• Home
  • சக்சஸ்
  • வித்தியாசமான விளையாட்டு கோல்ஃப்

வித்தியாசமான விளையாட்டு கோல்ஃப்

Image

இலக்கு மட்டுமே எதிராளி


மனிதனின் ஆரோக்கியத்தை வளர்ப்பதில் உடற்பயிற்சியும், விளையாட்டும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உண்மையில், ஒருவன் ஓடியாடி விளையாண்டாலே நோயின்றி வாழலாம் என்கின்றன ஆய்வுகள். அதன் காரணமாக, இன்று எண்ணற்ற விளையாட்டுகள் பிறந்துள்ளன. விளையாட்டுகள் அறிவோம் பகுதியில் இந்த வாரம் நாம் பார்க்கப்போவது கோல்ஃப். இந்த விளையாட்டு, அமெரிக்க ஐக்கிய நாடு, ஜப்பான் , கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி , பிரான்ஸ், ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா, ஸ்வீடன் , சீனா, அயர்லாந்து, தென்கொரியா, நியூசிலாந்து, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் விளையாடப்படுகிறது.


திறந்தவெளி மைதானம் ஒன்றில் மட்டையைக் கொண்டு பந்தைச் சீராக அமைக்கப்பட்ட குழிகளுக்குள், குறைந்த முறை அடித்து விழவைக்கும் விளையாட்டே கோல்ஃப் (Golf) ஆகும். இதை குழிப் பந்தாட்டம் என்று சொல்வர். இது விளையாடப்படும் மைதானம் கோர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. கோல்ப் விளையாடும் மைதானதிற்கென்று எந்த நிலையான அளவுகோலும் இல்லை. கோர்ஸில் 9 அல்லது 18 குழிகள் வைக்கப்படும். ஒவ்வொரு குழியாக வரிசையாகப் பந்தை விழவைக்க வேண்டும். பந்து அடிக்க ஆரம்பிக்கும் இடம்  டீ பொட்டி எனப்படும். குழி இருக்கும் இடம் கிரீன் எனப்படும். இவை இரண்டுக்கும் இடையே நிறைய, நிலையான பகுதிகள் உண்டு. அவை நன்னிலம், கடின தரை மற்றும் இடையூறுகள் ஆகியன ஆகும்.
விளையாடுபவர்களில் யார் குறைந்த முறை பந்தை அடித்து குழிக்குள் விழ வைக்கின்றனரோ, அவரே வெற்றியாளர். பந்தை அடிப்பதை ஸ்ட்ரோக் பிளே என்பர். குழுவாக விளையாடும்போது பந்தை அடிப்பதை மாஸ்டர் பிளே என்பர். இவற்றில் ஸ்ட்ரோக் ப்ளே முறை மிகவும் பிரபலமானதாகும்.
ஆதாரபூர்வமாக இவ்விளையாட்டு தோன்றிய காலம் மற்றும் நாடு தெரியாவிடினும், தற்போதைய நவீன கோல்ஃபின் தோன்றல் ஸ்காட்லாந்து என அறியப்படுகிறது. கி.பி. 15வது நூற்றாண்டிலிருந்து விளையாடப்படுவதற்கு ஆதாரங்கள் உள்ளன. இவ்விளையாட்டுக்கான விதிமுறைகள் 1744ம் வருடம் முதல் இறுதி செய்யப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர் 2004ம் ஆண்டு உலக அளவில் சீர்திருத்தம் செய்யப்பட்டு நெறிப்படுத்தப்பட்டது.
கோல்ஃப் பந்தை அடிக்க பயன்படும் மட்டை கோல்ஃப் கிளப் எனப்படுகிறது. ஒவ்வொரு மட்டையும் கைப்பிடியுடன் கூடிய நீளமான இரும்பினாலான கம்பியில் தலைப்பகுதியாய் ‘ட’ வடிவிலான பாகம் இணைக்கப்பட்டிருக்கும். இந்த தலைப்பகுதிதான் பந்தை அடிக்கப் பயன்படும். நன்னிலத்தில் நீண்ட தொலைவிற்கு பந்தை கடத்த பெரும்பாலும் மரத்திலான தலைப்பகுதியையே பயன்படுத்துகின்றனர். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 14 விதமான கிளப்களை பயன்படுத்தலாம். ஒவ்வொரு கிளப்பும் ஒவ்வொரு விதமான ஷாட்களுக்கு பயன்படுத்துவர்.
அதேபோல், கோல்ஃப் பந்து இவ்விளையாட்டிற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. இதன் நிறை 45.93 கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதன் விட்டம் 42.67 மில்லி மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். கோல்ஃப் கிளப் மற்றும் பந்து ஆகியன ஆர் & ஏ மற்றும்  யூஎஸ்ஜிஏ ஆகியவற்றின் அனுமதி பெற்றவையாக இருக்க வேண்டும்.
உலகளவில் கோல்ஃப் விளையாட்டின் விதிமுறைகள் 1754ம் வருடம் நிறுவப்பெற்ற தி ராயல் அண்ட் ஆன்சியன்ட் கோஃல்ப் ஆஃப் செயின்ட். ஆண்ட்ரூஸ் கிளப் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் கோல்ஃப் அசோசியேசன் ஆகியவற்றால் கூட்டாக நிர்வகிக்கப்படுகிறது. கோல்ஃபெர்கள் இவ்விளையாட்டின் விதிமுறைகளுக்குட்பட்டு, மட்டுமின்றி கோல்ஃப் விளையாட்டின் ஒழுங்குமுறைகளின் வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு சுற்றிலும் கொடுக்கப்படுகிற வரிசைப்படி பந்தை குழிக்குள் விழவைக்க வேண்டும். பொதுவாக, ஒரு சுற்று என்பது 18 குழிகள் கொண்டதாய் இருக்கும். ஒவ்வொரு குழிக்குள்ளும் ஒருமுறை பந்தை விழ வைக்க வேண்டும். 9 குழிகள் கொண்ட மைதானத்தில் வீரர்கள் குறுகிய சுற்றுப்போட்டி அல்லது முழுச்சுற்றுப் போட்டியாக விளையாடுவர். குறுகிய சுற்றுப் போட்டியாவது 9 குழிகளுக்குள் ஒவ்வொரு குழியாக ஒருமுறை பந்தை விழச்செய்து மீண்டும் ஒருமுறை அதே வரிசையில் விழச்செய்வதாகும். முழுச் சுற்றென்பது 9 குழிகளுக்குள் ஒவ்வொரு குழிக்குள்ளும் இரண்டு முறை பந்தை விழச் செய்வது ஆகும்.
ஒவ்வொரு குழியும் பார் சமநிலை கொண்டே வகைப்படுத்தப்படுகிறது. பார் சம நிலை என்பது ஒரு திறமையான, தேர்ந்த கோல்ஃபெர் ஒரு குழியை ஆட குறைந்தபட்சமாக எடுத்துக்கொள்ளும் ஷாட்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எந்தவொரு குழியையும் ஆட குறைந்தபட்ச அளவு பார் 3 ஆகும். அதாவது ஒரு டி ஷாட், இரண்டு தள்ளல்கள். பெரும்பான்மையான கோல்ஃப் மைதானங்கள் பார் 4 மற்றும் 5 ஷாட்கள் ஆடுபவையாகவே உள்ளன. பொதுவாக, சராசரியாக பார் 4 அளவு உள்ள 18 குழிகள் கொண்ட ஒரு மைதானத்தின் பார் அளவானது ஒரு முழுச்சுற்றுக்கு 72 ஆக இருக்கும்.
ஒரு கோல்ஃபெரின் குறிக்கோளாவது எவ்வளவு குறைவாக பந்தை அடித்து குழிக்குள் விழவைக்க வேண்டுமென்பதே. ஒரு கோல்ஃபெரின் ஸ்கோரானது பார் ஸ்கோர்க்கும் அந்த கோல்ஃபெரின் ஷாட்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசமே ஆகும்.
2015ம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சுபம் ஜாக்லன் சாம்பியன் பட்டம் நாட்டுக்குப் பெருமை சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விளையாட்டுக்கு உடல் திறனைவிட மன திடமே அதிகம் தேவை. இன்னும் சொல்லப்போனால் மதிநுட்பம் அவசியம். இந்த போட்டியில் யாரும் பந்தை உங்களை நோக்கி வீச மாட்டார்கள். அதேபோல், நீங்கள் அடிக்கும் பந்தைத் தடுக்கவோ, குறுக்கிட்டுத் திசை மாற்றவோ எதிரணியினர் யாரும் கிடையாது. இதுதான் உண்மையிலே தனிநபர் திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டு.

Leave a Comment