ஆசிரியர் பார்வை

நிறைய செல்வம், பெரிய வீடு, கார், தோட்டம் போன்றவையே மிகப்பெரும் சொத்து என்றும் தங்களுடைய பலம் என்றும் மக்கள் நம்புகிறார்கள். அதனாலே சேமித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
கையில் பணம் இருந்தாலும், வெளிநாடு சுற்றிப் பார்க்கும் ஆசை இருந்தாலும், அதனை செயல்படுத்துவதற்குத் தயங்குகிறார்கள். எதிர்கால அவசரச் செலவுக்குத் தேவைப்படலாம் என்று பணத்தைப் பாதுகாக்கிறார்கள். ஆனால், இப்படி பாதுகாக்கப்படும் சொத்து, பணம் போன்றவை, அவர்களுடைய பிள்ளைகள் அல்லது மற்றவர்கள் அனுபவிக்கவே போய்ச் சேர்கிறது.
எனவே, சம்பாதித்து சேமித்து வைப்பதை உங்கள் சொத்தாகக் கருத வேண்டாம். இதுவரை நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவித்தது, ஆசையுடன் செலவழித்தது, பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தது, கற்றுக்கொண்டவை, கொண்டாட்டம் போன்ற அனுபவங்களே உண்மையான சொத்து.
மனதில் என்றென்றும் தங்கியிருக்கும் இந்த அனுபவங்களே நிஜமான சொத்து. இப்படிப்பட்ட அனுபவங்கள் அடைவதற்கு செலவு செய்யத் தயங்காதீர்கள்.
ஏனென்றால் தங்கம், பணம் போன்றவை காணாமல் போகலாம். சொத்துக்களை இழக்க நேரிடலாம். ஆனால் வாழ்நாளில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை யாராலும் திருட முடியாது; காலத்தாலும் அழிக்க முடியாது. ஒரு பயணத்தில் கிடைத்த அனுபவம், பார்த்த காட்சிகள், சந்தித்த நபர்கள், சிரிப்பு, கண்ணீர், சந்தோஷம் போன்றவை மனதின் ஆழத்தில் பதிந்துவிடுகின்றன.
ஒவ்வொரு அனுபவமும் சுகம் அல்லது துக்கமாக இருக்கலாம். ஆனால், அவை நமது சொத்தாகவும் சக்தியாகவும் மாறுகிறது. தவறுகள் படிப்பினையாகவும், வெற்றிகள் ஊக்கமாகவும் செயல்படுகின்றன. நிறைய அனுபவங்களே வெற்றிகரமான வாழ்க்கையைக் குறிக்கிறது.
ஆகவே, அனுபவங்களைப் பெறுவதற்கு மனப்பூர்வமாக செலவு செய்யுங்கள். இந்த செலவுதான் உங்களுக்கு சொத்து. இந்த சொத்துதான் நிஜமான மகிழ்ச்சி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.