டாக்டர் பதூர் மொய்தீன் மனநல ஆலோசனை
நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எமனாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுவதற்கான காரணத்தையும், அதனை தடுக்கும் வழிகளையும் விவரிக்கிறார், சென்னை மூலக்கடையில் உள்ள ஃபாத்திமா நர்சிங் ஹோம் தலைமை மருத்துவர் டாக்டர் பதூர் மொய்தீன்.

மாணவர்கள் மரணத்திற்கும் மற்றவர்கள் மரணத்திற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. ஆம், மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் பெரும்பாலும் சட்டென தோன்றுகிறது என்பதுதான் உண்மை.
குறைந்த மதிப்பெண் கிடைத்தவுடன் வீட்டுக்குப் போனால் அடிவிழும் என்ற அச்சம், பரிட்சையில் தோல்வி அடைவதால் அவமானம் கிடைக்கும் என்ற எண்ணம், தேர்வு முடிவு குறித்த அச்சத்தில் என்ன செய்வது என்று புரியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒருசிலர் ஊரைவிட்டு தப்பியோடுகிறார்கள். இந்த அச்சம் அவர்கள் மனதுக்குள் நீண்ட நாட்களாகவே இருக்கும் என்றாலும், பரீட்சை நெருங்குவது, ரிசல்ட் வெளிவரும் நாட்களில் அவர்களை திடீரென முடிவெடுக்க வைத்துவிடுகிறது. அதனால்தான் நீட் தேர்வு நெருங்கும் நாட்களில் அதிக தற்கொலை நடக்கிறது. இந்தத் தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை ஒரே நாளில் அவர்களுக்கு வழங்கிவிட முடியாது.
- மதிப்பெண், ஃபெயில் போன்றவை வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை என்று சின்ன வயதில் இருந்தே கற்பிக்க வேண்டும்.
- ஒவ்வோர் ஆண்டும் பொதுத்தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைகிறார்கள். அவர்கள் எல்லோருமே தற்கொலை செய்வதில்லை என்ற உண்மையை மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
- ஒரு மாணவன் தோல்விக்காக தற்கொலை செய்ய, அதே போன்று தோல்வி அடைந்த வேறு மாணவன் மீண்டும் படித்து பாஸ் ஆகிறான். இதுதான் சரியான வழி என்று சொல்லித்தர வேண்டும்.
- மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது பெற்றோருக்கும் இதனை புரியவைக்க வேண்டும் .மதிப்பெண்ணுக்காக குழந்தைகளைத் திட்டுவது அல்லது அடிப்பது எந்தப் பலனும் கொடுக்காது என்பதை சொல்லித்தர வேண்டும். ஏனென்றாலும் குடும்பத்தினருக்குப் பயந்துதான் பெரும்பாலான மாணவர்கள் தற்கொலை முடிவு எடுக்கிறார்கள்.
வயசுக் கோளாறு
பொதுவாகவே டீன் ஏஜ் வயதினர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். தங்கள் உடல் பலம், மன பலம் மீது அபார நம்பிக்கை உண்டு.தன்னால் எதையும் செய்யமுடியும் என்று உறுதியாக நம்புவார்கள், ஆனால் அப்படி எதுவும் தன்னால் செய்ய இயலாது என்ற உண்மை தெரியவரும்போது கடுமையான ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள்.
பொதுவாக கல்விப் பருவ வயதினருக்கு ஏதேனும் சிக்கல் தோன்றும்போது இரண்டு வழிகளை தேர்வு செய்கிறார்கள். முதல் வழி போதைப் பொருட்கள் மூலம் தங்கள் ஏமாற்றத்தை, தோல்வியை மறைக்க முயல்கிறார்கள். போதைப் பொருட்களை தேர்வுசெய்ய விரும்பாதவர்கள் அல்லது அச்சப்படுபவர்கள் தற்கொலை எண்ணத்துக்கு ஆளாகிறார்கள்.
பெரும்பாலான பருவ வயதினர் தங்களுடைய பிரச்னைகளை, பெரியவர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை. அதனை அவமானமாகக் கருதுகிறார்கள். யாரேனும் ஒரு பெரியவரை சந்தித்து தப்பிக்கும் வழி தேட முயற்சி செய்வதில்லை. ஏனென்றால் அவர்கள் பார்வையில் பெரியவர்கள் அனைவருக்கும் போதிய அறிவு இல்லை என்றே நினைப்பார்கள்.
அதனால் பெற்றோர் செய்யவேண்டிய மிகப்பெரிய கடமை ஒன்று உள்ளது .கல்லூரிப் படிப்பு முடியும் வரையிலும் தினமும் தாய் அல்லது தந்தை அரை மணி நேரமாவது உரையாடுதல் வேண்டும். டீன் ஏஜ் வயதினர் பேசுவதற்கு விரும்பமாட்டார்கள், தப்பித்துச்செல்லவே ஆசைப்படுவார்கள். ஆனாலும் அன்பு காட்டி அவர்களிடம் பேசுவதற்கு பெற்றோர் முயற்சி எடுக்க வேண்டும்.
அதேபோல், பிள்ளையின் தோழர்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.அவர்களிடமும் அன்புடன் பழக வேண்டும்.பெற்றோர் சொல்லாத விஷயங்களைக்கூட நண்பன் சொன்னால் கேட்பார்கள்.அதனால் நண்பர்களை பெற்றோர் தங்கள் ஆதரவாளராக மாற்றிக்கொள்ள வேண்டும்.பிள்ளைக்கு ஏதேனும் மன சங்கடம், பிரச்னை இருப்பது தெரிந்தால், நண்பரிடம் கேட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த விஷயமாக இருந்தாலும் பிள்ளை தானே வந்து பேசட்டும் என்று அமைதி காக்க வேண்டியதில்லை.முதிர்ச்சி அடையாத மனம், பிடிவாத குணம், அலட்சிய மனப்பான்மை போன்றவை டீன் ஏஜ் வயதினரின் இயல்புகள் என்றாலும் அன்பினால் அதனை வெல்வதற்கு பெற்றோர் முன்வர வேண்டும். அன்பும் அரவணைப்பும்தான் டீன் ஏஜ் வயதினரின் மரணத்தைத் தடுக்கக்கூடியது.
படிப்புதான் வெற்றியா?.
கல்வி கற்பதன் நோக்கம் சிறந்த வேலைவாய்ப்பு என்றுதான் பலரும் கருதுகிறார்கள். நல்லா படிச்சாத்தான் டாக்டர் ஆகலாம், பைலட் ஆகலாம் என்று சொல்லித்தரும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் உண்டு. உண்மையில் கல்வி கற்பதன் நோக்கமானது, தன்னுடைய திறனை அறிந்து அதற்கேற்ற வகையில் சமுதாயத்துடன் இணைந்து வாழ்வது ஆகும்.
படிப்புக்கும் வாழ்க்கை வெற்றிக்கும் ஒரு தொடர்பும் கிடையாது. ஏனென்றால் பள்ளியில் மந்தமாக படித்த எத்தனையோ பேர் இந்த சமுதாயத்தில் மாபெரும் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அதற்கு எடிசன், லிங்கன், சாப்ளின் போன்ற எத்தனையோ சாதனையாளர்களை உதாரணமாகக் காட்ட முடியும். அதனால் பள்ளிக் கல்வி வாழ்க்கைக்கு முக்கியம்தான். ஆனால், கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல. அதனால் மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டால் அல்லது ஒரு பரிட்சையில் தோல்வி அடைந்துவிட்டால் இந்த உலகத்தில் வாழ்வதற்கான தகுதியை இழந்துவிட்டதாக கருதக்கூடாது.
ஏனென்றால், படிப்பு என்பது வாழ்க்கைக்கு நம்பிக்கை தரக்கூடியதாக மட்டுமே இருக்கவேண்டும். எத்தனை தோல்விக்குப் பிறகும் இந்த உலகில் வாழமுடியும் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும்.ஆனால், இன்றைய கல்வி முறை இப்படித்தான் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பள்ளிகளில் மதிப்பெண் வேட்டைதான் நடக்கிறது.அதனால்தான் வெற்றியைத் தொடமுடியாத மாணவர்கள், வாழ்வதற்குப் பிடிக்காமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
ஒரு சிலர் மட்டும் ஏன்?
எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டம், எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ஆசிரியர் பாடம் நடத்துகிறார், எல்லோருக்கும் ஒரே நேரத்தில் பரிட்சை நடக்கிறது. அதாவது அனைவருக்கும் கல்வி கற்பதற்கு சமமான வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும் ஒருசிலர் மட்டுமே மாபெரும் வெற்றி அதாவது 100 மதிப்பெண் பெறுகிறார்கள், ஒருசிலர் படு மோசமாக அதாவது 0 மதிப்பெண் வாங்கி தோல்வி அடைகிறார்கள்.
இதற்கு அர்த்தம் ஒருவன் நன்றாக படித்தான், ஒருவன் சரியாக படிக்கவில்லை என்று நேர்க்கோட்டில் அர்த்தம் எடுத்துக்கொள்கிறார்கள்.அது தவறு ஒருவனுக்கு வெற்றிக்கான சூழல் வாய்த்தது, மற்றவனுக்கு அப்படி வாய்க்கவில்லை என்பதுதான் உண்மையான அர்த்தம். ஒரு மாணவனின் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக அமையும் சூழல்களைப் பார்க்கலாம்.
- மாணவனின் கற்கும் சூழலில், குடும்ப அமைப்பு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. பெற்றோர் இருவரும் நன்றாகப் படித்து, உயர்ந்த வேலையில் இருக்கிறார்கள், வீட்டில் கற்றுத்தர தாத்தா, பாட்டி இருக்கிறார்கள் என்றால், அந்த மாணவனுக்குப் புரிதல் எளிதாக இருக்கும். அதேநேரம் குடித்துவிட்டு வரும் தந்தை, அடுப்பு வேலையில் சிரமப்படும் தாய், படிப்பு இல்லாதமுதியவர்களுடன் வசிக்கும் மாணவனுக்குப் புரிதல் நிச்சயம் சிரமமாகவே இருக்கும்.
- அதே போல் பள்ளிக்குப் போகாமல் எப்போதும் விளையாடும் சிறுவர்கள் இருக்கும் தெருவில் குடியிருக்கும் மாணவனுக்கும் விளையாடத்தான் ஆசை வருமே தவிர, படிப்பதற்கு அல்ல.
- உடல் நலம் படிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரிவிகித உணவு எடுத்துக்கொண்டு நல்ல எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாகத் திகழும் மாணவனுக்கும், உடல் நலிந்த நோயாளி மாணவனுக்கும் நிச்சயம் புரிதலில் வித்தியாசம் இருக்கவே செய்யும்.
- பள்ளி அமைவிடம், மாணவன் அமரும் இருக்கை, உடன் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர் மாற்றம், வீட்டுப்பாடம் போன்ற பல்வேறு விஷயங்களும் மாணவர்களின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதனால் எல்லா மாணவர்களாலும் நன்றாகப் படிக்கவும், அதிக மதிப்பெண் பெறுவதும் இயலாது. ஒவ்வொரு மாணவனும் அவனுடைய தகுதிக்கும் திறமைக்கும் ஏற்பத்தான் படிக்கவும் மதிப்பெண் பெறவும் முடியும் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளை நிறைய மதிப்பெண் பெற வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள்.குறிப்பாக பக்கத்துவீட்டுப் பையனைவிட நன்றாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காகத்தான் தங்கள் பிள்ளையை அடித்து, மிரட்டி, டியூசன் அனுப்புகிறார்கள்.எப்படியேனும் படித்து நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்று பிள்ளைகளை வலியுறுத்துகிறார்கள்.
இந்த இடத்தில் ஒவ்வொரு பெற்றோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் உள்ளது.அது என்ன தெரியுமா?
எல்லா மாணவருக்குமே தாங்கள் நிறைய மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆசை உண்டு. எல்லா மாணவருக்குமே தங்களை பெற்றோரும், ஆசிரியரும் பாராட்ட வேண்டும் என்ற ஆசை உண்டு. எல்லா மாணவருக்குமே தாங்கள் மேடையில் ஏறி முதல் பரிசு வாங்கவேண்டும் என்ற ஆசை உண்டு.
ஆனால் அப்படி தங்களால் வெற்றி பெறமுடியவில்லை என்றதும், அந்த மாணவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. இதனை போக்குவதற்கு பெற்றோரும், ஆசிரியரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதால் தோல்வியும் குறைந்த மதிப்பெண்ணும் அவர்களுக்குத் தொடர்ந்து கிடைக்கிறது.
நம்பிக்கை அளித்தல்
ஒரு முறை தோல்வி அடைந்த மாணவனை அடிப்பது, கண்டிப்பது, தண்டனை கொடுப்பது போன்றவை மாணவருக்கு பெருத்த அவமானம் தருகிறது. அதனால் தன் மீதான நம்பிக்கை குறைந்துபோகிறது.தன்னால் பாடத்தை நன்றாகப் படிக்க முடியாது, நிறைய மதிப்பெண் பெற இயலாது என்ற நிலைக்கு ஆளாகிறான். அடுத்த பரிட்சையின்போது பதட்டம் அடைகிறான்.அந்தப் பதட்டமே தோல்விக்கு வழி வகுத்துவிடுகிறது.
அதனால் குறைந்த மதிப்பெண் பெறுதல் அல்லது பாடத்தில் தோல்வி அடைதல் போன்ற நிலையில் மாணவருக்கு பெற்றோரும் ஆசிரியரும் கொடுக்கவேண்டியது நம்பிக்கை மட்டுமே. தினமும் மாணவர் மனதில் விதை போன்று நம்பிக்கையை விதைக்க வேண்டும். மனதில் உறுதி இல்லாத மாணவர்கள் தினமும் மந்திரம் போன்று வாய்விட்டு சொல்ல வேண்டிய மந்திரச்சொற்கள் இவை.
நான் வெற்றியாளன், நான் ஆற்றல் நிரம்பியவன், நான் நன்றாக படிப்பவன், எனக்கு நல்ல ஞாபக சக்தி உள்ளது, நான் ஆரோக்கியமானவன், நான் தைரியமானவன், நான் தோல்விகளைக் கண்டு அஞ்சாதவன், நான் அறிவாளி, நான் புத்திசாலி, நான் சுறுசுறுப்பானவன், நான் தலைமைக்குத் தகுதியானவன், நான் உறுதியானவன், நான் திறமைசாலி, நான் ஒழுக்கமுடையவன், நான் நல்லவன், நான் வல்லவன், நான் அதிக மதிப்பெண் எடுப்பவன் – இதுபோன்ற வாக்கியங்களை தினமும் மாணவன் கண்ணாடி முன் நின்று சொல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
தினமும் இப்படி சொல்வது மாணவனுக்கு உண்மையிலே தன்னம்பிக்கையும் ஆற்றலும் கொடுக்கும் என்பதை நன்கு அறிய முடியும்.
ஓரு மாணவன் பெருவெற்றி அடைவதற்கு நாம் இதுவரை பார்த்த பல்வேறு விஷயங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. இவற்றை செய்து தராமல் தேர்வு தோல்வி அல்லது மதிப்பெண் குறைவுக்கு மாணவனை தண்டிப்பதற்கு பெற்றோருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்பதுதான் உண்மை. அதனால் மாணவனை கண்டிக்கும் முன்பு, மாணவன் வெற்றிக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
நல்ல பள்ளியில் சேர்த்து நிறைய பணம் கட்டிவிடுவது மட்டும் மாணவன் வெற்றிக்குப் போதாது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்திருக்க வேண்டும். பெற்றோர் உணரவில்லை என்றால் ஆசிரியர்கள் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
தோல்வி ஏற்பட்டால் பரவாயில்லை, அடுத்த முறை நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று நம்பிக்கை கொடுப்பார்கள்.அந்த தேறுதல் நிச்சயம் அது அவன் மனதில் மாற்றத்தை உருவாக்கும்.ராபர்ட் புரூஸ் 17 முறை தோல்வி அடைந்தான் என்பதால் தோல்வியைக் கண்டு அஞ்சக்கூடாது என்று ஊக்கம் தர வேண்டும்.தோல்வியின் போது ஆறுதலாக தோள் தரும் பெற்றோர் அமைந்துவிட்டால், நாட்டில் மாணவர்கள் தற்கொலை இல்லாமல் போய்விடும்.