உங்களிடம் அமிர்தம் எது… விஷம் எது..?

நம்பிக்கையூட்டும் சிந்தனை

சொர்க்கம், நரகம் என்பது ஒரு வளமான கற்பனை. நல்லவனாக இருந்தால் நீ சொர்க்கத்திற்குப் போவாய் என்று ஆசை காட்டியவர்கள், தீயவனாக இருந்தால் நரகத்துக்குப் போவாய் என்று பயமுறுத்தியும் வைத்தார்கள். பிறருக்குத் துன்பம் தராமல் வாழ்வதற்கு மனிதன் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகவே,  உலகத்திலுள்ள அத்தனை மதங்களும் இப்படி போதனை செய்கின்றன.

ஆனால், மரணத்துக்குப் பிறகு இப்படித்தான் நடக்கப் போகிறதா..? இந்த கேள்விக்கு யாரிடமும் உறுதியான பதில் இல்லை.

தெரியாத ஒன்றுக்காக நேரத்தை செலவிடுவதும் சிந்திப்பதும் தேவையில்லாத விஷயம். அதேநேரம், இந்த உலகத்தில் உயிருடன் வாழும் காலத்திலேயே மனிதனால் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும் என்பதுதான் உண்மை. அதற்காகவே இயற்கை எல்லோருக்கும் எல்லாவற்றையும் பொதுவாகக் கொடுத்துள்ளது. இயற்கை கொடுத்திருக்கும் எல்லாமே அமிர்தம்.

ஆனால், இயற்கையை மனிதர்கள் மதிப்பதில்லை. தங்களுக்கென தனி, சட்டதிட்டங்களை உருவாக்கிக்கொண்டு, இயற்கையைத் தாண்டி வாழ முயற்சி செய்கிறான். இயற்கை நியதிகளை மனிதன் ஒவ்வொரு முறை மீறும்போதும், அவன் உடலில் விஷம் பரவுகிறது. அந்த விஷத்தாலே, இந்த உலக வாழ்க்கை மனிதர்களுக்கு நரகமாகத் தெரிகிறது.

இப்போதும் எதுவும் கெட்டுப் போகவில்லை. ஆம், உடலில் பரவியிருக்கும் விஷத்தை அகற்றிவிட்டால், வாழ்க்கை சொர்க்கமாகிவிடும்.

விஷத்தை எப்படி அகற்றுவது..?

மனிதனின் சுயநலமே விஷம். இயற்கையைத் தாண்டி ஆசைப்படுவது எல்லாமே விஷம். சுருக்கமாகச் சொல்வது என்றால், ஒருவருடைய தேவைக்கு அதிகமாக வைத்திருக்கும் எல்லாமே, விஷம்.

நாளைக்குத் தேவை என்ற எண்ணத்தில் உணவை சேமித்து வைத்தால், அது விஷம். சந்ததிக்காக சொத்துக்களை சேர்த்துவைத்தால் அது விஷம். தகுதிக்கு மீறிய ஆசையும் விஷம்.

அதிக கோபம், அதிக பயம், அதிக நம்பிக்கை, அதிக சோம்பேறித்தனம், அதிக மகிழ்ச்சி, அதிக சோகம் என அளவுக்கு மீறிய ஒவ்வொரு நடவடிக்கையிலும் விஷம் உடல் முழுவதும் பரவுகிறது.

எனவே, உங்கள் உடலில் இருக்கும் விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற முயலுங்கள். விஷம் வெளியேறும் ஒவ்வொரு கணத்திலும், உங்கள் உடலுக்குள் அமிர்தம் பாய்வதை உணர முடியும். உடலில் அமிர்தம் நிறைந்துவிட்டால், இந்த வாழ்க்கையே சொர்க்கமாக மாறிவிடும்.

அதன்பின்னர், எல்லாமே மகிழ்ச்சிதான்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment