டாக்டர் மாலா பாலகோபால், சூர்யா மருத்துவமனை
இந்த விஞ்ஞான யுகத்தின் ஓர் அம்சமாக கண்களில் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக கம்ப்யூட்டர், செல்போன் காரணமாக கண்களுக்கு அதிக சிரமம் உண்டாகிறது. இதுதவிர, பிறவிக் குறைகளும் அதிகரித்து வருகின்றனர். கடந்த இதழில் இதுகுறித்து விவரித்த சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையின் கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் மாலா பாலகோபால் மேலும் சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கிறார்.
தலைவலிக்கும் கண்களுக்கும் என்ன தொடர்பு? அதற்கு தீர்வு என்ன?
தலைவலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கண் நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் அடிக்கடி தலைவலி வரும். எனவே, அடிக்கடி தலைவலி வருகிறது என்றால், அலட்சியம் காட்டாமல் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்வது மிக அவசியம். கண்ணில் உள்ள பார்வை நரம்பில் வீக்கம் ஏற்பட்டால் பாப்பிலிடெமா (Papilledema) என்ற குறைபாடு ஏற்படும். மூளையில் நீர் அழுத்தம் (CSF Pressure) அதிகமாவதால் பார்வை நரம்பில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் தலைவலி, அவ்வப்போது பார்வை மறைதல், இரட்டைப் பார்வை போன்ற குறைபாடுகள் ஏற்படும்.
பார்வை நரம்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து கண் மற்றும் மூளையை இணைக்கும் இடம் பார்வைத் தட்டு (Optic Disc) எனப்படும். இந்த குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் வீக்கம் பார்வை நரம்பு வீக்கம் (Papilledema) எனப்படும். மூளை மற்றும் மூளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் அழுத்தத்தால் இந்த வீக்கம் ஏற்படுகிறது. அடிக்கடி இதுபோன்ற வீக்கம் ஏற்பட்டால் அது தீவிர உடல் நலப் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். பார்வை நரம்பில் ஏற்படும் வீக்கத்தினை விரைவில் கண்டறிந்து சிகிச்சையளிக்காவிட்டால், பார்வையிழப்பு ஏற்படும்.
நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்தம் அழுத்தம், கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமா? பாதிப்புகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
நீரிழிவு நோய் கட்டுக்குள் இல்லாதவர்களுக்கு கண் விழித்திரையில் பாதிப்பு ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது விழித்திரைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுகின்றன. விழித்திரை பாதிப்பால் கண் பார்வை பாதிக்கப்படும். ஆரம்பத்தில் பிரச்சினை இருக்காது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல கண் பார்வை மங்கும். சிலருக்கு திடீரென்று பார்வைக் குறைபாடு ஏற்படலாம். விழித்திரை பாதிப்பினால் கண் பார்வை முழுமையாகக் குறையலாம். பெரும்பாலானோருக்கு, டயாபெட்டிக் ரெட்டினோபதி கண் பாதிப்பு சர்க்கரை நோயால் உண்டாகிறது. நீரிழிவால் அதிகரிக்கும் கண் பிரச்சனை காரணத்தால் கண்ணழுத்த நோய் உண்டாகலாம்.
முறையான கண் பரிசோதனை மூலம் இதை எளிதில் கண்டறியலாம். லேசர் சிகிச்சை முறையினால் கண் பார்வை குறைவதை அதிகமாகாமல் தடுக்க முடியும். அதுபோல், உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாமலிருந்தாலும், கண்கள் பாதிக்கக்கூடும். கண் பார்வை குறைய நேரிடும். இதில் எளிதில் கண்டுகொண்டால், லேசர் சிகிச்சையினால் தக்க சிகிச்சை அளிக்க முடியும். இதைத் தவிர்க்க உயர் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். மொத்தத்தில், சர்க்கரையின் அளவு உயர் ரத்தத்தின் அளவு மற்றும் கொழுப்புச் சத்துகளின் அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருந்தால் கண் விழித்திரை பாதிப்பைத் தவிர்க்க முடியும்.
