• Home
  • மனம்
  • அவமானம் நேரும்போது என்ன செய்வது..?

அவமானம் நேரும்போது என்ன செய்வது..?

Image

மனசுக்குப் பரீட்சை

அவமானம் என்ற ஒரே ஒரு வார்த்தை, எத்தனையோ மனிதர்களின் துன்பத்திற்கும், கோபத்திற்கும் ஏன் மரணத்துக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

அவமானம் என்பது என்ன..?

நம்மை பிறர் தவறாக எடை போடுவது, குறைவாக மதிப்பீடு செய்வது, அவமரியாதை செய்வது, சுயமரியாதைக்கு ஏற்படும் பாதிப்பு போன்றவைகளை அவமானம் என்று கருதுகிறோம். இது மனதில் ஆழமாகப் பதிந்து தொடர்ந்து துனபம் தருகிறது.

மானம் உயிரைவிட மேலானது என்று திருவள்ளுவர் எழுதிவைத்ததை, பள்ளியிலே எல்லோரும் படித்திருப்பதால், மானத்துடன் வாழ்வதை வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாகக் கருதுகிறார்கள். ஆனால், அது உண்மை அல்ல. அவமானம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு மட்டுமே.

’வாழ்வில் தானாக தவறி விழும் போதெல்லாம் மனிதர்கள் எழுந்து விடுகிறார்கள். ஆனால், பிறரால் தள்ளி விடப்படும் போதுதான் உடனே எழுந்துகொள்வதற்கு விரும்பாமல் அடம் பிடிக்கிறார்கள்” என்ற மனநல ஆலோசகர்களின் ஆதங்கத்தை நிரூபிக்கும் வகையில் அவமானத்தை ஏற்றுக்கொண்டு, அதனுடனே வாழ்கிறார்கள்.

அவமானத்தைச் சந்திக்காத மனிதர்கள் யாருமே இந்த உலகத்தில் இல்லை. எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும், அவமானத்தை சந்தித்தே வந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் அவமானத்தை ஒரு சாதாரண சம்பவமாக கருதி, தாண்டியே வந்திருப்பார்கள். ஆடையில் படியும் புழுதி போல் துடைத்துவிட்டு செல்லும் ஒன்றாகவே அவமானத்தைக் கருத வேண்டும்.

அவமானம் என்பது ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு இடத்திற்கும், ஒவ்வொரு காலத்திர்கும் மாறுபடக்கூடியது. நெருங்கிய உறவினரின் திருமணத்தில், தெரியாமல் ஒரு பெண்ணை இடித்து, அந்த பெண்ணின் கையால் அறை வாங்குவதற்கும், ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனில் முகம் தெரியாத ஒரு பெண்ணை இடித்துவிட்டு அறை வாங்குவதற்கும் இடையில் அவமானத்தின் அளவுகோல் மாறிவிடுகிறது. இளையவர் தடுக்கி விழுவதற்கும் முதியவர் தடுக்கி விழுவதற்கும் இடையில் அவமானத்தின் தன்மை மாறிவிடுகிறது. எனவே, எல்லா அவமானங்களையும் மனிதர்கள் ஒரே தன்மையில் எடுத்துக்கொள்வதில்லை.

வா என்று ஒருமையில் அழைக்கப்படுவதை பலர் அவமானமாக கருதுவதில்லை. ஆனால், ‘வா’ என்று அழைத்த காரணத்திற்காகவே கொலை செய்த மனிதர்களும் உண்டு. எனவே, அவமானம் என்பது எல்லோருக்கும் நேர்ந்தாலும், அதை அவர் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதில்தான் வாழ்வின் சிக்கல் ஒளிந்திருக்கிறது. இதனை தெளிவாகப் புரிந்துகொண்டால், அவமானத்தை சரியான வழியில் அணுக முடியும்.

ஆம், அவமானம் ஏற்படும் நேரத்தில், அது மனதை பாதிக்காத வகையில் செயலாற்ற வேண்டும். அதுதான் வாழ்க்கையை எளிதாகவும், சுலபமாகவும் நகர்த்த உதவும். அவமானங்களைச் சந்திக்கும் தருணத்தில் பதற்றப்படுவதும், கோபப்படுவதுமே, அவமானத்தை மீட்கும் முயற்சியில் அவசரமாக இயங்குவதும், இந்த பிரச்னையை மேலும் மோசமாக்கிவிடுகிறது. எனவே, அவமானம் ஏற்படும் தருணங்களில் அமைதியாக ஏற்றுக்கொள்வதுதான் நல்லது.

அதற்கு, அவமானம் என்பது ஒன்றுமே இல்லை என்பதை நம்ப வேண்டும். பிறர் நம்மை அவமானப்படுத்துவதன் மூலம் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை என்பதை உறுதியாக நம்பினால், பிறருடைய அவமானங்களை ஒரு பொருட்டாக நினைத்து அவஸ்தைப்பட தேவையில்லை. ஆனால், தேவையே இல்லாமல் பலரும் அவமானத்துக்குப் பயப்படுகிறார்கள்.  

பள்ளி நாடகத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டினால், சிரிப்பார்கள் என்பதாலே நிறைய பேர் கலை ஆர்வத்தை மனதுக்குள் போட்டு புதைத்திருக்கிறார்கள். ஜிம்முக்கு கிளம்பினால், ‘இதெல்லாம் எத்தனை நாளைக்கு?’ என்று கிண்டல் செய்வார்கள் என்று உடற்பயிற்சி செய்யாமல் நிறைய பேர் ஆரோக்கியத்தை இழந்துள்ளனர்.

ஆங்கிலம் பேசினால் கேலி செய்வார்கள் என்று அவமானத்துக்குப் பயந்து,  அலுவலக மீட்டிங்கில் தன்னுடைய கருத்தை சொல்லாமல் அமைதி காத்த பலர், பொன்னான பல வாய்ப்புகளை கோட்டை விட்டுள்ளனர். இவையெல்லாம் நாமே அவமானத்துக்குப் பயந்து நம்மை சுருக்கிக்கொண்ட தருணங்கள்.

அதேபோன்று, அவமானமும் நம் வாழ்க்கையில் ஒரு பகுதி என்பதையும் ஏற்கத்தான் வேண்டும். அலுவலகத்தில் பிறர் முன்னிலையில் திட்டு வாங்குவது, உறவினர்கள் மத்தியில் இயலாமை சுட்டிக் காட்டப்படுவது, புதிய முயற்சியில் ஈடுபடும் நேரத்தில் அவமானப்படுத்துவது போன்றவை எல்லோருக்கும் ஏதேனும் தருணங்களில் நடக்கத்தான் செய்யும். அதேபோல், கொடுத்த வாக்கை காப்பாற்றாத தருணங்களில், வாங்கிய கடனை கொடுக்காத பட்சத்தில், நம்பிக்கையை ஏமாற்றிய தருணங்களிலும் அவமானம் கிடைப்பதுண்டு.

இப்படி கிடைக்கும் அவமானங்களை நினைத்து நினைத்து கவலைப்படுவதால், அழுவதால், பழி வாங்கத் துடிப்பதால் எதுவும் ஆகப்போவதில்லை. ஒருசிலர் அவமானத்தை தாங்க முடியாமல் தற்கொலையும் செய்துகொள்கிறார்கள்.

அந்த அளவுக்கு அவமானத்துக்கு மனிதர்கள் முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லை என்ற புரிதல் வேண்டும். ஆம், அவமானத்தை ஒரு மிகப்பெரிய தோல்வியாக, ஒரு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கத் தேவையில்லை. அவமானம் என்பது ஒரு சாதாரண ஒரு சம்பவமாக நினைத்து கடந்து போக வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவமானத்தை அலட்சியம் செய்தாலே போதும்.

ஆம், சிலுவையை அவமானச் சின்னமாகத்தான் இயேசுநாதருக்குக் கொடுத்தார்கள். அதற்காக அவர் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அவமானமாக கிடைத்த சிலுவை இன்று அற்புதத்தின் சின்னமாக மாறியிருக்கிறது.

அம்பேத்கர் பள்ளிக்குச் சென்ற நேரத்தில் தொடர்ந்து அவமானத்தையே கொடுத்தார்கள். அவர், அவற்றை அலட்சியம் செய்த காரணத்தாலே இந்தியாவுக்கே சட்டப்புத்தகம் எழுதும் அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்தார்.

புத்தரை நோக்கி பூக்களும் கற்களும் எறியப்பட்டன. அவர், இரண்டையும் அலட்சியப்படுத்தினார். அதனாலே, இன்றும் அவர் மனிதர்களின் துன்பங்களுக்கு விடை கண்டுபிடித்த ஞானியாக போற்றப்படுகிறார்.

ஒருசிலர் அவமானத்தை சேமித்துவைத்து, அதனை உந்து சக்தியாக மாற்றி வெற்றி அடைந்திருக்கிறார்கள். ஆம், மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியை தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து கீழே தள்ளினார்கள். அந்த அவமானத்தை அவர் சேமித்துவைத்து ஒரு போராட்டமாக மாற்றினார். அவரது போராட்டம்தான் அஹிம்சை எனும் புதிய வழியை உலகத்திற்குக் காட்டியது.

எனவே, அவமானங்களை அலட்சியம் செய்யுங்கள் அல்லது உங்கள் பலமாக மாற்றுங்கள். இப்படித்தான் அவமானங்களை எதிர்கொள்ள வேண்டும். இதுதான் நிம்மதியும் மகிழ்ச்சியும் தரும்.

Leave a Comment