• Home
  • உறவுகள்
  • ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து ஆண்களுக்கு என்ன சொல்கிறது.?

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து ஆண்களுக்கு என்ன சொல்கிறது.?

Image

இனியும் பெண்களை ஏமாற்ற முடியாது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி, தனுஷ் – ஐஸ்வர்யா வரிசையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து தமிழக மக்களுக்கு ஒரு பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறது. உலகின் மிகப்பெரும் இசை சாம்ராட், கோடிக்கணக்கான சொத்துக்கள், நிறைய செல்வாக்கு இருந்தும் ஏ.ஆர்.ரஹ்மானை ஒரு பெண் பிரிகிறார் என்றால் என்ன அர்த்தம்..?

பணம், செல்வாக்கு, அதிகாரத்தில் யாரும் மனநிறைவு அடைவதில்லை என்றே அர்த்தம். இவை மட்டும் பெண்ணுக்குப் போதும் என்று ஆண் முடிவு செய்யும்போது அவள் கோட்டைக் கிழித்துக்கொண்டு வெளியேறுகிறாள்.

அதேநேரம், காதலிப்பது, திருமணம் செய்து கொள்வது, அல்லது இணைந்து வாழ்வது என்பது எவ்வளவு இயல்பானதோ அது போன்றது தான் விவாகரத்து செய்வது என்ற மனநிலை எல்லா மனிதர்களுக்கும் வரவேண்டியது அவசியம். சேர்ந்து வாழ்வதற்கு எல்லோருக்கும் ஒரு காரணம் இருப்பது போன்று பிரிவதற்கும் அவர்களுக்குக் காரணம் இருக்கும்.

என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இணைந்து வாழ தெரிந்தவர்களுக்கு பிரிந்தும் வாழத் தெரியும் என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள். உலகம் ஒன்றும் அழிந்து விடாது. விவாகரத்து என்பது ஒரு வகையான விடுதலை… வலிகளிலிருந்தும், போலித் தனங்களிலிருந்தும் இன்னும் வெளியே சொல்ல முடியாத பல விஷயங்களில் இருந்தும் விடுதலை. இனியும் பெண்களை மிரட்டி ஒதுக்கி வீட்டுக்குள் முடக்கிவிட முடியாது என்பதையே சாய்ரா பானு காட்டியிருக்கிறார். வயது என்பது வெளியேறுவதற்கு ஒரு தடை அல்ல என்று காட்டியிருக்கிறார்.

இன்றும் சண்டை, அடி உதையைக் கூட சமரசம் செய்து கொண்டு, சுற்றம் சமூகம் என்ன நினைக்கும் என்று யோசித்து யோசித்தே பலர் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். அதற்கு பதிலாக திட்டமிட்டு, ஒருவரோடு ஒருவர் அமர்ந்து பேசி சட்ட ரீதியாக பிரிவது என்று முடிவெடுத்து நீதிமன்றத்தில் ஒருமித்த விவாகரத்து கோரி பிரிபவர்கள் பக்குவம் அடைந்துவிட்டார்கள் என்று அர்த்தம். எனவே, சட்டபூர்வமாக விவாகரத்து கோருகிறவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வை மாறவேண்டும்.

அதேநேரம், பிள்ளைகளுக்குக் குழந்தை பருவம் மிக முக்கியமானது, அதற்கு குடும்ப கட்டமைப்பு மிக அவசியம். எல்லோருக்கும் ஒரு கட்டத்தில் யாரேனும் துணையாக இருப்பது அவசியமாகிறது. துணை வேண்டும் வயதில் பிரிவு என்பது கொடூரமானது. பேசி தீர்க்க முடியாத பிரச்சினையை பிரிவதன் மூலம் தீர்த்துவிட முடியாது என்பதும் உண்மை.

இணைவதும் பிரிவதும் அவரவர் உரிமை என்றாலும், இந்த பிரிதலுக்குப் பிறகு மீண்டும் ஒரு சமரசத்துக்கு சம்மதிப்பதை விட, இப்போதே விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

Leave a Comment