பிள்ளைகள் ஞாபக சக்திக்கு, உடல் வளர்ச்சிக்கு, முதியவர்களின் சோர்வு போக்குவதற்கு, இளையவர்களின் முகப்பொலிவுக்கு என எதற்கெடுத்தாலும் வைட்டமின் மாத்திரை, டானிக் உபயோகிப்பது நிறைய வீடுகளில் அத்தியாவசியமாகிவிட்டது. வேறு ஒரு நோய்க்காக மருத்துவர் பரிந்துரைத்த வைட்டமின் மாத்திரைகளை, அந்த நோய் போன பிறகும் தொடர்கிறார்கள்.
தாங்களாக வைட்டமின் மாத்திரை போடுவது பல நேரங்களில் ஆபத்தான நோயை உருவாக்கலாம். குறிப்பாக நிரிழிவு நோயாளிகள் தேவையின்றி வைட்டமின் இ, வைட்டமின் பி12 எடுத்துக்கொண்டால் இதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகரிக்கிறது. உடல் சோர்வுக்கு உண்மையான காரணம் கண்டறியாமல் வைட்டமின் எடுத்துக்கொள்வதும் ஆபத்தாகும்.
பொதுவாக ரத்தசோகை, ஜீரணக் குறைபாடு, குடல் நோய், நீரிழிவு, தைராய்டு போன்ற பல்வேறு காரணங்களால் உடல் சோர்வு ஏற்படுதுவண்டு. வைட்டமின் டி3, வைட்டமின் பி12 குறை காரணமாகவும் உடல் சோர்வு ஏற்படலாம். மேலும் சரியான தூக்கமின்மை, உடல் பருமன், ஹார்மோன் பிரச்னை, மன அழுத்தம், பசியின்மை காரணமாகவும் உடல் சோர்வு ஏற்படலாம்.
உரிய பரிசோதனை செய்து சரியான காரணம் எதுவென கண்டறியாமல் வைட்டமின் மாத்திரை மூலம் தீர்வு காணமுடியும் என்று நினைப்பது நோயை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம். ஆகவே, வைட்டமின் மாத்திரையை நண்பனாக மட்டும் பார்க்காதீங்க, தேவையில்லாமல் எடுத்துக்கொண்டால் உடலுக்கு வில்லன் ஆகிவிடும்.