• Home
  • பணம்
  • இப்படியும் சம்பாதிக்கலாம் பணம்

இப்படியும் சம்பாதிக்கலாம் பணம்

Image
  • வீட்டுக்குள்ளே இத்தனை வாய்ப்புகள்

உலகிலேயே பணம் சம்பாதிப்பது மட்டுமே கடினம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஒரே இரவில் கோடீஸ்வரனாக வேண்டும், லட்சாதிபதியாக வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது யாராலும் முடியாது. அதேநேரம், ஆர்வமும் அக்கறையும் இருந்தால் மிக எளிதாக கொஞ்சம் கொஞ்சமாக பணம் சம்பாதித்துவிட முடியும்.

வீட்டில் நாம் பால் பாக்கெட் பயன்படுத்திவிட்டு தூக்கிப் போடுகிறோம். இவற்றை சேமித்து வைத்தால் அது பணம். அதேபோல் வீட்டில் தேவையில்லை என்று எங்காவது பரணில் போட்டு வைத்திருக்கும் இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை எல்லாம் கடையில் போடுங்கள். இவை எல்லாமே பணம் தரக்கூடியது.

 தினம் வாசிக்கும் செய்தித்தாள்கள் மறுசுழற்சி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. செய்தித்தாள்கள் விலைக்கு எடுக்கப்படுகிறது. தவிர, அரசு அலுவலகங்களிலிருந்து வரும் வெள்ளை பேப்பர் கழிவுகளும் நல்ல விலைக்குப் போகிறது. இவையும் மறுசுழற்சி செய்து உற்பத்தி செய்யப்படுகிறது. பேப்பர், நோட்டு மட்டுமின்றி நாம் வாங்கிய பொருட்களில் பேக்கிங் செய்யப்பட்டிருக்கும் அட்டைப் பெட்டிகள், மீண்டும் புதிய பேக்கிங் அட்டைகள் செய்ய பயன்படுகின்றன. இத்தகைய அட்டைகள், விலை கொடுத்து வாங்கப்படுகிறது. அதுபோல், சிகரெட் பெட்டி போன்ற எல்லா பேப்பர், அட்டைகளையும் கடையில் போட்டு பணம் வாங்கலாம். இவற்றை  மறுசுழற்சி செய்து மீண்டும்  அட்டைகள், பேப்பர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

சமையல் செய்துவிட்டு கீழே போடும்  தேங்காயின் சிரட்டையும் விலைக்குப் போகும் என்பது தெரியுமா..?  இந்த சிரட்டை, செங்கல்சூளையில் விறகாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுதவிர கொசுவர்த்தி தயாரிக்கவும் சிரட்டை பயன்படுகிறது. வீடு மற்றும் டீக்கடைகளில் பயன்படுத்திவிட்டு, தூக்கி வீசப்படும் டீத்தூள் மற்றும் காபி தூள்கூட காசுக்கு வாங்கப்படுகிறது. இவற்றை வைத்து உரம் தயாரிக்கிறார்கள்.

அலுமினியம் பாயில் பேப்பர் போன்ற உணவுப் பொருட்களை பார்சல் செய்யப் பயன்படுவதும் விலைக்கு  எடுக்கப்படுகிறது. இது மறுசுழற்சி செய்யப்பட்டு, மீண்டும் புது அலுமினிய பேப்பராக தயாராகிறது. நம் வீட்டுக்கு உபயோகமில்லாத சிறு இரும்புத் துண்டுகள், தகரங்கள்கூட நல்ல விலைக்கு எடுக்கப்படுகிறது.

இவற்றை விடுங்கள், நம் தலையிலிருந்து உதிரும் முடியும்  காசாக்கப்படுகிறது.  இவை தவிர சரக்குப் பாட்டில்கள், கோணிகள், அலுமினியப் பொருட்கள் என அனைத்துமே நமக்கு காசு கொடுக்கக்கூடியவை. அது தெரியாமல், அவற்றை எல்லாம் நாம் அலட்சியமாகத் தூக்கி எறிந்துவிடுகிறோம். ஆனால்,  தூய்மைப் பணியாளர்களும், அவற்றைச் சேகரிக்கும் நபர்களும் அதை எடுத்துச் சென்று காசு பார்க்கின்றனர். அதனால் பணம் சம்பாதிக்க வழி தெரியவில்லை என்று நினைக்காதீர்கள். தேடுங்கள், வழி தென்படும். 

Image Not Found

கட்டுரை பகுதிகள்