வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டாம் என்று சாஸ்திர ரீதியாக சொல்வதை மருத்துவம் ஏற்பதில்லை. அதேநேரம், இடது பக்கம் திரும்பிப் படுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை என்பதை ஏற்றுக்கொள்கிறது.
பெரும்பாலான மனிதர்கள் நேராகப் படுத்துத் தூங்குவதை விரும்புகிறார்கள். குழந்தைகள் குப்புறப் படுத்து தூங்குவதை விரும்புகிறார்கள். படுக்கையில் கை, காலை விரித்துப் படுப்பவர்கள் உண்டு. இப்படி விதம்விதமாகப் படுப்பதை விட இடது பக்கமாக தூங்குவது உள் உறுப்புகளுக்கு நல்லது என்கிறார்கள்.
பெரும்பாலும், இரவு நேரங்களில் தான் பலரும் நெஞ்செரிச்சல் பிரச்னையை அனுபவிக்கிறார்கள். அவர்கள் இடது பக்கமாகப் படுத்துத் தூங்குகையில் இரைப்பையில் உள்ள அமிலம் உணவுக்குழாய்க்குள் செல்லும் வாய்ப்பு குறைகிறது. மேலும், கழிவுகளை சிறு குடலிலிருந்து பெருங்குடலுக்கு அனுப்புவதும் இதனால் எளிதாவதால் சிறந்த முறையில் ஜீரணமாகிறது. அதோடு இடது பக்கத்தில் தூங்குவதன் மூலம் குறட்டை ஒலியும் கட்டுக்குள் வருகிறது.
இடதுபுறமாக படுப்பது கர்ப்பிணிப் பெண்களுக்கும் கருவுக்கும் ரத்தவோட்டம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. அதோடு இதயம் மண்ணீரல், சிறுநீரகம் ஆரோக்கியம் பெறுகிறது. மேலும் முதுகு மற்றும் கழுத்து வலி வராமல் தடுக்கிறது. இத்தனை நன்மை கிடைக்கையில் இடது பக்கத்தை மறக்காதீங்க.