நடிகர் ஸ்ரீனிவாசன் அனுபவ தத்துவம்
மலையாள திரையுலகில் மிகச்சிறந்த கதாசிரியர்களில் ஒருவரும், நடிகருமான ஸ்ரீனிவாசன் கடந்த டிசம்பர் 20-ம் தேதி காலமானார். இவர் மலையாள சினிமாவுக்கு எழுதிய கதைகள், அண்ணாநகர் முதல் தெரு, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, திண்டுக்கல் சாரதி, இல்லம், கதாநாயகன் உள்ளிட்ட பல படங்களாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளன.
தன் வாழ்க்கையில் எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், எளிதாக எடுத்துக்கொண்டு வாழ்ந்த மனிதர் ஸ்ரீனிவாசன். மரணத்தையும் அவர் அப்படித்தான் எடுத்துக்கொண்டார்.
கடந்த 2019-ம் ஆண்டில் அவரது உடல்நிலை தீவிரமாக பாதிக்கப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசனை, சுமார் 24 மணிநேரம் வெண்டிலேட்டரில் வைத்த பிறகே அவரது உடல்நிலை சற்று சரியானது. பின்னர் பல நாட்கள் அவர் மருத்துவமனையில் இருக்க நேரிட்ட்து. இந்த நேரத்தில் சீனிவாசன் இறந்துவிட்டதாககூட செய்தி பரவியது.
இதைப்பற்றி பின்னர் மாத்ருபூமி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி மிகவும் பரபரப்பாக அமைந்தது.
அந்த பேட்டியில் ஸ்ரீனிவாசன், ‘’குட்டிமாமா என்ற திரைப்படத்தின் டப்பிங் நடந்துகொண்டு இருக்கும்போது எனக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதைப்பற்றி நான் சொன்னபோது, மருத்துவமனைக்கு போகலாம் என்று அதன் இயக்குநர் வினு அழைத்தார்.
ஆனால் நான் அது தானாகவே சரியாகிவிடும் என்றேன். ஆனால் நேரம் ஆக ஆக மூச்சுத்திணறல் அதிகமானது. ஒரு கட்டத்தில் மூச்சுத் திணறல் அதிகமாக, நான் சொல்லியும் கேட்காமல் என்னை கட்டாயப்படுத்தி தூக்கிச் செல்லாத குறையாக வினு என்னை காரில் ஏற்றி எர்ணாகுளம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது பைபாஸ் சாலைக்கு செல்லும் வழியில் மற்ற வாகனங்களை பார்த்துக்கொண்டே இருக்கும்போது மயக்கம் வந்தது. நான் சுயநினைவை இழந்துவிட்டேன். அதன் பிறகு 24 மணிநேரம் கழித்தே எனக்கு நினைவு திரும்பியது. அந்த 24 மணி நேரத்தில் எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம். மரணமடைந்துகூட இருக்கலாம்.
இதிலிருந்து எனக்கு ஒரு விஷயம் மற்றும் நன்றாகப் புரிந்தது. இறப்பதற்கு எந்த திறமையும் நமக்கு தேவையில்லை. சுயநினைவை இழந்தால் அந்த கட்டத்திலேயே நாம் இறந்துவிடலாம். நாம் சுயநினைவுடன் இருக்கும்போது மரணம் நம்மை நெருங்காது. அதேபோல் நம்மை மரணம் நெருங்கும்போது நாம் சுயநினைவுடன் இருக்க மாட்டோம்.
மரணம் ஒன்றும் பெரிய விஷயமில்லை. அது நம்மால் தவிர்க்க முடியாத ஒரு சாதாரண விஷயம்தான். எனக்கு மரணத்தைப் பற்றிய பயமில்லை. அதுபோல் மரணத்தை பார்த்து எல்லோரும் ஏன் பயப்படுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை…’’ என்று கூறியிருந்தார்.
உண்மைதான். எப்படியும் மரணம் வரத்தான் போகிறது, அதுவரை மகிழ்ச்சியாக வாழ்ந்திருங்கள்.
பி.எம்.சுதிர்
