குழந்தைகளுக்கு குஷியான விளையாட்டுகள்..!
சாக்லேட், பொம்மை, விளையாட்டு ஆகிய மூன்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. இவற்றை யார் எப்போதும் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்கள். அதிலும், முக்கியமாய் குழந்தைகளின் விளையாட்டு என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அனைத்தையும் மறந்து அதிலேயே மூழ்கிப்போவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் தண்ணீர் விளையாட்டுகளிலும் அசத்துகின்றனர் என்பதுதான் வியப்பான செய்தி. ஆம், மேலை நாடுகளில் உள்ள குழந்தைகள் விதவிதமான தண்ணீர் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள். தண்ணீர் விளையாட்டுகள் என்றால் நீச்சல், படகுப்போட்டி, தண்ணீர் ஜிம்னாஸ்டிக், ஐஸ் சிற்பம் போன்றவையல்ல. வீட்டிலேயே எளிதாக விளையாடி மகிழும் வேடிக்கை விளையாட்டுகள் ஆகும்.
தண்ணீர் குண்டு
சிறிய பலூன்களில் நீர் நிரப்பிக் கொண்டு, மற்றவரை குறிபார்த்து எறிந்து விளையாடுவது தண்ணீர் குண்டு அல்லது தண்ணீர் பலூன் விளையாட்டு என அழைக்கப்படுகிறது. ஒருவர் சரியாக எறிந்து மற்றவரை ‘அவுட்’ ஆக்கிவிட்டால், அவர் பின்னர் பலூன் எறிவார். மற்றவர்கள் தப்பித்து ஓட வேண்டும். இதேபோல, மற்றொரு விளையாட்டு உண்டு. பலூன்களில் ஊசியால் குத்தி ஓட்டை போட்டுவிட்டு நீரால் நிரப்ப வேண்டும். பின்னர் சிறுவர்கள் ஒவ்வொருவர் கையிலும் பலூனைக் கொடுத்துவிட்டு நீரைத் துளைவழியே அழுத்தி வெளியேற்றச் செய்ய வேண்டும். யார் விரைவாக தண்ணீரை வெளியேற்றுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர். யார் கடைசியாக தண்ணீரை மிச்சம் வைத்திருக்கிறாரோ, அவர் தோற்றவர் ஆவார். இந்த தண்ணீரை மற்றவர் மேல் பீய்ச்சி அடித்தும் விளையாடி மகிழலாம்.
நீர் நிரப்புதல்
பாட்டிலில் நீர் நிரப்பி விளையாடுவதுபோல, பஞ்சு மூலம் நீர் உறிஞ்சி நிரப்பி விளையாடும் விளையாட்டு மேலை நாடுகளில் பிரபலம். பெரிய வாளி ஒன்றில் நீர் வைத்துவிட்டு, ஆளுக்கொரு துண்டு பஞ்சு கொடுத்துவிடுவார்கள். அதை நீரில் அமிழ்த்தி எடுத்துச் சென்று தனக்குரிய வாளியில் பிழிந்து நீரை நிரப்ப வேண்டும். யார் முதலில் தனது வாளியை நிரப்புகிறார்களோ அவரே வெற்றிபெற்றவர் ஆவார். குழுவாக விளையாடக்கூடிய மற்றொரு நீர் நிரப்பும் விளையாட்டு உண்டு.
ஒவ்வொரு குழுவுக்கும் மூன்று முதல் 5பேராக பிரித்துக் கொள்ளலாம். பின்பு, அவர்களை நேர் வரிசையில், சிறிது தூர இடைவெளியில் நிறுத்தி வைக்கலாம். ஒருபுறம் பெரிய பாத்திரத்தில் நீர் வைத்துவிட்டு ஒவ்வொரு குழுவுக்கும் சிறிய கோப்பை அல்லது டம்ளர் கொடுக்க வேண்டும். ஒருவர் பாத்திரத்தில் இருந்து தண்ணீர் எடுத்துச் சென்று அடுத்தவருக்கு கொடுக்க, அவர் மற்றவருக்கு மாற்றிவிட, இறுதியாக நிற்பவர் தங்களுக்கான காலி பாத்திரத்தை நிரப்ப வேண்டும். படத்தில் உள்ளதுபோல நெருக்கமாக நின்று பின்னால் இருப்பவருக்கு தண்ணீரை மாற்றியும் விளையாடலாம். எந்தக் குழு விரைவாகச் செயல்பட்டு தங்கள் பாத்திரத்தை நீரால் நிரப்புகிறார்களோ, அந்த குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
நனையாமல் தப்பித்தல்…
புல்தரைக்கு நீர்ப்பாய்ச்சும் துளையுள்ள குழாய் இருந்தால் அல்லது தண்ணீர் தெளிக்கும் ஸ்பிரேக்கள் இருந்தால் இந்த விளையாட்டு விளையாடலாம். தண்ணீர் துப்பாக்கிகள் இருந்தாலும் இதை விளையாடலாம். முதலில் நீரைப் பீய்ச்சி அடிக்கும் குழாயை இயக்க ஒருவரை நியமித்துக்கொள்ள வேண்டும் அல்லது தண்ணீர் ஸ்பிரே, தண்ணீர் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களை குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக நிற்க வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் ஸ்பிரே அல்லது துப்பாக்கி மூலம் தண்ணீரைத் தெளிக்க தயாராக நிற்க வேண்டும். தண்ணீர் தெறிக்கும் தூரத்தில் எல்லைக்கோடு வரைந்து, அதில் தண்ணீரில் நனையாமல் ஓடிக் கடப்பதே போட்டியாக வைத்து விளையாட வேண்டும். விசில் அடிக்கப்பட்டதும் மற்றவர்கள் தண்ணீரைத் தெளிக்க, போட்டியாளர் தண்ணீர் தன்மேல் படாமல் குறிப்பிட்ட தூரம் ஓடிக் கடக்க வேண்டும். நனையாமல் ஒருவர் இலக்கை அடைந்தால் அவர் வெற்றி பெற்றவர் ஆவார்.
தண்ணீர் வாலிபால்
ஒரு குழுவுக்கு 5 அல்லது 7 பேராகப் பிரித்துக்கொள்ள வேண்டும். ஏராளமான பலூன்களில் சிறிதளவு தண்ணீர் நிரப்பி ஊதி வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை முழு அழுத்தத்தில் நிரப்பாமல் சிறிது குறைவாக நிரப்பினால் எளிதில் உடையாமல் இருக்கும். குழுவில் ஒருவர் பலூனை தங்கள் பக்கத்தில் இருந்து வலையைத் தாண்டி உயரமாக தூக்கி எறிய வேண்டும். எதிர்திசையில் இருப்பவர்கள் இரண்டிரண்டு பேராகச் சேர்ந்து துண்டின் நுனிகளைப் பிடித்தவாறு, பலூன் உடையாமல் கேட்ச் பிடிக்க வேண்டும். பலூன் கீழே விழுந்து உடைந்தால் எதிரணிக்கு புள்ளி வழங்கப்படும். துண்டினுள் உடைந்தால் பலூனை மாற்றிக்கொள்ளலாம். யார் நிறைய புள்ளிகள் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்து வெற்றியைத் தீர்மானிக்கலாம்.
பலூன் பிடித்தல்
நமது ஊர்களில் நடத்தப்படும் இசை இருக்கை (மியூசிக்கல் சேர்) போன்ற விளையாட்டாக இதை விளையாடலாம். முதலில் பலூன்களில் நீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். பெரிய வட்டத்தில் சிறுவர்களைச் சிறிது இடைவெளியில் நிற்கவைக்க வேண்டும். பலூனை அடுத்தவர் கைகளுக்கு தூக்கி வீசச் செய்ய வேண்டும். யார் பலூனை உடைக்கிறார்களோ அவர்கள் வெளியேறிவிட வேண்டும். அதேபோல மற்றவர் கைகளுக்கு பலூனை எறியாமல், தூரமாக வீசினாலும் அவர்களும் வெளியேற வேண்டும். இறுதியில் யார் வெளியேறாமல் நிற்கிறாரோ, அவர்தான் வெற்றியாளர் ஆவார்.
இந்த நீர் விளையாட்டுகளை விளையாடும் முன்பு, ஓய்வுநேர உடைக்கு அல்லது குளியல் உடைக்கு மாறிக்கொள்ளுங்கள். வீட்டில் தம்பி பாப்பா இருந்தால் குளியல் போடும் முன்பாக, இந்த தண்ணீர் விளையாட்டுகளை விளையாடி மகிழலாம். தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் மட்டும் இந்த விளையாட்டுகளை விளையாடி மகிழலாம்.
