நகம் கடித்தால் என்னாகும்..?

Image

பல் நலக் குறிப்புகள்

ஒரே ஒரு புன்னகை போதும், எதிரே உள்ள நபர் டோட்டல் சரண்டர் ஆகிவிடுவார்கள். அப்படி ஓர் அழுத்தமான புன்னகைக்கு பற்கள் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். பல் தேய்த்தலை கடமையாகத்தான் பலரும் மேற்கொள்கிறார்களே தவிர, ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதை உணர்வதில்லை.

பல் தேய்க்கும் பிரஷ்ஷை தேர்வு செய்வதும், பயன்படுத்துவதும் முதல் முக்கியமான விஷயம். ஏனென்றால் ஒரே பிரஷை பல மாதங்கள் பயன்படுத்துவதால் எந்த பலனும் இருக்காது. அதிகபட்சம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பிரஷ்ஷை மாற்றிவிட வேண்டும். பல்லில் ஏதேனும் பிரச்னை, பல்கூச்சம் உள்ளவர்கள் சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை பயன்படுத்தலாம்.


ஃப்ளோரைட் உள்ள பற்பசையானது பற்களுக்கு வலிமை சேர்க்கக்கூடியது.  ட்ரைக்ளோசான் உள்ள பற்பசைகள் ஈறுக்கு வலிமை சேர்க்கும். ஜெல் உள்ள பற்பசைகளில் வாசனைதான் நிரம்பியிருக்கும். அதனால், உங்களுக்கு ஏற்ற பேஸ்ட் எதுவென மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம். பல் துலக்கிய பிறகு நாக்கை சுத்தம் செய்வது அவசியம். அழுத்தித் தேய்ப்பதால் பற்களின் மேல் இருக்கும் கிருமிகள், உணவுத் துகள்கள் பல் இடுக்கில் தங்கிவிடும். இதனால் பற்கள் தேயவும் வாய்ப்பு உள்ளது.

ஒருநாளைக்கு காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்குவது மிகவும் அவசியம். பல் துலக்கிய பிறகு ஈறுகளை மென்மையாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். பற்களை நீண்ட நேரம் துலக்கக் கூடாது. ஏனெனில், அது பல்லின் வெளிப்புறத்தில் உள்ள எனாமலைத் தேய்த்துவிடும்.

இயற்கையான கரும்பு, அன்னாசிப்பழம் போன்ற சில உணவுப் பொருட்கள் நம்முடைய பற்களை சுத்தம் செய்யும் தன்மைகொண்டது. அதிக அளவில் நார்ச்சத்து உள்ள பச்சைக் காய்கறி போன்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது உடலுக்கும், பற்களுக்கும் ஆரோக்கியமானது.

பற்களை வலுவாக்க, ஈறுகளை வலுவாக்க, பல் கூச்சத்தைப் போக்கக்கூடிய மவுத் வாஷ்களைப் பயன்படுத்த வேண்டும். புத்துணர்வு தரக்கூடிய மவுத் வாஷ்கள் ஈறுகளைப் பலப்படுத்தும்.  இரவு படுக்கும்போது உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்துவிட்டுப் படுப்பது பற்களுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும்.

கார்போஹைட்ரேட்கள், சர்க்கரைப் பொருட்கள் பற்சிதைவைத் தூண்டும் காரணிகள் என்பதால் கவனமாக இருத்தல் வேண்டும். மேலும் பற்களால் நகத்தைக் கடித்தல், பென்சில் போன்ற பொருட்களைக் கடித்தல், குண்டூசி மற்றும் குச்சியால் பற்களைக் குத்துதல் போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. இவை பற்களில் நோய்த் தொற்றினை ஏற்படுத்திவிடும்.

கார்பன் டை ஆக்ஸைடு கலந்த குளிர்பானங்கள் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலைப் பாதிப்பதோடு பற்களையும் அரிக்கின்றன. பானங்களைக் குடித்தே ஆக வேண்டிய சமயங்களில் இயன்றவரை ஸ்ட்ரா மூலம் அருந்தலாம்.

பற்களின் பாதுகாப்புக்கும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் வர வாய்ப்பு இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.  பற்களில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது.

வலியுள்ள பல்லின் மீது திரிகடுகுப் பொடியை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்திருந்தால் வாயினின்று உமிழ்நீர் கூடுதலாக வெளியேறும். வலி தணியும். 2  முறை வீதம் ஓரிரு நாட்கள் செய்தால் நன்கு பயனளிக்கும்.
 
பல் கூச்சத்தை பேக்கிங் சோடா கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு 2 வாரத்திற்கு ஒருமுறை வாயைக் கொப்பளிக்க பல் கூச்சத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 
தினமும் காலையில் பற்களைத் துலக்கும் முன் தேங்காய் எண்ணெய் வாயில் ஊற்றி 5 நிமிடம் கொப்பளித்து துப்ப வேண்டும். இம்முறையால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.  ஒரு துண்டு சுக்கை கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர பல் வலி தீரும்.

ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும். இஞ்சி சாற்றில் தேன்  கலந்து குடித்தால் பல் வலி குணமாகும். உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம்  பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.

கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி மறையும். கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.

Leave a Comment