• Home
  • யாக்கை
  • ஒல்லியாக்கும் வெந்நீர்… சுறுசுறுப்பாக்கும் பிளாக் டீ

ஒல்லியாக்கும் வெந்நீர்… சுறுசுறுப்பாக்கும் பிளாக் டீ

Image

எக்கச்சச்க்க மருத்துவ ஆச்சர்யங்கள்

சாதாரணமாக கடந்துபோகும் விஷயங்களில் எத்தனை மருத்துவ ஆச்சர்யங்கள் உள்ளன என்பதை படித்துப்பாருங்கள். வெந்நீருக்கு உள்ள மகிமையும் தாத்தாப் பூ, கிரீன் டீ என்று படிக்கப்படிக்க ஆரோக்கியமே.

இரவு பல் துலக்குதல் அவசியமா..?

மனிதர்களின் எச்சில் ஆன்டிசெப்டிக் ஆகவும் ஆன்டிபாக்டீரியலாகவும் செயலாற்றி நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இரவு நேரத்தில் எச்சில் உற்பத்தி குறைவாகவே நடப்பதால் மோசமான பாக்டீரியா உற்பத்தி அதிகமாக இருக்கும். பல் துலக்குவதால் மோசமான பாக்டீரியா உற்பத்தி தடுக்கப்படுகிறது.

உணவுத் துகள் சிக்கியிருப்பதாக உணர்ந்தால் அதனை எடுப்பதற்கான ஃப்ளாஸ் நூல் கொண்டு மட்டுமே அகற்ற வேண்டுமே தவிர, பல் குச்சியை பயன்படுத்தக்கூடாது. அதேநேரம் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் பல் துலக்கவேண்டிய அவசியம் இல்லை. இரண்டு முறை பல் துலக்குவதே பல் ஆரோக்கியத்துக்குப் போதுமானது.

க்ரீன் டீ… பிளாக் டீ

சோம்பல், களைப்பு, தூக்கம், துக்கம் இருக்கும்போது டீ குடிப்பது பலருக்கும் உற்சாகம் தருகிறது. இப்போது டீ குடிப்பதைவிட க்ரீன் டீ அல்லது பிளாக் டீ குடிப்பது பிரபலமடைந்து வருகிறது. கிரீன் டீ என்பது தேயிலை இலைகளை காயவைத்து அல்லது வேகவைத்து பயன்பாட்டுக்கு வருகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தை பிரகாசிக்கச் செய்யவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செய்கிறது. பிளாக் டீ என்பது தேயிலை இலைகளை காய வைத்து நன்றாக நொறுக்கி ஆக்ஸிஜனேற்றம் செய்யப்படுவதால் நறுமணத்துடன் கிடைக்கிறது. பிளாக் டீயில் எல் தியானைன் என்ற அமினோ அமிலம் உள்ளதால் மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கிறது. இது இதயம் மற்றும் ரத்த நாளங்களைப் பாதுகாக்கிறது. ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ரோட்டோர மூலிகை

‘தாத்தா… தாத்தா துட்டு குடு… இல்லைன்னா உன் தலையை வெட்டிருவேன்’ என்று சிறுவர்கள் விளையாடும் தாத்தா செடியை சகல இடங்களிலும் சாதாரணமாகவே பார்க்க முடியும். ரோட்டோரம் விளைவதால் இதன் மகிமை பலருக்கும் தெரிவதில்லை. இந்த மூலிகையின் உண்மையான பெயர் காயப்பச்சிலை. இதை மைமூக்குத்திப் பூ என்றும் சொல்வார்கள். இந்த செடிக்கு கிணற்றடிப் பூண்டு, வெட்டுக்காய பூண்டு,  கரும்பூடு, சாணிப்பூடு, மிருகம்பச்சிலை, முறியம் பச்சிலை, அரிவாள்மனைப்பூண்டு, ஒரம்புபூடு, வெட்டி முறித்தான், ஒடியன் பச்சிலை, வெட்டுவாங்கண்ணி என்று நிறைய பெயர்கள் உண்டு. தீ காயம், கொப்பளம் போன்றவைகளுக்கும் இதன் இலையை அரைத்துப் பூசலாம். குடலில் புண் இருப்பவர்கள் காலையில் பல் தேய்த்துவிட்டு, இதன் இலைகளை மென்று விழுங்கினால் போதும். குடல் புண் ஆறிவிடும்.

எடை குறைப்புக்கு சீனா டிப்ஸ்

வீட்டுக்கு ஒருவராவது உடல் பருமனுடன் அவஸ்தைப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. தங்களால் நினைக்கும்போது உடம்பை குறைத்துவிட முடியும் என்ற நம்பிக்கை நிறைய பேருக்கு உண்டு. ஆனால், உடலை குறைப்பதற்கான முயற்சி அத்தனை எளிதில் வெற்றி அடைவதில்லை. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருத்துவர் ஆலோசனையின் மூலமே உடல் பருமனை எளிதாக குறைக்க முடியும். இப்போது உடல் பருமனைக் குறைப்பதற்கு மிக எளிதான மூன்று டிப்ஸ்களை சீனர்கள் கடைபிடிக்கிறார்கள். அதன்படி, சீக்கிரமாகத் தூங்கி அதிகாலை 5 மணிக்கு எழுந்துகொள்வது முதல் வழி. மதியம் குட்டித்தூக்கம் போடுவது கூடாது. அடுத்தது எல்லா நேரமும் வெந்நீர் மட்டுமே குடிப்பது. மூன்றாவது காலை உணவாக நார்ச்சத்து நிரம்பிய உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வது. இந்த மூன்றையும் செவ்வனே கடைபிடிப்பவர்களால் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ நிச்சயம் குறைத்துவிட முடியும் என்கிறார்கள்.

Leave a Comment