என்ன செய்தார் மேயர் சைதை துரைசாமி – 411
சென்னை நகருக்கு கருப்புப் புள்ளியாக கூவம் நதி இருந்துவருகிறது. இதனை சீர்படுத்துவதற்கு மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த திட்டங்கள் இன்னமும் முழுமையடையவில்லை. கழிவு நீர் ஆறுகளை சிங்கப்பூர் சிறப்பாக கட்டுப்படுத்தியது போலவே அமெரிக்காவும் செய்து முடித்திருப்பதை அறிந்து, மேயர் சைதை துரைசாமி பார்வையிட்டார்.
சான் ஆன்டனியோ நகரின் லுமாஸ் மோன்மென்ட் ஆறு, கூவத்தை விட மோசமான நிலையில் முன்பு இருந்துள்ளது. ஆனால், சிறப்பான திட்டங்கள் மூலம் இந்த ஆறும், இதனை ஒட்டிய பகுதிகளும் முறையாக மேம்படுத்தப்பட்டு இன்று சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது என்பதை அறிந்தார். அந்த ஆற்றை சீரமைப்பு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டார்.
மழை நீர், கழிவுநீர் மேலாண்மை குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். அமெரிக்காவில் வாட்டர் டேபிள் இருக்கும் பக்கத்தில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்படுவதால், பருவ மழையிலும் தண்ணீர் தேக்கம் அடைவதில்லை.
மேலும் நடைபாதையில் பாதசாரிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. நடைபாதைகள் அகலமாகவும், வேலைப்பாட்டுடனும், பாதுகாப்பை கருத்தில்கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன. சக்கர நாற்காலியில் பயணம் செய்யும் மாற்றுத் திறனாளிகள்கூட சுலபமாக பயணிக்கும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை ஓரங்களில் பெட்டிக் கடை, ஆக்கிரமிப்பு கிடையாது என்பதுடன் சாலை ஓரங்களில் வாகனம் நிறுத்தப்படுவதே இல்லை.
கழிவுநீர் அகற்றும் நிலையம், நகரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. குறைந்த நபர்களுடன் செயல்படும் இந்த தானியங்கி நிலையமானது தினமும் 250 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கையாள்கிறது. சுத்திகரிக்கப்படும் நீர் ஆற்றில் விடப்படுகிறது. மறுசுழற்சி செய்யப்பட்ட நீர், பெரிய தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவை போன்ற மாநகர செயல்பாடுகள் அனைத்தையும் பார்வையிட்டுத் திரும்பினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.












