் காப்புரிமை வழங்கப்படுவதுண்டு.
நம் இந்தியாவில் காப்புரிமை சட்ட மசோதா 1999ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ஒருவரது தயாரிப்பை மற்றவர் காப்பியடிப்பது தவிர்க்கப்படுகிறது. இதனால் உங்களது உழைப்பு வீணாகும். லாபமும் குறையும். இதைத் தவிர்க்கத்தான் காப்புரிமை பெறுவது அவசியம். பொருளுக்கு மட்டுமின்றி வடிவமைப்புக்கும் (டிசைன்) காப்புரிமை பெறலாம்.
காப்புரிமை அலுவலகம் மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. காப்புரிமை அலுவலகத்தின் தலைமையகம் கொல்கத்தாவிலும் கிளை அலுவலகங்கள் புதுடெல்லி, மும்பை மற்றும் சென்னையில் உள்ளன. இதனால் சென்னையிலேயே காப்புரிமை பெறலாம்.
பொதுவாக ஒரு பொருளுக்கு 20 ஆண்டுகளுக்குக் காப்புரிமை வழங்கப்படும். அதன் பிறகு மீண்டும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். புதிதாக எந்த ஒரு தொழில்நுட்பத் தயாரிப்புகளுக்கும் காப்புரிமை வழங்கப்படும். ஏற்கெனவே உள்ள பொருள்களில் புதிய மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தால் அதற்கும் காப்புரிமை பெறலாம். கண்டுபிடித்த ஓராண்டுக்குள் அதற்கு காப்புரிமை பெற வேண்டியது கட்டாயமாகும்
இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை குறித்த தகவல்கள் பற்றிய விவரத்தை ipindia@nic.in என்ற மின்னஞ்சல் மூலமும், சென்னை அலுவலகம் பற்றிய விவரத்தை chennai-patent@nic.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டும் பெறலாம்.
நம் இந்தியாவில் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் காப்புரிமைக்கு விண்ணப்பம் செய்கிறார்கள் என்றால் இவர்களில் 85 சதவீதம் பேர் வெளிநாட்டினர். தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் விற்பதற்காக காப்புரிமை செய்கின்றனர். நம் மக்களுக்கு இன்னமும் அந்த அளவுக்கு விழிப்புணர்வு வரவில்லை என்பது உண்மை.
இந்தியாவில் காப்புரிமை செய்தால் அது இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும். வேறு நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பி காப்புரிமை பெற விரும்பினால் இந்தியாவில் பதிவு செய்த ஓராண்டுக்குள் எந்த நாட்டில் காப்புரிமை பெற விரும்புகிறோமோ அந்த நாட்டில் காப்புரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- எம்.நிலா, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.
தொடர்புக்கு: 7299753999