• Home
  • ஞானகுரு
  • மாத விலக்கு நாளில் கோயிலுக்குப் போனால்..?

மாத விலக்கு நாளில் கோயிலுக்குப் போனால்..?

Image

ஞானகுரு தரிசனம்

ஞானகுருவை சந்திக்க வந்தார் மகேந்திரன். அவராகவே பேசத் தொடங்கினார். ‘’இன்று கோயிலுக்குப் போவதற்கு நினைத்திருந்தோம், மனைவிக்கு அந்த மூன்று நாட்கள் ஆரம்பமாகிவிட்டது. அதனால் நானும் செல்லவில்லை. உங்களை சந்திக்க வந்துவிட்டேன்’’ என்றார்.

‘’கோயிலுக்குப் போனால் தீட்டு, என்னை சந்திக்க வந்தால் தீட்டு இல்லையா..?’’ சிரித்தபடி கேட்டார் ஞானகுரு.

‘’மனிதரை சந்திக்கலாம், கடவுளைத்தான் சந்திக்கக்கூடாது. மாதவிலக்கு நாட்களில் அந்த பெண் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் கோயிலுக்குப் போகக்கூடாது என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது..’’

‘’அப்படியா..? மாதவிலக்கு நாளில் பெண்கள் ஏன் கோயிலுக்குப் போவதில்லை என்று தெரியுமா?’’ ஆர்வமுடன் கேட்டார் ஞானகுரு.

‘’ஒண்ணும் தெரியாதவர் மாதிரி கேட்குறீங்க. மாதவிலக்கு நாட்களில் ரத்தம் வெளியாகிறது. பெண்கள் உடல் அசுத்தமாக இருக்கிறது. அவள் இந்த நாட்களில் குளித்தாலும் சுத்தமாகி விட்டதாக அர்த்தம் எடுத்துக்கொள்ள முடியாது. பெண்ணுக்கு ரத்தப்போக்கு நேரத்தில் அதிக பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் வெளியாவதால் கோயில் அசுத்தமாகிவிடும்.

மேலும் கோயிலில் நடக்கும் பூஜைகள், புனஸ்காரங்களில் சக்தி மேல் நோக்கிச் சென்று இறைவனை அடைகிறது. ஆனால், பெண் உதிரம் கீழ் நோக்கி பாயும் ஆற்றலும் சக்தியும் கொண்டது. அவள் உடல் உஷ்ணத்தை அதிகம் வெளியேற்றும். இவை எல்லாம் இறை சக்தியை தடுமாறச் செய்யும். இந்த காலகட்டத்தில் பெண் உடம்பிலும் மனதிலும் தீய எண்ணங்கள் தோன்றுகின்றன. அவையும் கோயிலுக்குள் வரும் பக்தர்களின் எண்ண அலைகளைப் பாதிக்கும். பெரியவர்கள் காரணமில்லாமல் எதையும் சொல்லவில்லை’’ என்று முடித்தார் மகேந்திரன்.

‘’பெண் இப்போது நாப்கின் பயன்படுத்துகிறாள், அதனால் ரத்தம் கசிவதில்லை, பிறகு ஏன் அவளுக்குக் இந்த கட்டுப்பாடு? கோயிலுக்குள் எத்தனையோ நோயாளி வருகிறார், அவரிடமிருந்து பாக்டீரியா பரவாதா..? கொலையாளி வருகிறார், கொள்ளைக்காரர் வருகிறார், அவர்களிடமிருந்து தீய எண்ணங்கள் மற்றவர்களுக்குப் பரவாதா..? ரத்தம் வரும் உடல் தீட்டு என்றால் சிறுநீர் வரும் உடல், மலம் தங்கியிருக்கும் உடல் தீட்டு இல்லையா..?’’

‘’குதர்க்கமாகப் பேசாதீங்க… பிறகு எதுக்கு பெரியவங்க அப்படி சொன்னாங்க..?’’

‘’முன்பு எல்லோரும் ஆறு, குளம், கிணறு போன்ற எல்லோருக்கும் பொதுவான நீர்நிலைகளில் குளித்தார்கள். பெண்கள் அந்த நாட்களில் குளிப்பதால் நீர்நிலை அசுத்தம் அடையும் என்பதால் குளிக்கக்கூடாது என்று சொன்னார்கள். குளிக்காமல் கோயிலுக்குப் போவது சுத்தமில்லை என்று கட்டுப்படுத்தினார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. அந்த மூன்று நாட்களும் வீட்டில் குளிக்கிறார்கள், சுத்தமாக இருக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள்.

மாதவிலக்கு காலத்தில் படிக்கவும், சம்பாதிக்கவும் பெண்ணை வெளியே அனுப்பும் ஆண்கள் அவர்களை கோயிலுக்குச் செல்ல மட்டும் அனுமதிப்பதில்லை. இதை பெண்களும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் இன்னமும் அடிமை எண்ணத்திலே இருக்கிறார்கள். அதுசரி, சித்தர்கள் இதற்கு என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா..? சித்தர்களும் முன்னோர்கள் தானே…’’

‘’கண்டிப்பாக. அவர்களும் அந்த காலத்தில் பெண்கள் கோயிலுக்குப் போகக்கூடாது என்றுதானே சொல்லியிருக்கிறார்கள்…’’

‘’பெண் இல்லையென்றால் ஆண் இல்லை. ஆண் இல்லை என்றால் கடவுளும் இல்லை. சிவவாக்கியர் பாடலைக் கேள்.  

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே.

இதன் அர்த்தம் தெரியுமா..? பத்து மாத காலங்கள் தாயின் கருவறையில் அடங்கி நின்ற தீட்டினால் உயிர் வளர்ந்து, கைகள் இரண்டு, கால்கள் இரண்டு, கண்கள் இரண்டு ஆகி மெய்யாகிய உடம்பு திரண்டு உருவானது. அதில் சத்தம் கேட்கும் காதுகளும் ரசமாகிய சுவை உணர வாயும், கந்தமாகிய நாற்றம் உணர மூக்கும் தோன்றி சுத்தமான உடம்பு ஆனதும் உலகோர் சொல்லும் தீண்டத்தகாத தீட்டினால் உருவானதே என்பதே உண்மை.

ஒரு உயிரைப் படைக்கும் பெண் தீட்டு என்றல் அவள் தீட்டில் பிறந்த அத்தனை மனிதரும் தீட்டு. இந்த கோயிலும் தீட்டு, கடவுளும் தீட்டு’’ என்று சிரித்தார் ஞானகுரு.

அவரது சிரிப்பில் கலந்துகொள்ள முடியாமல் தவித்தார் மகேந்திரன்.

Leave a Comment