கேட்டுச் சொல்லுங்க சாமியார்களே…
அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், தொழிலதிபர்கள், அதிகார வர்க்கத்தினர், உழைக்கும் வர்க்கத்தினர் என உலகில் பெரும்பான்மை மக்கள் கடவுள் நம்பிக்கையாளராக இருக்கிறார்களே.
கடவுள் நம்பிக்கையாளர் என்பதன் அர்த்தம், அவர்களுடைய பெற்றோர் காட்டிய வழியில், அவர்கள் பிறந்த மதத்தைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர் சொல்லிக்கொடுத்த வழியில் கடவுளை வழிபடுகிறார்கள். ஏன், எதற்கு என்று அவர்கள் பெற்றோரிடம் காரணம் கேட்டிருக்க மாட்டார்கள்.
காரணம் கேட்டிருந்தாலும், அவர்களுக்குத் தெளிவான பதில் கிடைத்திருக்காது. ஏனென்றால், பெற்றோருக்கும் பதில் தெரியாது. எனவே, ‘பெரியவங்க சும்மாவா சொல்லியிருப்பாங்க, இத்தனை பேர் சாமி குடும்பிடுறாங்க, நீயும் கும்பிடு. ரிஷி மூலம் நதி மூலம் கேட்பது அபச்சாரம்’ என்று ஏதேனும் சொல்லி வாயை அடைப்பார்கள்.
அதேநேரம், ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களே விஞ்ஞானிகளாக, அறிவியல் ஆய்வாளராக உருமாறுகிறார்கள். அதனால் தான் அறிவியல் ஆய்வாளர்களில் பெரும்பாலோர் கடவுள் மறுப்பாளர்களாக இருக்கிறார்கள்.
சர் ஐசக் நியூட்டர் இயற்கை விதியை கண்டுபிடித்த பிறகு தான், இந்த உலகத்தைக் கடவுள் படைத்தார் என்ற கோட்பாடு உடையத் தொடங்கியது. அவரது வழியில் அண்டோயின் லாரண்ட் டீலாவாய்ஸியர் பொருண்மை அழியா விதியை 1789ம் ஆண்டு கண்டுபிடித்ததும், ‘இந்த உலகத்தைக் கடவுள் படைக்கவில்லை’ என்பது அறிவியல்பூர்வமாக உறுதிபடுத்தப்பட்டது.
இன்று பள்ளிகளில் இயற்பியல் பாடத் திட்டத்தில், ‘பொருண்மை அழியா விதி’ எனப்படும் The Law of Conservation of Mass ஒரு பாடமாக உள்ளது. இந்த விதி சொல்லும் கருத்து ரொம்பவே சிம்பிள். அதாவது, எந்த ஒரு பொருளையும் புதிதாக உருவாக்கவோ, அல்லது முழுமையாக அழிக்கவோ முடியாது என்பதுதான் அந்த அறிவியல் விதி. அதாவது ஒரு தீக்குச்சியில் இருந்து நாம் சாம்பலை உருவாக்கலாம். ஆனால் ஒன்றுமில்லாததில் இருந்து சாம்பல் உருவாக்க முடியாது.
எனவே, இந்த பிரபஞ்சத்தை எந்தக் கடவுளும் படைக்கவில்லை, இந்தப் பிரபஞ்சம் தினம் தினம் மாறிக்கொண்டிருக்கிறது ஆனால் பிரபஞ்சத்தின் இருப்பை யாரும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. காற்றும், தூசி துகள்களும் ஈர்ப்புவிசையால் ஒன்றுசேர்க்கப்பட்டு சூரியன் போன்ற நட்சத்திரங்களும் பூமி போன்ற கோள்களும் உருவானதாக அறிவியல் நிரூபித்துள்ளது.
“கடவுள் இல்லை, கடவுள் உலகத்தை படைக்கவில்லை” என்ற அறிவியல் உண்மையை ஓர் அறிவியல் இயக்கம் போல் தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் சொன்னவர் பெரியார்.
தத்துவப் பேராசான் காரல் மார்க்ஸ், “மதம் என்பது துன்பத்தில் இருப்பவர்களுக்கு தற்காலிக ஆறுதல் தரும் காகித மலர் போன்றது. காகித மலருக்குப் பதிலாக அறிவியல் பார்வை என்ற உயிருள்ள மலரை அவர்களுக்கு அடையாளம் காட்டுவதே நமது பணி.” என்று சொன்னதை பின்பற்ற வேண்டிய நிலை இன்றும் இருக்கிறது.
அறிவியலாளர்கள் எத்தனை தீவிரமாக கடவுள் பற்றி பேசுகிறார்களோ, அதைவிட தீவிரமாக மதவாதிகள் இயங்குகிறார்கள். கடவுள் இல்லை என்று சொன்ன கெளதம புத்தரையே அடுத்துவந்த மதவாதிகள் கடவுளாக மாற்றி கும்பிடத் தொடங்கினார்கள்.
இந்த உலகை கடவுள் படைக்கவில்லை என்று சொன்ன நியூட்டனையும் கடவுள் படைத்ததாக போப் ஆண்டவர் கூறியது குறிப்பிடத்தக்கது. நியூட்டன் இறந்ததும் போப் அனுப்பிய அஞ்சலியில், ‘இயற்கையும் அதன் விதிகளும் இருளில் கிடந்தன. கடவுள்… நியூட்டன் பிறக்கட்டும் என்றார். ஒளி பிறந்தது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தான் மதவாதிகளின் ஆதிக்க சக்தி. அதாவது, இந்த உலகை கடவுள் படைக்கவில்லை என்று நியூட்டனை சொல்ல வைத்ததும் கடவுளின் சக்தி என்று குழப்பத்தை ஏற்படுத்தி குளிர் காய்வார்கள். இது அன்று முதல் இன்று வரையிலும் அப்படித் தான் நடக்கிறது.
500 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உருவான சூரியன் இன்னும் 500 கோடி ஆண்டுகளில் சாம்பலாகிப் போகும். பூமியும் அதற்கு சற்று முன் சாம்பலாகிவிடும். அதற்கும் முன்பாக தொலைதூரத்தில் உள்ள வேறு ஏதேனும் ஒரு சூரிய குடும்பத்தில் பூமி போன்ற தண்ணீர் நிறைந்த ஓர் இளம் கோளைக் கண்டறிந்து அங்கே மனிதகுலத்தை குடியேற்றிவிட வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் தொலைநோக்குத் திட்டம்.
எந்தக் கடவுளும் மனிதருக்காக இப்படி சிந்திக்கப் போவதும் இல்லை, செயலாற்றப் போவதும் இல்லை.
மேஜிக் செய்பவர்கள் காற்றில் இருந்து புறாவை வரவழைப்பதில்லை என்பது பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியும். அவரிடம் நிஜமாகவே காற்றிலிருந்து புறாவை வரவழைக்கச் சொன்னால், அவரால் முடியாது.
எனவே, கடவுளை பார்க்க நேர்ந்தால், பூமியில் இல்லாத ஒன்றை உருவாக்கச் சொல்லுங்கள். அப்படி செய்துவிட்டால், அவரை கடவுள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.
– திருஞானம்.