கலோரியை கவனிச்சுக்கோங்க
இந்த நூற்றாண்டில் உருவான கொடூரமான பிரச்னை என்றால், அது உடல் பருமன். ஆம், சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். இதனால் பணி செய்யும் இடங்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும் கேலிக்கு ஆளாவதுடன், உடல் ரீதியிலும் பெரும் தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள்.
உடல் எடையைக் குறைப்பதற்கு ஒருசில வழிகளே உள்ளன. ஆம், கடுமையான உடல் உழைப்பு, சரியான உடற்பயிற்சி, தீவிரமான உணவுக்கட்டுப்பாடு, இதுதவிர மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மருத்துவ சிகிச்சை. உடல் பருமன் குறித்து கொஞ்சம் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
காரணம் என்ன?
உடல் தேவைக்கு அதிக கலோரிகள் உண்ணும்போது, உடல் எடை அதிகரிக்கிறது. இதுதவிர மாறி வரும் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், பரம்பரைத்தன்மை, மன அழுத்தம், சுற்றுச்சூழல் போன்ற பல விஷயங்கள் உடல் பருமனுக்குக் காரணமாக அமைகின்றன.
ஆனாலும், உடல்மீது அக்கறை இல்லாததே உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் எனலாம். சாப்பிடும் உணவு, அவரது உடல் வளர்ச்சிக்கு எந்தளவுக்கு உதவுகிறது என்பதைக் குறிப்பதே வளர்சிதை மாற்றம். இந்த வளர்சிதை மாற்றம் குறைவாக உள்ளவர்கள் குறைவான உணவைச் சாப்பிட்டாலும் அவர்களது உடல் பருமன் கூடிவிடும். மெட்டபாலிசம் சரியாக இல்லையென்றால், உடலில் தேவையற்றக் கொழுப்பு அதிகமாகத் தேங்கி, உடல் பருமன் அதிகரிக்கும். மரபணு காரணங்களாலும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதாலும்கூட உடல் எடை கூடும்.
உடல் எடையைக் குறைப்பது என்பது, உடலில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதே ஆகும். டயட் என்கிற பெயரில் பட்டினி கிடப்பதாலோ அல்லது சத்தில்லாத குறைந்த அளவு உணவு உண்ணுவதாலோ உடல் எடை குறையாது. அதனால், தேவையற்ற உடல் உபாதைகளும் சோர்வுமே ஏற்படும்.
.உடல் எடை அதிகரிப்பால் ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, ஹார்மோன் சுரப்பில் மாற்றம், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் வருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எடையைக் குறைக்கும் உணவுகள்!
முக்கியமாக உடல் எடை அதிகரிக்க சர்க்கரை ஒரு முக்கியக் காரணமாகிறது. அதனால், அதைத் தவிர்ப்பது நல்லது. டீ, காபியில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர, ஸ்வீட், சாக்லேட், டெஸர்ட் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். , இன்றைக்குப் பெரும்பாலானோர் வாகனங்களில்தான் பயணிக்கிறார்கள். இது, வியர்வை வெளியேறத் தடையாக இருக்கும். இதைத் தவிர்ப்பது நன்று.
பலர் அலுவலகம் மற்றும் வீடுகளில் லிஃப்ட்களையே பயன்படுத்துகின்றனர். அவர்கள் லிஃப்ட்களில் செல்வதைத் தவிர்த்து, படிக்கட்டுகளை உபயோகப்படுத்துவது நல்லது. அதேபோன்று எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சாப்பிட்டு முடித்ததும் ஏழு முதல் பத்து நிமிடங்கள் மெதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலை எழுந்ததும் முக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துக்கொள்வது இன்னும் சிறப்பானது. மேலும், எட்டு மணி நேர தூக்கம் அத்தியாவசியமானது. அப்போதுதான் உடலிலுள்ள குரோத் ஹார்மோன் அதிகமாகும். இது உடல் எடை கூடுவதைத் தடுக்கும். அதேபோன்று, இரவு உணவுக்கும் உறக்கத்துக்கும் இடையே ஒன்றரை மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.
உடல் எடை குறைவதற்கு உடற்பயிற்சியும் அவசியம். வெயிட் டிரைனிங் எனப்படும் சிறு எடைகளைத் தூக்கிக்கொண்டு செய்யும் உடற்பயிற்சிகள், ஓடுதல், மிதிவண்டி ஓட்டுதல், ஜாக்கிங், நீந்துதல், பூட் கேம்பிங் எனப்படும் உடல் மட்டும் அசையும் பயிற்சிகள் போன்றவை விரைவாக எடையைக் குறைக்க உதவும். இதுதவிர, சூர்ய நமஸ்காரம், பாதஹஸ்தாசனம், ஜானுசிரசாசனம், தனுராசனம், பவனமுக்தாசனம் உள்ளிட்ட எளிய யோகாசன பயிற்சிகளையும் செய்யலாம்.
இதைவிட, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட உணவு முறைகளைக் கடைப்பிடிக்கலாம். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்த்துக் குடிக்கலாம். அதேபோல், தினமும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்தும் குடிக்கலாம். நான்கு அல்லது ஐந்துப் பூண்டுப் பற்களை எடுத்து ஒரு டம்ளர் பாலில் போட்டு, பாதியாகச் சுண்டும்வரை கொதிக்கவைத்து பாலுடன் பூண்டைச் சாப்பிடலாம். தினமும் வெதுவெதுப்பான மாட்டுப் பாலில் தேன் கலந்து குடிக்கலாம்.
புடலங்காய் பொரியலுடன், சப்பாத்தி சேர்த்து சாப்பிடலாம். தினமும் மோரில் கேரட்டை அரைத்து கலந்து குடிக்கலாம். பப்பாளிக் காயை, பருப்புடன் அடிக்கடி சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். காய்கறிகள் மூலம் செய்யப்பட்ட சூப்பில் மிளகுத்தூள் போட்டுப் பருகலாம். தினமும் இரவில் காய்கறி சூப் குடித்தால், உடலில் சேரும் கொழுப்புகள் குறையும்.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் துளசியை அரைத்து, அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு, தினமும் காலையில் ஒரு தக்காளி சாப்பிடலாம். அதேபோல், சிறிதளவு கொள்ளுவை ஒரு டம்ளர் நீரில் முதல்நாள் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் பத்து கருவேப்பிலை இலைகளைச் சாப்பிடலாம். தினம் ஒரு டம்ளர் இஞ்சிச் சாறு பருகினாலும் உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது. முட்டைக்கோஸை உணவில் வைத்துக்கொள்வதும் நல்ல பயனைத் தரும்.
தினமும், க்ரீன் டீ பருகினாலும் உடல் எடை குறையும். இந்த க்ரீன் டீயானது, 24 மணிநேரத்தில் உடலில் இருக்கும் 72 கலோரிகளை எரிக்கும் தன்மைகொண்டது. இதுதவிர, ‘கிரேசிங் டைப் டயட்’ (Grazing Diet) மேற்கொள்வதாலும் உடல்பருமனைப் பராமரிக்கலாம். அதாவது மூன்று நேரம் சாப்பிடுவதை விடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து வகை உணவுகளையும் கொஞ்சம் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இத்தகைய டயட், சீனாவில் அதிகம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உணவில் புரதத்தை அதிகளவில் சேர்க்கவேண்டும். ஊட்டச்சத்துப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தப் புரதமானது, உடலில் எடையைச் சீராக வைத்திருக்கக்கூடிய ஹார்மோன்களை மாற்றும் தன்மைகொண்டதாகும். அத்துடன் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. கலோரிகள் குறைந்த அதேசமயம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும் சத்துக்கள் கொண்ட காய்கறிகள், பழங்கள், அதிக புரதச்சத்துள்ள பருப்புகள் சாப்பிடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இதுதான், வெயிட் வாட்ச்சர்ஸ் டயட் ஆகும். இதன்மூலம் எடையைக் குறைக்க முடிவதுடன் உடலுக்குத் தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் போன்ற அனைத்துச் சத்துக்களையும் பெற முடியும்.
மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்தும் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை என்றால், மருத்துவரின் அறிவுரைப்படி மருத்துவ சிகிச்சை மூலம்தான் எடையைக் குறைக்க வேண்டும்.
ஆனால், உடல் எடை அதிகரித்துவிட்டது என்று கவலைப்படாமல், நம்மால் நிச்சயம் குறைக்க முடியும் என்று நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கினால், நிச்சயம் ஊசி போன்ற உடலைப் பெற முடியும்.
உடல் எடையைக் குறைப்போம்… உல்லாசமாய் இருப்போம்!
உடல் எடையைக் குறைக்கும் விளையாட்டுகள்!
நிமிடங்கள் விளையாட்டுகள் எரிக்கப்படும் கலோரிகள்
24 ஜாக்கிங் 300
24 ரன்னிங் 300
35 டென்னிஸ் 300
24 ஸ்கிப்பிங் 300
30 சைக்கிளிங் 300
44 கோல்ஃப் 300
48 ஸ்கேட்டிங் 300
54 பேட்மிட்டன் 300
60 வாக்கிங் 300
80 வாலிபால் 300