மரணத்திற்குப் பிறகும் உலகத்தைப் பார்க்கலாம்.

Image

கண் தானம்

பிறரை மகிழ்வித்துப் பார்ப்பதே உலகிலேயே மிகச்சிறந்த மகிழ்ச்சி என்பார்கள். அந்த மகிழ்ச்சிக்காகவே நிறைய மனிதர்கள் பிறருக்கு உதவிகள் செய்கிறார்கள். வாழும் காலத்தில் மட்டுமின்றி, மரணத்திற்குப் பிறகும் உதவி செய்ய முடியும். அதுவே கண் தானம்.

ஒருவர் கண் தானம் செய்தால், இரு கண்களும் இரு நபர்களுக்கு உதவ முடியும். 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் கண்தானம் செய்ய முடியும். மரணத்திற்குப் பின் 6 மணிநேரத்திற்குள் கண்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

உலகம் முழுக்க பார்வை இழப்பை தடுப்பதற்கு கண் தானம் பயன்படுகிறது. இதன் மகத்துவத்தை மக்களிடம் வலியுறுத்துவதற்காக  தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா ஒவ்வொரு ஆண்டும் ஆண்டும் 25 ஆகஸ்ட் முதல் 8 செப்டம்பர் வரை கொண்டாடப்படுகிறது. கண் தானத்தின் அவசியத்தையும் அதன் மதிப்பையும் வலியுறுத்தும் வகையில் கண் மருத்துவர் டாக்டர் பிரகாஷ் எழுதியிருக்கும் சிறு கவிதை இது.

கண்கள் திறவாயோ

புதைத்து அழிக்க வேண்டாம் கண்களை

விதைத்து அறுவடை செய்வோம், கண்பார்வை.

எரித்து சாம்பலாக்க வேண்டாம் விழிகளை

மரித்த பின்பும் காணலாம் உலகத்தை.

கருவிழி பாதிப்பால் பார்வை இழந்தோர்க்கு

இருவிழி வழங்குவோம் கண் தானமாய்.

“பார்த்த ஞாபகம் இல்லையோ” என்று

பறவை ஒன்று கேட்டது.

பிறவிக் குறையால் குருடானான் சிறுவன்;

தொழிற் சாலையில் காயமுற்றான் இளைஞன்;

கதிர் அறுப்பில் கருவிழி இழந்தாள் பெண்மணி;

மூப்பில் பார்வை துறந்தான் வயோதிகன்.

காரணிகள் பலவுண்டு, கோளாறு ஒன்றே,

கருவிழிகள் இழந்தன கண்பார்வை என்றே,

“கண்கள் திறவாயோ” என்று ஏங்குவோர்க்கே

கண்தானம் செய்து பார்வை அளிப்போம் நன்றே.

விழிப்புணர்வு நன்கு பரவட்டும்

விழிகளை வாரியே வழங்கட்டும்.

இருக்கும் போது பதிவு செய்யுங்கள்

இறந்த பின்பு கொடுத்துச் செல்லுங்கள்.

  • Dr. M.V.S. பிரகாஷ், இயக்குநர் (ஓய்வு)

அரசு கண் மருத்துவமனை, எழும்பூர், சென்னை – 8.

Leave a Comment