டாக்டர்.எம்.ஜெயராஜா, MD.,DM.,, சூர்யா மருத்துவமனை, சென்னை.
நமது உடலுக்குள் எல்லாப் பாகங்களிலும் இரத்தக் குழாய்கள் உள்ளன. அவற்றுள் நமக்குத் தெரியாமலேயே எந்நேரமும் இரத்தம் ஓடிக்கொண்டே இருக்கிறது. இத்தகைய இரத்த ஓட்டம் சீராக நடைபெற்றால்தான், உடலில் உள்ள அங்கங்கள் அனைத்துக்கும் தேவையான சக்தி, ஆக்ஸிஜன் போன்றவை கிடைக்கும். உடலுக்குள் இரத்த ஓட்டம் தடையின்றி நடைபெற ஓர் உந்து சக்தி தேவைப்படுகிறது. இத்தகைய உந்து சக்தி, ஒவ்வொரு முறை இதயம் துடிக்கும்போதும், ஓர் அலைபோல உடல் முழுவதும் பரவி இரத்த ஓட்டத்தை நடைபெற வைக்கிறது. இதைத்தான் இரத்த அழுத்தம் என்கிறோம். நாம் உயிரோடு வாழ இரத்த அழுத்தம் தேவை. சிலருக்கு இந்த அழுத்தம் அதிகமாகிப் போவதைத்தான் இரத்தக் கொதிப்பு என்கிறோம்.
இரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்களில் பெரும்பாலோர்களுக்கு ஆரம்ப அறிகுறியே இருக்காது. மிகச் சிலருக்கு தலைவலி, உடல் சோர்வு. படபடப்பு போன்ற அறிகுறிகள் இருக்கலாம். அநேக சமயங்களில் இந்நோய் இருப்பதை, தற்செயலாக இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும்போதே தெரியும்.
இதனால்தான் 30 வயதிற்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறையேனும் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது என்று சொல்கிறோம். இரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து பரிசோதித்து வந்தால் நமக்கு மிகுதியான இரத்த அழுத்தம் உள்ளதா என்று தெரிந்து கொள்ளலாம். மிகுதியான இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அடிக்கடி மயக்கம் மற்றும் தலைவலி உண்டாகும்.
ஒரு சராசரி மனிதனுக்கு எவ்வளவு இரத்த அழுத்தம் இருக்கலாம்?
இரத்த அழுத்தத்தை நாங்கள் Sphyg Monado Meter என்ற கருவியால் அளக்கிறோம். சமீப காலங்களில் எலக்ட்ரானிக் கருவிகளும் புழக்கத்தில் வந்துள்ளன. இரத்த அழுத்தம் குறிப்பிடும்போது, இரண்டு எண்கள் மேலும், கீழுமாக எழுதப்படும். மேலே குறிக்கப்படுவது சிஷ்டாலிக் பிரஷர் எனப்படும்.
ஒவ்வொரு இதயத் துடிப்பின்போதும். இதயம் சுருங்கி விரிவடைவதால், இரத்த அழுத்தமும் ஓர் அலைபோல் மேலெழும்பி பிறகு கீழே இறங்குகிறது. மேலே எழும்பும்போது உண்டாகும் அழுத்தம்தான் சிஷ்டாலிக் பிரஷர். கீழே தணியும்போது உண்டாவது டயஸ்டாலிக் பிரஷர்,
இரத்தக் கொதிப்பு நோய் எதனால் வருகிறது?
இரத்தக் கொதிப்பு உள்ளவர்களில் நூறு பேரில் 95 பேருக்கு எதனால் இந்நோய் வருகிறது என்பதற்கான காரணமே இருப்பதில்லை. மீதமுள்ள ஐந்து பேருக்கு மட்டுமே குறிப்பிட்டுக் காரணம் காட்ட முடியும். முதல் வகையை Primary hypertension என்றும், இரண்டாம் வகையை Scondary hypertension என்றும் அழைக்கின்றோம். காரணம் புரியாத Primary hypertension நோய்க்கு பரம்பரை, மன இறுக்கம், உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக் கொள்வது ஆகிய மூன்றினையும் குற்றம் சாட்டுகிறார்கள்.
Secondary Hypertension எனப்படும் நோய்க்கான முக்கியக் காரணங்கள் சிறுநீரகக் கோளாறுகள். சில வகையான ஹார்மோன் சம்பந்தமான நோய்கள், உடற்பருமன், மிதமிஞ்சிய மதுப் பழக்கம் போன்றவையாகும். சர்க்கரை நோயும் இரத்த அழுத்தமும் சேர்ந்தே இருக்கும் இணைபிரியா தோழர்கள்.
இரத்த அழுத்த நோய் உடலை எவ்வாறு பாதிக்கிறது?
எந்த அறிகுறியும் இல்லாமலேயே மூளை, கண்கள், இதயம், சிறுநீரகம் போன்றவற்றை இரத்தக் கொதிப்பு நாளா வட்டத்தில் தாக்குகிறது. இதனால் பெரிய வியாதிகளான பக்கவாதம், பார்வை இழத்தல், மாரடைப்பு, இதய வீக்கம், சிறுநீரகச் செயலிழப்பு போன்றவை பின்விளைவாக ஏற்படலாம். சுருக்கமாகச் சொன்னால், இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு புகைப்பழக்கம் இருந்தாலோ, சர்க்கரை நோய் அல்லது இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமிருந்தாலோ கேட்கவே வேண்டாம். இரத்தக் கொதிப்புடன் இவை சேரும்போது உடலுக்கு ஏற்படக்கூடிய தீங்கு பல மடங்காகும். உலகம் முழுவதும் ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு நோய்க்கும் Strok எனப்படும் பக்கவாத நோய்க்கும் மிக முக்கியமான எளிதில் தவிர்க்கக் கூடிய காரணமாக இரத்தக் கொதிப்பு நோய் கருதப்படுகிறது.
இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன?
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ஓரளவுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம். ஆரம்ப நிலை நோயாளிகளுக்கு மருந்துகள் இல்லாமல், இத்தகைய வாழ்க்கை முறை மாற்றங்கள் இரத்த அழுத்த முறையைக் கட்டுப்படுத்த முடியும். வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மருந்துகளின் தேவையை ஓரளவு குறைக்கலாம்.ன்இரத்தக் கொதிப்பு நோய்க்கு மிகச் சிறந்த மருந்துகள் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பயன்பெறலாம்.
இரத்தத்திலுள்ள கொழுப்பு வகைகள் யாவை?
இது இரண்டு வகைப்படும்.
1. LDL கொழுப்பு இரத்தத்தில் காணப்பட்டால், அது இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய்களை பாதிக்கக்கூடியது.
2. HDL கொழுப்புச் சத்து பாதுகாப்பானது. இது அதிகமாக இரத்தத்தில் காணப்பட்டாலும், இருதய இரத்தக் குழாய்களை பாதிக்காது. முதலில் LDL கொழுப்புச் சத்தை குறைப்பதற்கான மருத்துவச் சிகிச்சைகளைச் செய்யவேண்டும். இருதயக் கோளாறு உள்ள மனிதர்களுக்கு இரத்தத்தில் LDL கொழுப்புச் சத்தின் அளவு 100 மில்லி கிராம் அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.
இரத்தத்திலுள்ள கொழுப்புச்சத்தை குறைப்பதற்கான வழிமுறை என்ன?
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்து மூலம் நமது உடம்பிலுள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கலாம். உணவில் நாம் தவிர்க்க வேண்டியவைகள் முட்டையின் மஞ்சள் கரு, மாமிசம், இறால், நண்டு மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள். சுறுசுறுப்பான உடற்பயிற்சி நமது உடம்பில் உள்ள HDL அளவை அதிகப்படுத்த உதவுகிறது. நமது இரத்தம் கொழுப்புச்சத்தைக் குறைப்பதற்கு பல வகையான மருந்துகள் உள்ளன. கொழுப்புச்சத்தைக் குறைப்பதற்கு Statin என்னும் மருந்துகள் உபயோகப்படுகின்றன.
ஏன் நமது இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்?
கட்டுப்படுத்த முடியாத இரத்த அழுத்தத்தினால் பக்க வாதம், மாரடைப்பு, இருதய செயல் இழக்கம், சிறுநீரக செயல் இழக்கம் ஆகியவை ஏற்படும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினால் இவ்வகையான பாதிப்புகள் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
இரத்தக் கொதிப்பை மருந்துகள் இல்லாமல் குறைக்க முடியுமா?
இரத்த அழுத்தத்திற்குரிய மருந்துகளைச் சாப்பிடுவதற்கு முன் சில வகையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால் மருந்துகள் இல்லாமலே இரத்தக் கொதிப்பை குறைக்க முடியும். உணவுக் கட்டுப்பாடு, உப்புச்சத்து குறைவான சாப்பாடு. உடற்பயிற்சி, எடை குறைத்தல் மற்றும் தியானம் மூலமாகவும் நாம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
இருதய நோயைத் தடுப்பதற்கான உடற்பயிற்சிகள் யாவை?
வேகமாக நடப்பது, சைக்கிள் ஓட்டுவது. நீச்சலடிப்பது ஆகிய உடற்பயிற்சிகள் இருதய நோய் உள்ளவர்களுக்குத் தகுந்த உடற்பயிற்சிகளாகும். பளுவான எடை தூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். வேகமாக ஒருவருடைய இருதயத் துடிப்பை நிமிடத்திற்கு 100 முறை துடிக்க வைக்கும். இது இருதயத்திற்கு மிகவும் உகந்ததாகும். 40 வயதிற்கு மேலுள்ளவர்கள் தங்களுடைய உடற்பயிற்சிகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி கேட்டுச் செய்ய வேண்டும். வேகமாக நடப்பதன் மூலம் இருதயம் ஒரு நிமிடத்திற்கு 100 முறை துடிப்பதால் இதேபோல் இருபது நிமிடம் தொடர்ந்து நடப்பது இருதயத்திற்கு நல்லது.
தொடர்புக்கு ; 044 – 23761750, 23761751.