• Home
  • சக்சஸ்
  • மார்க் அதிகம் எடுப்பதற்கு என்ன தேவை..?

மார்க் அதிகம் எடுப்பதற்கு என்ன தேவை..?

Image

உழைக்கலாம் ஜெயிக்கலாம்

நன்றாக படிக்கும் மாணவனிடம் உனக்கு நிறைய திறமை இருக்கிறது என்பதால் உன்னால் நிறைய மதிப்பெண் வாங்கமுடியும் என்று சொல்லிக்கொண்டே வந்தால் அவன் திறமை மீது நம்பிக்கை வைப்பான். எப்போதாவது ஒரு முறை மதிப்பெண் குறைந்துவிட்டால், அவனது நம்பிக்கை முழுமையாக வடிந்துவிடும் எனக்கு உண்மையில் திறமை இல்லை என்று நினைக்கத் தொடங்குவான். அதனால் அடுத்த பரிட்சையில் இதைவிட குறைவான மதிப்பெண்ணே வாங்குவான்.

அதே மாணவனிடம் நீ நன்றாக உழைக்கிறாய் அதனால் உன்னால் நிறைய மதிப்பெண் பெற முடிகிறது. உன்னால் எப்படிப்பட்ட பரிட்சையிலும் வெல்ல முடியும் என்று சொல்லிவந்தால் உழைப்பின் மீது நம்பிக்கை வைப்பான். எப்போதாவது மதிப்பெண் குறைந்தால், நாம் போதுமான அளவுக்கு உழைக்கவில்லை என்று உணர்வான். அதனால் அடுத்த பரிட்சைக்கு இன்னமும் அதிகமாக உழைக்கத் தொடங்கி எளிதில் நல்ல மதிப்பெண் வாங்குவான்.

இதுதான் உழைப்புக்கும் திறமைக்கும் உள்ள வித்தியாசம். உழைப்பை நம்புபவன் தன்னம்பிக்கையுடன் திகழ்வதையும் திறமையை நம்புபவன் அவநம்பிக்கையுடன் வாழ்வதையும் பார்க்கமுடியும்.

இந்த உலகில் திறமை இல்லாத மனிதர்கள் என்று யாரையும் சொல்லமுடியாது. ஒவ்வொரு நபரிடமும் தனித்திறமை இருக்கவே செய்யும். ஆனால் அந்த தனித்திறமையால் மட்டும் ஒருவரால் வெற்றி பெறமுடியாது. அந்த திறமையை பட்டை தீட்டி ஜொலிக்க செய்வதுதான் உழைப்பு. திறமையால் வெற்றி பெறுபவனை உலகம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதேநேரம் உழைப்பால் வெற்றி பெறுபவனை உலகம் மறப்பதே இல்லை. ஏனென்றால் திறமை தனிப்பட்ட சொத்து. உழைப்பு எல்லோராலும் கொடுக்க முடிந்த திறமை. எல்லோரும் வெற்றி பெறமுடியும் என்பதை உழைப்பு சொல்லிக்கொடுக்கிறது.

உழைப்பாளிக்கு ஒரு தோல்வி கிடைக்கும்போது போதிய உழைப்பு கொடுக்கவில்லை என்று சாதாரணமாக எடுத்துக்கொள்கிறான் மனிதன். அதனால் வெற்றிக்காக கடுமையாக போராட தயாராகிறான். ஆனால் திறமைசாலிக்கு ஒரு தோல்வி கிடைக்கும்போது, அவன் மனதில் பயம் உண்டாகிறது. என்னுடைய திறமை மங்கிவிட்டது என்ற அவநம்பிக்கை தோன்றிவிடுகிறது. அதனால் போட்டியில் இருந்து பின்வாங்குகிறான்.

திறமை மட்டும் உள்ளவன் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. என்னுடைய திறமையே போதும் என்று இருப்பான். அதனாலே காலவோட்டத்தில் பின் தங்கிவிடுகிறான். அதனால் திறமைசாலி, புத்திசாலியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதையே பெருமையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த உலகில் வெற்றிபெற்ற ஒவ்வொரு மனிதரையும் ஆராய்ந்து பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். ஆரம்பத்தில் சாதாரண மனிதராக இருந்திருப்பார். தன்னுடைய திறமை என்னவென்பதை கண்டுபிடித்திருப்பார். அந்தத் துறையில் இரவு பகலாக உழைத்திருப்பார். அதனாலே வெற்றியாளராக உயர்ந்திருப்பார். அத்தனை வெற்றியாளர்களும் இந்த கட்டத்திற்குள்தான் அடங்குவார்கள்.

ஒருவர் வெற்றியாளர் ஆனதும் உலகமே அவரை திரும்பிப்பார்க்கும். ஏராளமான பரிசுகளும், பாராட்டுகளும் குவியும். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பார்கள். அதனாலே மேலும் மேலும் வெற்றி பெறுவார்கள். வெற்றிக்குப் பிறகும், தன்னுடைய திறமை உலகிற்கு தெரிந்தபிறகும் தன்னுடைய உழைப்பை வெற்றியாளர்கள் நிறுத்திக்கொள்வதில்லை. அதனாலே சாதனையாளர்களாகவும் மாறுகிறார்கள்.

ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெற்று முதல் பரிசு வாங்குபவருக்கு அனைவரும் கை தட்டி பாராட்டு தெரிவிக்கிறார்கள். கண்கள் பணிக்க ஆனந்த புன்னகையுடன் அவர் பரிசு வாங்கும் காட்சி அனைவருக்கும் பிடித்தமானதாகவே இருக்கும். ஆனால் அந்த சந்தோஷ தருணத்திற்காக அவர் கொடுத்திருக்கும் விலை யாருக்கும் தெரியாது. ஆம், எத்தனை வருடங்கள் அவர் காலையில் எழுந்து பயிற்சி செய்தார், எப்படியெல்லாம் கடுமையாக உழைத்தார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். இறுதி போட்டியை மட்டும் பார்ப்பவர்களுக்கு அவர் மிகவும் சாதாரணமாக ஓடி, மற்றவர்களை வெற்றி பெற்றதாக தெரியும். ஆனால், அந்த இடத்தை அடைவதற்கு எத்தனை தூரம் உழைத்தார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அவரிடம் ஓடும் திறமை இருந்தாலும், மற்றவர்களைவிட கடுமையாக உழைத்ததால்தான் அவரால் பரிசு வாங்க முடிந்தது என்பதுதான் உண்மை.

அதனால் வெற்றி பெற வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், செல்வாக்குடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவது பெரிதல்ல. முதலில் தன்னிடம் உள்ள தனித்தன்மை எது, திறமை எது என்பதை தெளிவாக உணரவேண்டும். அதன்பிறகு அந்த திறமையை வெளிப்படுத்தும் வகையில் கடுமையாக உழைக்க வேண்டும். உடனடி பலனை எதிர்பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருந்தால், நிச்சயம் சாதனையாளராக உருமாறியிருப்பீர்கள். அப்போது உங்களைத் தேடி பணம், புகழ், செல்வாக்கு அத்தனையும் தானாகவே வந்து சேரும்.

Leave a Comment