அதிரவைக்கும் நம்பிக்கை
இந்த உலகம் முழுவதும் மக்களுக்கு கண் திருஷ்டி மீது நம்பிக்கை உள்ளது.
எதிர்பாராமல் உடல் நலக் குறைவு, பிரச்னை, தடை ஏற்படுவதற்கு திருஷ்டியே காரணம் என்கிறார்கள். பொறாமை பார்வையே தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே கண் திருஷ்டி. வெற்றிலையில் கற்பூரம் வைத்து எரிப்பது, கல் உப்பு சுற்றிப் போடுவது, தேங்காய், பூசணிக்காய் உடைப்பது, குங்குமத்துடன் எலுமிச்சம் பழம் நறுக்கிப் போடுவது, வத்தல் எரிப்பது போன்றவை கண் திருஷ்டியைக் கழித்துவிடும் என்று நம்புகிறார்கள்.
திருஷ்டி கழிப்பதால் பெரிய செலவு இல்லை. அதேநேரம், மிகப்பெரும் நம்பிக்கை, நிம்மதி கிடைக்கிறது. ஆகவே, தினமும், வாரம் ஒரு நாள், வெளியே போய் வந்ததும் திருஷ்டி கழிப்பதை நிறைய வீடுகளில் பழக்கமாக வைத்த்திருக்கிறார்கள்.
ஒருவரது பார்வை இன்னொரு நபரின் வாழ்க்கையைப் பாதிக்குமா என்பதைப் பார்க்கலாம். தெரிந்த நபர் ஒருவர் திடீரென கோபமாக முறைக்கிறார் என்றால், பொறாமையுடன் பேசுகிறார் என்றால் அது நிச்சயம் மனதைப் பாதிக்கும். அதேநேரம், தெரியாத ஒரு நபர் முறைத்தாலும், பொறாமைப்பட்டாலும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. இதிலிருந்து பார்வைக்கு எந்த சக்தியும் இல்லை என்பதே உண்மை என்பதை புரிந்துகொள்ள முடியும்.
அதனாலே, வலிமையான மனம் படைத்தவர்கள் திருஷ்டியால் பாதிப்பு ஏற்படும் என்பதை நம்புவதில்லை. தொடர் வெற்றி பெறும் நபர்களுக்கு கண்டிப்பாக நிறைய எதிரிகள் இருப்பார்கள். எதிரிகள் பார்வையல் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை. நன்றாக விற்பனை நடக்கும் ஒரு கடையைக் கண்டு பக்கத்துக் கடைக்காரர் பொறாமைப்படுவதால், அங்கு விற்பனை குறையாது.
திருஷ்டி என்பது மாய வலை. இந்த பொய்யான நம்பிக்கையில் இருந்து தப்பிக்க விரும்புபவர்கள் தினமும் இந்த மூன்று மந்திரங்களை வாய் விட்டுச் சொல்வதுடன், மனதார நம்பவும் வேண்டும்.
- என் வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இருக்கிறது, என் மனதையும் உடலையும் யாராலும் கெடுக்க முடியாது.
- என்னிடம் இருக்கும் தன்னம்பிக்கையும் திறமையும் அபாரமானது. ஒரு பார்வையால் என்னை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
- பிறரது பொறாமை, கோபத்தை நான் மதிப்பதில்லை, அவர்களைத் தாண்டி நான் முன்னேறிக்கொண்டே இருப்பேன்.
இந்த மூன்று மந்திரச்சொற்களையும் தினமும் சொல்லுங்கள். திடீரென உடல் நலன் குறை, தோல்வி, நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு உண்மையான காரணத்தைக் கண்டறியுங்கள். பார்வையால் ஒருவரை தோல்வி அடையச் செய்யமுடியும், நோயில் தள்ள முடியும் என்றால், இந்த உலகில் எந்தவொரு பிரபலமும் ஆரோக்கியமாகவே இருக்க முடியாது. எனவே, திருஷ்டியை நம்பி ஏமாறாதீர்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
