பொதுநலச் சங்கத்தினரின் வரவேற்பு பெற்ற அறிவிப்பு

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 125

1980ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மகத்தான வெற்றி பெற்ற நேரத்தில், சைதாப்பேட்டை தொகுதியில் நின்ற சைதை துரைசாமி சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அந்த சோகத்துடன் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, ‘நீ ஜெயித்திருந்தால் மந்திரி பதவி கொடுத்திருப்பேன். தோல்வியை நினைத்து கவலைப்படாதே, நீ தான் அ.தி.மு.க.வின் முதல் மேயர். இப்போதே களத்தில் இறங்கி பணிகளைச் செய்’ என்று ஆறுதல் கூறினார்.

எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்த காலம் வரையிலும் சட்டச்சிக்கல் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை என்றாலும், புரட்சித்தலைவர் இட்ட கட்டளையை நிறைவேற்றும் வகையில் மக்கள் சேவையில் முழுமையாக இறங்கியிருந்தார் சைதை துரைசாமி. அதனால், சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு, அதனை மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று நிறைவேற்றும் பணியை செவ்வனே செய்துவந்தார். எனவே, அந்த காலகட்டத்தில் இருந்தே ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த பொதுநலச் சங்கத்தினரையும் சைதை துரைசாமி நன்கு அறிந்திருந்தார்.

பொதுநலச் சங்கத்தினரின் சேவை சென்னை நகரின் வளர்ச்சிக்கு மிகவும் தேவை என்பது சைதை துரைசாமிக்கு நன்கு தெரியும். ஏனென்றால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்ற மனநிலை உள்ளவர்கள். குப்பைத் தொட்டி நிரம்பாமல் இருந்தாலும் கூட, அதற்குள் குப்பையைப் போடாமல் எட்டி நின்று தூக்கி வீசிவிட்டுச் செல்கிறார்கள். இதனால் ரோடுகளில் குப்பை தேங்கும், துர்நாற்றம் வீசும், மழைக் காலங்களில் தண்ணீர் கட்டிக்கொள்ளும் என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அதேநேரம், மழை நீர் தேங்குவது, தெரு நாய் பிரச்னைக்கு எல்லாம் அரசு மீது பழி போடுவார்கள்.

இது போன்ற தருணங்களில் தெருக்களையும், ரோடுகளையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை சில பொதுநலச் சங்கங்களே முன்வந்து எடுத்துக்கொள்கின்றன. அந்தந்த பகுதியில் தெருவிளக்கு, குடிதண்ணீர் பிரச்னை, பார்க்கிங் குளறுபடி, கழிவுநீர் அகற்றல், பூங்கா குறைபாடு, தெருநாய் தொந்தரவு, ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டுவருவார்கள்.

ஆனால், அப்போது மாநகராட்சியில் வாரத்தில் ஒரு நாள் அதாவது திங்கள் கிழமை ஒரு நாள் மட்டுமே மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அன்றைய தினம் மட்டுமே மக்கள் நேரடியாக மேயரிடம் குறைகளைச் சொல்ல முடியும், புகார் மனுக்கள் அளிக்க முடியும். இந்த நிலையில் சைதை துரைசாமி மேயரானதும் பழைய நடைமுறைகளை மாற்றி, ‘யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எல்லா நாட்களிலும் எல்லா நேரமும் மக்கள் குறைகளைக் கூறலாம்’ என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டார்.  

இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் மட்டுமின்றி பொதுநலச் சங்கத்தினரிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தங்கள் குறைகளைக் கேட்பதற்கு மேயர் தயாராக இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் மக்களும் பொதுநலச் சங்கத்தினரும் ஆர்வமாக வரத் தொடங்கினார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment