டோண்ட் ஒர்ரி டிப்ஸ்
ஒருவரை வயதானவராகக் காட்டுவதில் சரும சுருக்கத்திற்கு முக்கிய பங்குண்டு. அதனாலே சுருக்கத்தைக் கண்டு மிரளாத பெண்கள் எவருமில்லை. முன்னர் ஆண், பெண் அனைவரும் உடலில் உள்ள அத்தனை தசைகளுக்கும் வேலை கொடுத்துக் கொண்டே இருந்ததால், உடல் தசைகள் நீண்டகாலம் பளபளப்பாக இருந்தது. ஆனால் இன்று உடல் உழைப்புக்குத் தேவையில்லாத நிலைமை வந்துவிட்டதால், சரும சுருக்கமும் சீக்கிரமாகவே ஆஜராகி விடுகின்றது.
பொதுவாக சருமத்தை மூன்று வகையாக மருத்துவ நிபுணர்கள் பிரித்துப் பார்க்கிறார்கள். அதாவது வறண்ட சருமம், எண்ணெய் பசையான சருமம், சாதாரண சருமம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இதில் எண்ணெய் பசை கொண்ட சருமத்தினருக்கு, எப்போதும் முகத்தில் எண்ணெய் இருப்பதால் சுருக்கம் வர தாமதமாகிறது. மற்ற வகையினருக்கு சீக்கிரமாகவே இந்த பாதிப்பு வந்துவிடுகின்றது.
அதிலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சீக்கிரம் பாதிப்பு நேர்கிறது. குளிர் பிரதேசத்தில் இருப்பவர்களும் இந்த சிக்கலால் அதிகம் அவதிப் படுகின்றார்கள். மிகவும் சின்ன வயதிலேயே ஃபேஷியல், பிளீச்சிங் செய்து கொள்பவர்களுக்கும் விரைவில் சுருக்கம் வந்துவிடுகின்றது.
வெயில் சருமத்திற்கு எதிரி ஆகும். அதனால் நீண்ட நேரம் வெயிலில் சுற்றித் திரிவதால் சருமம் கருத்துப் போவது மட்டுமின்றி, குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே சுருக்கத்தை வரவழைத்து விடும்.
சுருக்கம் வந்த பிறகு அதனை சரிப்படுத்த முயல்வது மிகவும் சிரமமாகும். அதனால் சுருக்கம் வருவதற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சுருக்கம் வர இருப்பதற்கான முதல் அறிகுறி கண்களைச் சுற்றிலும் மற்றும் கழுத்திலும் தெரியத் தொடங்கும். இந்த நேரத்திலேயே தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கி விட வேண்டும். தாமதமாகத் தொடங்கினால் பலன் கிடைக்கத் தாமதமாகலாம், அல்லது கிடைக்காமலே போகலாம்.
இந்த சுருக்கத்தில் முதல் விஷயம், வறண்ட சருமம் உள்ளவர்கள் மாயிசரைசர் உள்ள சோப் பயன்படுத்தக் கூடாடு. அதிகம் கோபப் படுவது, சிந்தனை வசப்படுவது, ஆவேசப் படுவது போன்றவையும் சுருக்கத்தை வரவழைப்பனவே ஆகவே இருபத்தைந்து வயது ஆனதில் இருந்தே தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கி விட வேண்டும்.
* சுருக்கம் வராமல் காப்பதில் முதலிடம் பிடிப்பது தண்ணீர்தான். நிறைய நிறைய தண்ணீர் குடிப்பவர்களுக்கும், பச்சைக் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுபவர்களுக்கும் சுருக்கம் மிகவும் தாமதமாகவே வருவது கண்டறியப் பட்டுள்ளது.
* வாரம் இரண்டு முறை பாலாடையை முகத்தில் தடவி கழுவி வந்தால் சுருக்கம் வராமல் தடுக்கலாம்.
* உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரைப் பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுப்பது, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுருக்கங்கள் உண்டாவதைத் தடுக்கும்.
* பப்பாளிப் பழத்தை நன்றாக மசித்து அதனை சிறிதளவு முல்தானி மட்டி அல்லது கடலை மாவுடன் கலந்து கொஞ்சம் கிளிசரினும், பன்னீரும் சேர்த்து குழைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் போடலாம். சிறிது நேரம் காயவைத்து குளித்து வந்தால் சருமத்திற்கு ஆரோக்கியம்.
* முட்டைக்கோஸை அப்படியே பச்சையாக நசுக்கி சாறு எடுத்துக் கொண்டு, அத்துடன் ஈஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தேனும் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் சருமத்தின் வறட்சியைப் போக்கும்.
* வெள்ளரிச்சாறு, பன்னீர், எலுமிச்சம் பழச்சாறு மூன்றும் சம அளவு கலந்த கலவையையும் தடவிக் கழுவலாம்.
* முட்டையை நன்றாக அடித்து முகம் மற்றும் கழுத்தில் தடவவும். அது நன்றாகக் காய்ந்ததும் முகத்தைக் கழுவி விடவும். வாரம் ஒரு முறை இந்த சிகிச்சையைச் செய்து வந்தால் ஆரம்ப நிலையில் உள்ள சுருக்கங்களும் காணாமல் போகும், சருமம் என்றென்றும் இளமையுடன் நீடிக்கும்.
சருமத்தின் கடைசி அடுக்கில் உள்ள எபிடெர்மிஸ் தான் செல் உற்பத்திக்கு வழி செய்கிறது.இந்த எபிடெர்மிஸ் பகுதி மெல்ல மெல்ல அதன் உற்பத்தி திறனை குறைத்து முகத்தில் சுருக்கத்தை ஏற்படுகிறது. இந்த விளைவால் சருமம் மெல்லியதாக மாறி வயதான தோற்றத்தை தருகிறது.
வயது ஆக ஆக சருமத்தின் உறுதித்தன்மை வலுவிழந்து விடுகிறது.இதனால் தோல் தளர்வாக தோற்றமளிக்கிறது. எனவே முகம் பொலிவிழந்து காணப்படுகிறது . கொலாஜென் மற்றும் எலாஸ்டின் ஆகி இரண்டும் தான் உங்கள் சருமத்திற்கு உறுதியான, மென்மையான, மிளிர்வான தோற்றத்தை கொடுக்கிறது. 20 வயதிற்கு மேல் இவைகளின் உற்பத்தி சுழற்சி குறைவதால், உங்கள் சருமத்தின் உறுதித்தன்மை குறைகிறது, குறிப்பாக தாடை மற்றும் கன்னங்களைச் சுற்றி பல மாற்றங்கள் வருகிறது.
இதற்கு முழுக்க முழுக்க காரணம் முகத்தில் உள்ள செல்கள் சிதைவடைவதே.இதனால் பொலிவான,இளமையான முகம் கூட சோர்ந்து மங்கலாக காணப்படும். இந்த செல்கள் சிதைவடைவதால் பத்து வருடத்திற்கு ஒரு முறை 7% செல்கள் புதுப்பித்தல் நிகழ்வு நம் முக சருமத்தில் குறைந்து விடும். இதனால் முகம் மங்கலாகவே காணப்படும்.
சுருக்கத்தை சரி செய்வதற்கு மிக எளிய வழி ஒன்று இருக்கிறது. முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.இந்த வெள்ளை கரு, சருமத்தை திடமாக வைத்து கொள்ள உதவுகிறது. அதனுடன் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் நிறைந்த தேன் கலந்து நன்கு கலக்கவும்.அத்துடன் எலுமிச்சை சாற்றை சிறிது கலந்து மீண்டும் கலக்கவும்.பின்பு அதனை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் கழுவி விடவும்.இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முகம் இளமையாகவே இருக்கும்.












